மிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடிகர் விஜய் வெற்றி கரமாக நடத்திமுடித்துள்ள நிலையில், மாநாட்டிற்கு வந்த இளைஞர்களில் 4 பேர் பல்வேறு விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. த.வெ.க. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவரான உறையூர் நெச வாளர் காலனியைச் சேர்ந்த கலை (என்ற) கலைக்கோவன், இளைஞர் அணித் தலைவரான பெரியசெட்டித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் சாலை விபத்தில் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து விஜய் அறிந்திருந்தும், அவர்களின் இறப்பிற்கு ஓர் இரங்கல்கூடத் தெரிவிக்காமல் மாநாட்டை நடத்தியதால் அவர்களின் குடும்பத்தினர் பெரிதும் மனவருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இரண்டு நிர்வாகிகளின் உடலுக்கும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தவந்த அவரிடம், கலைக்கோவன் உறவினர்கள், உயிரிழந்த நிர்வாகிகளின் இறப்புக்கு விஜய் இரங்கல் தெரிவிக்காததற்கு வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர். மேலும் கலையின் நண்பர்கள், "உடலைப் பார்க்க புஸ்ஸி வரக்கூடாது' என்று ஆவேசமாக அவரை அடிக்கப் பாய்ந்தனர்.

Advertisment

dd

கலைக்கோவனின் தாயார், "வருகின்ற தேர்தலில் விஜய்க்குத்தான் என்னுடைய ஓட்டு என்று கூறிவிட்டுச் சென்றான். ஆனால் அவன் திரும்பி பிணமாக வந்துள்ளான்'' எனக்கூறி அழுதார். அவரது உறவினர்கள், "கலைக் கோவன் சிறு வயது முதலே விஜய் ரசிகராக இருந்தவர். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து விஜய் நற்பணி மன்றத்துக்கும், அவருடைய கட்சிக்கும் சிறப்பாக செயலாற்றி யுள்ளார். கட்சி மாநாட்டுக்கு சென்றபோது உயிரிழந்தவர்களுக்கு மாநாட்டு மேடையில் அனுதாபம் கூடத் தெரிவிக்கவில்லை. இன்றும் ஒரு அறிக்கைகூடக் கட்சித் தலைவர் வெளியிடவில்லை'' என்று கொந் தளித்தார்.

த.வெ.க. மாநாட்டில் விஜய் வாசித்த கட்சியின் கொள்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் ஆலோசகர் தான் தயாரித்ததாகவும், அவரது அறிவுறுத்தலில்தான் புஸ்ஸி ஆனந்த், உயிரிழந்த த.வெ.க. நிர்வாகிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

2016ஆம் ஆண்டில், மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று பா.ம.க.வுக்கு தேர்தல் பிரச்சார வியூ கத்தை வகுத்தவர் இந்த ஜான்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இவர் ஐ.நா.வில் பருவநிலை மாற்றத்திற்கான ஆலோசகராகவும், ஆப்பிள் நிறுவனத்தில் புரமோஷன் அதிகாரியாகவும் பணியாற்றிவிட்டு, மகராஷ்டிராவில் சரத்பவாருக்கு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர். தற்போது மும்பையில் ஒரு விளம்பர நிறுவனத்தை நடத்திவரும் நிலையில்... விஜய் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக உருவெடுத்துள்ளார்.

-துரை.மகேஷ்

Advertisment