"பிரவீனா இந்த அளவுக்கு மோசடி செய்தாரா?''’என்று கேட்டோம், நம்மைச் சந்தித்த ‘மாற்றுத்திறனாளி’ ராம்குமாரிடம். "பேராசை பெருநஷ்டம்கிறத பாடப்புத்தகத்துல படிச்சதோடு மறந்துட்டோம். அதனால, அப்படியொரு பெருநஷ்டத்தை பிரவீனா என்னை மாதிரி பலருக்கும் ஏற்படுத் திட்டாரு''’என்று அழுதார், கண்ணீரைத் துடைப்பதற்குக்கூட கைகள் இரண்டும் இல்லாத நிலையில். என்ன விவகாரம் இது?
தூத்துக்குடி மாவட்டம் - கடம்பூரைச் சேர்ந்த பிரவீனா என்பவர், ‘ஆன்லைன் டிரேட் செய்கிறேன். தங்கம் மற்றும் பெட்ரோலில் முதலீடு செய்து வருகிறேன். விலையேறும்போது அதிக லாபத்துக்கு விற்கிறேன். இந்த ஆன்லைன் பிசினஸில் லட்சக்கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கு, எனக்கு கிடைக்கிற அபரிமிதமான லாபத்தில் பெரும்பங்கு தருகிறேன். எப்படியென்றால், என்னிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதத்துக்கு ரூ.12000 லாபம் எனக்கு கிடைக்கிறது. அதில் ரூ.8000-ஐ உங்களுக்கு தருவேன்..’ எனக்கூறி, 62 பேரிடமிருந்து கோடிக்கணக்கில் பணம்பெற்றுள்ளார். முதலில் சிலருக்கு சொன்னபடி லாபத்தில் பங்கும் தந்திருக்கிறார்.
மதுரை மாவட்டம் - பேரையூர் தாலுகாவிலுள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் நம்மிடம், "பிரவீனா, சரண்யா கூட்டாளிகளிடம் பணத்தை இழந்த 62 பேரில் நானும் ஒருவன். மின்விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த எனக்கு, டிரஸ்டு மூலம் கை வைப்பதற்கான ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லித்தான் என்னுடைய சித்தி சிவசக்தி மூலம் பிரவீனா அறிமுகமானார். அப்புறம், ஆன்லைன் டிரேட்ல முதலீடு பண்ணுனா, ரெண்டு மடங்கு பணம் தர்றேன்னு சொல்லி, 2020-ல ரூ.2,25,000 வரை வாங்கினார். மூணு மாசம் கழிச்சு லாபம்னு ரூ.36,000 கொடுத்தார். நான் போன் பண்ணு னேன். பிரவீனா அட்டெண்ட் பண்ணல. நேரடியா போயி கேட்டேன். தர்றேன்னு சொல்லி 9 மாசம் இழுத்தடிச்சிட்டு, 7-9-2021-ல் என்னோடு சேர்த்து 14 பேர் மேல பொய்யாக, கந்துவட்டி, கொலை மிரட்டல் புகார் கடம்பூர் போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்தாரு. இன்னும் 48 பேர்கிட்ட கந்துவட்டிக்கு பணம் வாங்கியதா லிஸ்ட்டும் கொடுத்தாரு. பணத்தை இழந்தவங்கள பொய்க் கேஸ்ல சிக்கவச்சாரு.
பிரவீனா செய்த மோசடியை ஆதாரங்களுடன், மதுரை கலெக்டர் அனீஷ் சேகர்கிட்ட மனுவா கொடுத்தேன். போலீஸ் நடவடிக்கை எடுக்காததுனால, மதுரை கலெக்டர் ஆபீசு பில்டிங் மேல ஏறி நின்னு குதிச்சு தற்கொலை பண்ணப் போனேன். தடுத்துட்டாங்க. அப்புறம், ஐ.ஜி., எஸ்.பி.ன்னு பார்த்தபிறகு, நான் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படை யில், பிரவீனா மேலயும் அவருடைய கூட்டாளி கள், மிரட்டியவர்கள்ன்னு 7 பேர் (கண்ணன், நாராயணன், மகேஸ்வரி, வினோபாலா, சரண்யா, அந்தோணி, அய்யலுசாமி) மேல எப்.ஐ.ஆர். போட்டாங்க. பணத்தை இழந்தவங்க மேல கேஸ் போட்டு கைது பண்ணுற போலீஸ்காரங்க, மோசடி பண்ணுன பிரவீனா கும்பலுக்கு பாதுகாப்பா இருக்காங்க''’என்றார் பரிதாபமாக.
