டெக்னாலஜி வளர வளர, இன்னொருபுறம் இதே டெக்னாலஜியை வைத்து மோசடி செய்யும் கும்பலும் மோசடி உத்திகளை புதிது புதிதாக மாற்றிவருகிறது. தற்போது இவர்களே வாட்சப்பிலும் புகுந்துவிட்டார்கள்.
சி.பி.ஐ. கட்சியின் முன் னாள் எம்.பி. அப்பாதுரையின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் வழியாக அவரது நண்பர்கள் சிலரிடம் மோசடிப் பேர்வழிகள் பணம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் எம்.பி.யின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் டி.பி.யாக வைத்துக்கொண்டு சிலருக்கு "ஹாய்' என மெசேஜ் அனுப்பியுள்ளார்கள். அது புதிய எண்ணாக இருந்ததால் ட்ரூகாலரில் செக் செய்தவர்களுக்கு, முன்னாள் எம்.பி யின் பெயர், புகைப்படத்தையே காட்டியிருக்கிறது. பின்னர் அந்த எண்ணிலிருந்து, "உடனடியாக 30 ஆயிரம் ரூபாய் தேவை, காலையில் திரும்பத் தருகிறேன். எனது ஜிபே எண்ணுக்கு அனுப்ப முடியுமா?' எனக்கேட்டு மெசேஜ் வந்திருக்கிறது. இதுபோல் மெசஞ்சரில் பணம் பறிப்பது தெரிந்ததால், மற்றவர்கள் உஷாராகி, பணம் தராததோடு, இந்த எண்ணையே ப்ளாக்கும் செய்துள்ளனர். உஷாராக, ஏமாறாமல் தப்பித்தனர்'' என்றார்கள்.
வாட்ஸப்பில் இப்படி செய்ய முடியுமா? என டெக்னாலஜி வல்லுநர்களிடம் கேட்டபோது, "புதிய மொபைல் எண்கள் யாருடையது எனத் தெரிந்துகொள்ள பெரும்பாலும் ஃட்ரூகாலர் ஆப்பைத்தான் பயன்படுத்துவார்கள். மோசடியாளர்கள் புதிதாக ஒரு சிம்கார்டு வாங்கி, அந்த எண்ணுக்கு ட்ரூகாலரில் அந்த முன்னாள் எம்.பி.யின் பெயரையும், புகைப்படத்தையும் பதிவேற்றுவார்கள். இப்போது இந்த பெயரைத்தான் ட்ரூ காலரும் காட்டும். அதைவைத்து உண்மையென நம்பியிருப்பார்கள். நம்முடைய மொபைல் எண்களைப் பல்வேறு தருணங்களில் பதிவு செய்திருக்கிறோம். அதிலிருந்து இவர்களுக்கு கிடைக்கிறது. அதேபோல எண்ணற்ற கடன் செயலிகள், வீடியோ கேம் செயலிகள் இன்ஸ்டால் செய்யும்படி கேட்கின்றன. அவற்றை இன்ஸ்டால் செய்யும்போது அந்த மொபைலில் உள்ள கான்டாக்ட் எண்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். அப்படி பெறப்பட்ட எண்களை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். லக்கி ட்ரா கூப்பன்கள் மூலமாகவும் நம்முடைய எண்களைப் பிறருக்கு வழங்குகிறோம்.
இத்தனைக்கும் மேலாக, இந்த ட்ரூ காலர் ஆப் மீதே சந்தேகம் எழுப்பப்படுகின்றது. நம்முடைய கான்டக்ட் எண்கள், போட்டோக்கள் உள்ளிட்ட பெர்சனல் தகவல்களை இந்த ஆப்பும் ரகசியமாகக் கண்காணிப்பதாக எச்சரிக்கிறார்கள்'' என்றார்.