இளம் குடும்பத் தலைவிகள் மொபைலில் ரம்மி, கேம்ஸ், இணையதள எம்.எல்.எம். போன்ற சூதாட்டங்களில் சிக்கி பணத்தை இழப்பதோடு, அப்பணத்தை கணவருக்கோ , குடும்பத்துக்கோ தெரியாமல் தயார் செய்யவேண்டும் என்ற நிலையில் அதுமுடியாமல் போய் உயிரை மாய்த்துக் கொள்வது ஒருபுறமென்றால், மற்றொருபுறம் பணத்துக்காக மீளமுடியாத சாத்தான்களிடம் பெண்கள் சிக்குவதாகக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திர கோட்டை காவல் சரகம் பூவரசகுடி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார், எதிர்வீட்டில் இருந்த ஸ்ரீகாவை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டார் சரத்குமார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது மகளின் இரண்டாவது பிறந்தநாளுக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டுச் சென்றுள்ளார்.
எப்போதும் மொபைலும் கையுமாகவே இருந்துள்ளார் ஸ்ரீகா. சிலநேரங்களில் மகள் பசிக்காக அழும்போதும் மொபைலும் கையுமாக இருந்துள்ளார். அதேநேரத்தில் சரத்குமாரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் குறைவதைப் பார்த்து மனைவியிடம் கேட்டுள்ளார். தன் கணவரிடம் தயங்கித் தயங்கி "ஆன்லைனில் "ட்ரீம் 11' விளையாடினேன், அதில் பணம் போய்விட்டது' எனச் சொல்லி அழுதுள்ளார். "போனது போய்டுச்சி விடு... இனிமே விளையாடுன அவ்ளோதான்' என ஆறுதலாகவும், மிரட்டலாகவும் சொல்லியுள்ளார். அப்போது அவர் தலையாட்டினாலும், ஆன்லைன் என்னும் சாத்தான் அவரை விடவில்லை, அவரை மீண்டும் விளையாட இழுத்துள்ளது.
கணவன் கண்டித்த பிறகும், விட்ட பணத்தைப் பிடிப்போம் என ஸ்ரீகா மீண்டும் "ட்ரீம் 11' விளையாடத் தொடங்கியுள்ளார். அடுத்து 70 ஆயிரம் ரூபாய் இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவன் வெளிநாட்டில் கூலி வேலை செய்து அனுப்பிய பணம் பேங்க் அக்கவுண்டில் இல்லாததை அறிந்து, மனைவி யிடம் விசாரித்து மீண்டும் கண்டித்துள்ளார். இதனால் ஸ்ரீகா மனஉளைச்சலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மே 31ஆம் தேதி கணவர் வீட்டின் எதிரே உள்ள தன் பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள் ளார் ஸ்ரீகா. அவரது காலுக்குக் கீழே குழந்தை இறந்த நிலையில் பெட்ஷீட்டில் மூடப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கண்ணீர்விட்டுக் கதறியுள்ளனர். தகவலறிந்து வல்லத்திரகோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்துகிடந்த சிறுமியின் உடலை மீட்டதுடன், தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்த ஸ்ரீகாவின் உடலையும் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் தொடர்விசாரணையில் "ஆன்லைன் விளையாட்டில் தொடர்ந்து பணத்தை இழந்ததற்காக, தன் குடும் பத்தினர் தன்மீது கோபப்படுவார் களே என்று நினைத்து குழந்தையைக் கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்' என்கின்றனர்.
