எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல், கற்பனை வளத்துடன், தானே வார்த்தைகளைக் கோத்து ஒப்பாரிப் பாடல்களைப் பாடி கிராம மக்கள் பலரையும் ஆச்சர்யப்பட வைக்கிறான் அந்த 13 வயதே ஆன சிறுவன்.
திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகளின் பெயர் ராஜேஸ்வரி. 10-ஆம் வகுப்பு வரை படித்த ராஜேஸ்வரியைக் கலசப் பாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு திருமணம் செய்துவைத்தனர். ராஜ்குமார், திலீபன், ஸ்ரீமதி என்கிற மூன்று குழந்தைகள் இந்தத் தம்பதிகளுக்கு உள்ளனர். இந்த நிலையில் சிவகுமாரின் தீவிர குடிப்பழக்கம் குடும்பத்தைப் பிரிக்க, தனது 3 பிள்ளைகளோடும் தாய் வீட்டுக்கே வந்து செட்டில் ஆகிவிட்டார் ராஜேஸ்வரி.
கொத்து வேலைக்குப் போனால்தான் வீட்டில் சாப்பாடு என்ற நிலை. தங்களுக்கு சோறு போட தாய் படும் சிரமத்தைப் பார்த்து மனம் நொந்து போய் மனதிற்குள் அழத் தொடங்கிய திலீபன், தனது சோகத்தை பாடலாகப் பாடத் தொடங்கினான். அதுதான் அவனை ஒப்பாரிப் பாடகனாக ஆக்கியிருக்கிறது.
இது குறித்து நாம் திலீபனிடம் கேட்டபோது, "அக்கம்பக்க ஊர்கள்ல யாராவது செத் துட்டா, ஆரம்பத்தில் எங்க பாட்டி அஞ்சலையை ஒப்பாரி பாடக் கூப்பிடுவாங்க. அப்போ நான் வீட்ல விளையாடிக்கிட்டு இருப்பேன். நீயும் என்கூட வாடான்னு துணைக்கு எங்க பாட்டி என்னையும் கூப்பிட்டுப் போகும். அப்ப எங்க பாட்டி பாடறதைக் கேட்டுக் கேட்டு நானும் அதே மாதிரி பாடிக்கிட்டு இருப்பேன். என் குரலும், நான் பாடும் விதமும் எல்லாருக்கும் புடிச்சிப் போயிடிச்சி. அதுலயிருந்து அப்படியே பாடத் தொடங்கிட்டேன். ஒப்பாரிப் பாட்டு பாடப் போனதுமே, இறந்தது யார்? அவரோட பேரு, அவுங்க அப்பா, தாத்தா பேரு, ஊர் பேரு, வயசுன்னு எல்லா விபரங்களையும் கேட்டுக்குவேன். அவரைப் பத்தி ஏதாவது ஸ்பெஷலா சொன்னாங்கன்னா அதையும் மனசுல வச்சிக்கிட்டு, நானே பாட்டை எடுத்து, இறந்தவங்களோட இழப்பை அவங்க மகன், மகள் உள்ளிட்ட சொந்த பந்தங்கள் பாடறதைப் போல மெட்டுக்கட்டி, ராகம் கூட்டி பாடுவேன். இறந்தது இளைஞர்கள்னா அதுக்கு ஏத்த மாதிரி பாடுவேன். கூடவே அதுக்கு ஏத்த மாதிரி தாளமும் வாசிப்பேன்''”என்று... தான் பாட வந்த கதையை விவரித்ததோடு....
"ஒரு ஊர்ல பாடக் கூப்பிட்டாங்க. ஆக்ஸிடெண்டாகி அப்பா அம்மா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. அவுங்களோட 5 வயசுப் பையன் தனியா அழுதுக்கிட்டு இருந்தான். "நான் இனிமே இந்த உலகத்தில் எப்படி வாழப்போறேன்னு தெரியலயே...'ன்னு அவன் நிலையில் இருந்து நான் பாடுனப்ப... எனக்கே கண்ல தண்ணி வந்துடுச்சி. இதைக்கேட்டு எல்லோரும் கதறி அழுதாங்க. இதுபோல் ஒப்பாரி பாடப்போனால், இறந்தவரை அடக்கம் செய்யும் வரை பாடணும். இறந்தவங்க பெரிய குடும்பத்து ஆளாயிருந்தா அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் தருவாங்க, ஏழைன்னா கம்மியா தருவாங்க. அதுக்காக நான் பாடறதை குறைச்சிக்கறதில்லண்ணா, எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் பாடுவேன்''’என்ற திலீபனின் பக்குவம் ஆச்சரியம் தந்தது.
திலீபன் தாய் மகேஸ்வரி நம்மிடம், "எனக்கு மூணு பசங்க. மூணு பேருமே கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கறாங்க. திலீபன் இந்த வருசம் 9-ஆவது போயிருக்கான். நான் இங்க பக்கத்துல இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்துல ஆயாவா வேலை செய்யறேன். முதல்ல திலீபனை இந்த வயசுலயே பாட்டுப் பாட அனுப்பனுமான்னு தயங்கி, "படிப்புதான்டா முக்கியம்'னு சொன்னேன். "நான் படிக்கறதை நிறுத்தமாட்டேம்மா'ன்னு அவெஞ்சொன்னதால் சரின்னு விட்டுட்டேன். அவனால் நாங்க நல்ல சாப்பாடு சாப்பிடறோம்''”என்றார் பெருமிதமாய்.
திலீபனின் சின்ன தாத்தா மணியோ, "என் மகன் நடத்தற ஃபேண்ட் செட் குழுவில்தான் அவன் முதன்முதலா பாடி னான். ஒப்பாரிங்கிறது சாதாரண விசயம் இல்லை. இறந்தவங்க குடும்பத்தோட துயரத்தை, அழுகையை உள்வாங்கி சோகமா பாடணும். அது முகத்திலயும் தெரி யணும். அதில் திலீபன் பிச்சி வாங்கறான்'' என்கிறார் உற்சாகமாய்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பகுதிகளுக்கும் சென்று இதுவரை 100-க்கும் அதிகமான இறப்புகளில் ஒப்பாரி பாடியிருக்கும் திலீபன், "சரிண்ணே ஸ்கூலுக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன்''’என்றபடி புத்தகப் பையோடு தனது அண்ணன், தங்கைகளோடு பள்ளியை நோக்கி நடையைக் கட்டினான்.
"நாங்கள் எங்கள் உறவுகளை இழந்து அனுபவிக்கும் மரண வலியைத் துடைப்பது போல் இருக்கிறது திலீபனின் கண்ணீர்ப் பாடல்'’என்கிறார்கள், அவன் ஒப்பாரியை அனுபவித்தவர்கள்.
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்