"தினகரன் வசமிருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களை அணி மாற்றுவதற்கு 2019, ஜனவரி மாதத்தை இறுதித் தேதியாக குறித்து வைத்துள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி' என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
""டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு ஹவுசில் அமர்ந்து அவரை சந்திக்க வந்த எம்.பி.க்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜியை புகழ்ந்து தள்ளினார். அவருடன் வந்திருந்த சேலம் இளங்கோவனையும் எடப்பாடியின் சம்பந்தியும் வழக்கறிஞருமான மாணிக்கத்தையும் கைகாட்டி "இவர்கள் நாள்கணக்காக டெல்லியில் உட்கார்ந்து சட்ட வேலைகளைப் பார்த்துக்கொண்டார்கள். இவர்கள் கடுமையாக உழைத்தார்கள். கடுமையான முயற்சிக்குப் பிறகும் நீதியரசர் சுந்தர், சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவுக்கெதிராக தீர்ப்பளித்துவிட்டார்' என எம்.பி.க்களிடம் வருத்தப்பட்டார் எடப்பாடி'' என்கிறார் அ.தி.மு.க.வின் எம்.பி. ஒருவர்.
டெல்லியிலிருந்து இளங்கோவனால் தமிழக அரசுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ. வழக்கில் வாதிட அழைத்துவரப்பட்டவர் வழக்கறிஞரான முகுல் ரோகித்கி. அவரது வாதங்களைத்தான் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வரிக்கு வரி மேற்கோள்காட்டியிருந்தார். ""தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்தது எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பதற்காகத்தான். எனவே இவர்கள் கட்சித் தாவல் தடைச்சட்டப்படி தண்டிக்க தகுதியானவர்கள்'' என சபாநாயகரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி வாதம் செய்தார் முகுல் ரோகித்கி. அந்த வாதத்தை அவர் எழுத்துப்பூர்வமாகவும் கொடுத்த நிலையில்... அதனை வெட்டி ஒட்டியது மாதிரி இருந்தது, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பு.
மற்றொரு நீதிபதி சுந்தர் எழுதிய தீர்ப்பில், ""முகுல் ரோகித்கியின் வாதம் கற்பனையான வாதம் என வர்ணித்திருந்தார்'' என்கிறார்கள் தீர்ப்பைப் பற்றிப் பேசும் சட்ட வல்லுநர்கள்.
நீதியரசர் இந்திராபானர்ஜி, எடப்பாடிக்குச் சாதகமாக தீர்ப்பளித்திருக்காவிட்டால், எடப்பாடி அரசு கவிழ்ந்துபோயிருக்கும் என மத்திய உளவுத்துறை, மோடி அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. எடப்பாடி இந்தத் தீர்ப்பை நினைத்துப் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தார். ஏதாவதொரு வகையில் யாராவது உதவி செய்யமாட்டார்களா என எல்லோரிடமும் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். வருகிற ஜூலை மாதம் கூடும் சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜியம் எனப்படும் மூத்த நீதிபதிகளின் குழு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜியை சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப் போகிறது. அந்தத் தேர்வை மத்திய அரசு ஏற்கவேண்டும்... எனவே இந்திரா பானர்ஜி விசாரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மத்திய அரசை தலையிட வைக்க முடியுமா? என சேலம் இளங்கோவனையும், சம்பந்தி மாணிக்கத்தையும் டெல்லிக்கு அனுப்பிவைத்தார் எடப்பாடி என்கிறது மத்திய உளவுத்துறை.
""எவ்வளவு பெரிய ஊழல் செய்தாலும் எடப்பாடி அரசு நீடிப்பதையே பா.ஜ.க. விரும்புகிறது. இந்தியா முழுவதும் எந்த மாநிலத்தில் பா.ஜ.க. தேர்தலை சந்தித்தாலும் எடப்பாடி தரப்பிலிருந்து கணிசமான தேர்தல் நிதி பா.ஜ.க.வுக்கு தரப்படுகிறது. அப்படித்தான் கர்நாடக மாநிலத் தேர்தலுக்கு எடப்பாடி 500 கோடி ரூபாய் கொடுத்தார். 2019-ஆம் ஆண்டு எம்.பி. தேர்தல் வரை பா.ஜ.க., எடப்பாடி அரசுக்கு எந்தத் தொந்தரவும் தராது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் ரஜினியோடு தேர்தல் களத்தைச் சந்திக்க பா.ஜ.க. வியூகம் வகுத்துவருகிறது'' என்கிறார்கள் அக்கட்சியினர்.
அந்தத் தெம்பில் தினகரன் வசமிருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களை இழுக்க தொடர்ந்து முயற்சி செய்துவந்த இ.பி.எஸ்., உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு அந்த முயற்சியில் பெற்றிபெற ஆரம்பித்துவிட்டார். தினகரன் அணியில் இருக்கும் 2 பெண் எம்.எல்.ஏ.க்கள் உட்பட மூன்று எம்.எல்.ஏ.க்கள், இ.பி.எஸ். வலையில் வீழ்ந்துள்ளனர். திவாகரனும் தினகரன் வசமிருக்கும் எம்.எல்.ஏ.க்களை வளைப்பதில், இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு வெற்றிபெற்றிருக்கிறார். தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன் உட்பட 6 எம்.எல்.ஏ.க்களை திவாகரன் தனது கண்ட்ரோலுக்கு கொண்டுவந்துவிட்டார் என்கிறது மன்னார்குடி வட்டாரம். தினகரன் அணி இரண்டாக உடைகிறதா என கேட்டதற்கு, ""எங்கள் அணியில் உள்ள ஒரு எம்.எல்.ஏ.வைக் கூட இ.பி.எஸ். அணியினர் இழுக்க முடியாது'' என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.
தங்க தமிழ்ச்செல்வன், "நான் வழக்கை வாபஸ் வாங்குகிறேன். இடைத்தேர்தலை சந்திக்கிறேன்' என அறிவித்ததில் டி.டி.வி. தினகரனுக்கு உடன்பாடில்லை. இது தொடர்பான விவாதம் டி.டி.வி. தினகரன் முன்பு நடந்தபோது, வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். தங்க தமிழ்ச்செல்வனின் முடிவை எதிர்த்து வெற்றிவேல் பேட்டியே கொடுத்தார் என தினகரன் அணியின் உள்குத்துகளைப் பற்றி விளக்குகிறார்கள் அந்த அணியைச் சேர்ந்தவர்கள்.
இந்தத் தீர்ப்பும், தொடர்ந்து மாதக்கணக்கில் நீடித்துவரும் சட்ட நடைமுறைகளும் தினகரன் அணியை பலவீனப்படுத்தியுள்ளது. அதிலிருந்து தனது அணியைக் காப்பாற்றப் போராடுகிறார் தினகரன்.
""உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி, பிறகு சுப்ரீம்கோர்ட் என 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் முடிவு வரும் என எதிர்பார்க்கப்படும் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், திவாகரனின் கட்சியை காலி செய்து, அதனை அ.தி.மு.க.வுடன் இணைக்கும் விழா நடத்த திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. அதில் தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களில் பலரும் இருப்பார்கள்'' என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.
-தாமோதரன் பிரகாஷ், சக்திவேல்