சம்பவம் 2:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார் இந்த இளம்பெண். கடந்த சில மாதங்களில் மட்டும் மொபைல் வழியாக விளை யாடிய ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.1 லட்சத்து இருபதாயிரம் வரை இழந்து கடன்பட்டுள்ளார். இந்த 1.2 லட்ச ரூபாய் பணத்தை குடும்பத்துக்குத் தெரிந்த நண்பர்களிடம் கடன் வாங்கியதை அறிந்த குடும்ப உறுப்பினர்கள், “நம்ப பொண்ணு இப்படி செய்யாதே என்னவா இருக்கும்” என விசாரித்தபோது, ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்திருப்பது தெரிந்து அதிர்ச்சியாகியுள்ளனர். "படிச்ச பொண்ணு இப்படியா செய்வ?' என கண்டித்துள்ளனர். அதோடு, அவரிடமிருந்து மொபைல்போனைப் பிடுங்கிக்கொண்டுள்ளனர். "அதை விளையாடு பவர்களையும், அதிலிருந்து மீண்டவர்களும் இழந்த பணத்தை மீட்கவேண்டும் என மீண்டும், மீண்டும் சூதாட இழுப்பதுதான் இந்த விளையாட்டுகளின் ஆபத்து' எனச் சொல் கிறார்கள்.
சம்பவம் 3:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சியைச் சேர்ந்த இல்லத்தரசி அவர். தொழில் செய்யும் கணவர், மேல்நிலைப்பள்ளி செல்லும் பிள்ளைகள் என அழகான குடும்பம். வீட்டில் தனியாக இருந்துவருகிறார். மனைவிக்கு விலையுயர்ந்த ஆன்ட்ராய்ட் செல்போன் வாங்கித் தந்துள்ளார் கணவர். அதில் இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் கணக்கு தொடங்கி ரீல்ஸ்கள் பார்க்கத் துவங்கியுள்ளார். சில மாதங்களில் அவரின் போக்கு மாறத் தொடங்கியுள்ளது, இரவு நேரங்களில் மொபைலில் அதிக நேரம் இருந்துள்ளார். என்னம்மா செய்யற? என கணவர் கேட்டபோது, ரீல்ஸ் பார்ப்ப தாகச் சொல்லியுள்ளார். மனைவி சொன்னதை அப்படியே நம்பியுள்ளார். ஒரே மாதத்தில் 2.10 லட்சம் ரூபாய் அப்பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து காலியாகியிருந்தது. அதில் சுமார் 1.5 லட்சம் உறவினர்களிடம் கடன் வாங்கியது. பணம் தந்தவர்கள் திரும்பக் கேட்க, அவரால் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
கணவருக்குத் தெரியாமல் சைபர் க்ரைம் காவல்நிலையத்திற்கு சென்று புகார் தந்துள்ளார். எப்படி பணம் போச்சு என போலீஸார் விசாரித்தபோது, இணையத்தில் ஒரு நிறுவனம் எங்களிடம் பொருள் வாங்கி அதனை எங்கள் வழியாக விற்றால் இரட்டை லாபம் கிடைக்கும் எனச்சொல்லியுள்ளனர். அதனை நம்பி முதல்கட்டமாக 7 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கியுள்ளார். அடுத்த 12 மணி நேரத்தில் உங்க பொருள் வித்துடுச்சி, உங்களுக்கு 15 ஆயிரம் லாபம் என்றுள்ளனர். ஆஹா, 12 மணி நேரத்தில் டபுள் மடங்கு லாபம் என நினைத்த அப்பெண், அடுத்த ஸ்டேஜாக 25 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார். மறுநாள் இரட்டிப்பு லாபம் என்றுள்ளார்கள்.
இதுபோதும் என அவர் மனம் நினைத்த போது, இந்த பணம் உங்க கைக்கு வருவதற்கு ஒரு மாதமாகும், உங்க வங்கிக் கணக்கைத் தாருங்கள் எனச்சொல்லி டெலிகிராம் வழியாகப் பேசியுள்ளனர். இவரும் தனது வங்கிக் கணக்குகள், ஃபான் எண் போன்றவற்றை இணைத்துள் ளார். அடுத்ததாக இதில் கோல்டன் மெம்ப ராக சேர்ந்தால் 3 மடங்கு லாபம் என ஆசை காட்டியுள்ளார். இதற்கு 50 ஆயிரம் கட்டச்சொல்ல... இவரும் அதற்கு ஆசைப்பட்டு உறவினர்கள், நண்பர்களிடம் ரொம்ப அவசரம் எனச்சொல்லி 50 ஆயிரம் வாங்கிக் கட்டியுள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்தில் நீங்கள் வாங்கிய பொருள் நட்டத்துக்குப் போனது, அதனால் உங்களுக்கு நட்டம், நீங்கள் கட்டிய தொகையிலிருந்து 30 ஆயிரம்தான் கிடைக்கும் எனச்சொல்ல அதிர்ச்சியாகியுள்ளார். விட்டதைப் பிடிக்கவேண்டும் என மீண்டும் நண்பர்களிடம் கடன் வாங்கி மீண்டும் 50 ஆயிரம் டெபாசிட் செய்துள்ளார், இந்தமுறை 20 ஆயிரம் தான் கிடைக்கும் எனச் சொல்லி யுள்ளார்கள்.