ராம்குமாரின் சித்தி சிவசக்தியிடம் முதலீடு என்ற பெயரில் ரூ.65 லட்சம் பெற்றுக்கொண்டு, லாபம் என ரூ.15 லட்சத்தை திருப்பித் தந்திருக்கிறார் பிரவீனா. மோசடியால் ரூ.50 லட்சத்தை இழந்த சிவசக்தி, கடம்பூர் காவல் நிலையத்தில் தன் மீது பதிவான பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பிரவீனாவுக்கும் கடம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் சோமசுந்தரத்துக்கும் வழக்கறிஞர் மூலம் பிரைவேட் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
பிரவீனா, தனது செல்போனை ஸ்விட்ச்- ஆப் செய்துள்ள நிலையில், வீடியோவில் பதிவு செய்யப்பட்ட அவரது விளக்கம் கிடைத்தது. அதில், "ஆறு லட்ச ரூபாய் கடனுக்காக என்னுடைய பொருட்கள், நகைகள், என் கூட இருந்தவர்களின் பொருட்கள், நகைகள் எல்லாவற்றையும் கொடுத்து 3 கோடி ரூபாய் வரை வட்டி கட்டிருக்கேன். ஒரு லட்ச ரூபாய்க்கு 4 லட்ச ரூபாய் வாங்கிட்டு, அதாவது நான்கு மடங்கு வாங்கிட்டு, இன்னும் 10 லட்ச ரூபாய் வேண்டும், 12 லட்ச ரூபாய் வேணும்னு நெருக்கடி வந்துச்சு. இந்த பிரச்சனைல இருந்து வெளிய வர்றதுக்காகத்தான் புகார் கொடுத்தேன்''’என பரிதாப முகம் காட்டியிருக்கிறார்.
வழக்கறிஞரும் காங்கிரஸ் பிரமுகருமான அய்யலுசாமி நம்மிடம், "பிரவீனா சார்பா நான் பேசுறேன். கந்துவட்டி கொடுமைகளுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து போராடிவருகிறேன். என் மீதே ராம்குமார் மிரட்டல் புகார் கொடுத்திருக்கிறார். நான் தவறானவன் என்று நிரூபித்தால் தற்கொலை பண்ணி உயிரை விட்ருவேன். போலீஸ்காரரின் மனைவி சிவசக்தியும் அவருடைய உறவினர் ராம்குமாரும் கந்துவட்டி பேர்வழிகள். மாற்றுத்திறனாளி என்பதால் ராம்குமார் அனுதாபம் தேட முயற்சிக்கிறார். பிரவீனா ஆன்லைன் டிரேட் பண்ணவில்லை''” என்று ஒரே போடாகப் போட்டார்.
ராம்குமாரும் சிவசக்தியும் “பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்ததாக, தனது புகாரில் கதைவிட்டிருக்கிறார் பிரவீனா, மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று 14 பேரிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கினேன், கோடிக்கணக்கில் கந்துவட்டியும் கட்டினேன் என்று பொய் சொன்னதை காவல்துறை எப்படி ஏற்றுக்கொண்டது?” என்றனர் வேதனையுடன்.
டி.கல்லுப்பட்டி காவல்நிலைய எஸ்.எஸ்.ஐ. கணேசனை தொடர்புகொண்டோம். “"விவகாரம் ஒன்றுதான். ஆனால், கடம்பூர் காவல்நிலையத்தில் கந்துவட்டி வழக்காகவும், டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் ஆன்லைன் மோசடி வழக்காகவும் இருவிதத்தில் பதிவாகியிருக்கிறது. எது உண்மை என்றறிய வங்கிக் கணக்கு விபரங்களைச் சரிபார்க்க வேண்டியதிருக்கிறது'' என்றார்.
2016-லிருந்து 2021 வரை பல வழிகளிலும் பணப்பரிவர்த்தனை நடந்திருக்கிறது. உண்மைக் குற்ற வாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கமுடியாமல் காவல்துறை திணறுவது, விமர்சனத் துக்கு வழிவகுத்துள்ளது.