அடுத்து ஒரு லட்ச ரூபாய் பேக்கேஜ் எனச்சொல்ல, அதற்கும் பணம் கட்ட நண்பர்களிடம் கடன் வாங்க முயற்சித்துள்ளார். நெருங்கிய தோழி விவரம் கேட்டறிந்து, இதெல்லாம் சீட்டிங் எனப் புரிய வைத்து அவரை புகார் தரச்சொல்ல, என் கணவருக்குத் தெரிந்தால் அவ்ளோதான் என அழுதுள்ளார். அவரை சமாதானப்படுத்தி நான் காம் நபருக்குத் தெரியாமல் புகார் தந்துவிட்டு பணம் திரும்பவந்துவிடும் எனக் காத்துக்கொண்டிருக் கிறார். இப்போது உறவினர்கள், நண்பர்களிடம் வாங்கிய கடன் அவர் கழுத்துக்குமேல் தொங்கும் கத்தியாக உள்ளது.
"ஆன்லைன் கேம்ஸ், ரம்மி போன்றவை ஒருவர் தெரிந்தே செய்யும் தவறுகள். பணம் சம்பாதிக்கவேண்டும், அது வேலையே செய்யாமல் சுலபமாக கிடைக்கவேண்டும் என நினைக்கும் மனோபாவம்தான் இதற்கு முழுக்காரணம்.' சமூக ஊடகங்களில் வருவது உண்மையா, பொய்யா என யாரும் உறுதிசெய்வதில்லை. அது 100 சதவிகிதம் உண்மை என நம்புகிறார்கள். அப்படி நம்புகிறவர்கள் அனைவரும் படித்தவர்கள்தான். ஒருவரின் ஆசையைத் தூண்டிவிட்டு அதன்வழியாகப் பணம் பறிக்கிறார்கள், அதில் பெண்கள் அதிகளவில் ஏமாந்துபோகிறார்கள். இதுகுறித்து பல புகார்கள் வருகின்றன என்கிறார்கள் தினம் தினம் விதவிதமான புகார்களை சந்திக்கும் சைபர் க்ரைம் போலீஸார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் பல இளைஞர் கள் தனியாகவும், ’குடும்பத் துடனும் உயிரை இழந்தாலும் இன்னும் பலப் பல இளைஞர்கள் அதிலிருந்து மீளமுடியாமல் இருக்கிறார்கள். அதேபோல் சமீபகாலமாக செல்போன்களில் மூழ்கிக்கிடக்கும் இளம் பெண்களும் ஆன்லைன் சூதாட்டத்தால் வாழ்க்கையை இழந்துநிற்கின்றனர். அதில் ஸ்ரீகா தன் குழந்தையைக் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டுள்ளார்.
அதேநேரத்தில் உயிரை விடமுடியாதவர்கள் கடனை அடைக்க வேறு சில வழி களைக் கையாள்கின்றனர். அது அவர்களை புதைகுழிக்குள் தள்ளுகிறது. அது அவர்களின் வாழ்க்கையை, குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவருகிறது என அதிர்ச்சித் தகவல்களை தருகிறார்கள்.
அது என்ன?
அடுத்த இதழில் பார்ப்போம்...!……
-து.ராஜா, ஆர்.பகத்சிங்