தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பைப் பிடித்து மே மாதம் 7-ந் தேதியோடு ஒரு வருடத்தை கடக்கவிருக்கிறது தி.மு.க. அரசு. இந்த ஓராண்டில் தனது தலைமையிலான அரசு நிகழ்த்திய சாதனைகளை பிரமாண்டப்படுத்த திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த ஓராண்டில் அரசின் முக்கியத் துறைகள் எப்படி இருக்கின்றன என்பதை துறை வாரியாக ஸ்கேன் செய்திருக்கிறோம். இந்த இதழில் பத்திரப் பதிவுத் துறையின் ஸ்கேன் ரிப்போர்ட்!
தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் முக்கியத் துறைகளில் ஒன்றாக இருக்கிறது வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை. சுமார் 140 ஆண்டுகால பழைமை வாய்ந்த இத்துறை அரசுக்கு நிதியை திரட்டித் தருவதில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கொரோனா நெருக்கடிகளால் இரண்டாண்டு காலம் வருவாயில் சரிவைச் சந்தித்த இந்தத் துறை, கடந்த 8 மாதங்களாக வருவாயைப் பெருக்குவதில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
தமிழகத்தின் பத்திரப்பதிவு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்ட 13,252.56 கோடி ரூபாய்க்கு அதிகமாக, 661 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கூடுதலாக கிடைத்திருக் கிறது. காரணம், ஒளிவுமறைவற்ற நிர்வாகம்தான்‘ என்கிறார் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி. ஆனால், இந்தத் துறையில் புழங்கும் கமிசனும் லஞ்சமும் குறைந்தபாடில்லை. இதனால் சாமானியர்கள் படும் அவஸ்தைகள் அதிகம்.
தி.மு.க. ஆட்சி அமைந்ததும், முந்தைய ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கும் மாஜிக்கள் பலர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் பத்திரப்பதிவுத்துறையின் முன்னாள் அமைச்சர் வீரமணியும் அடக்கம்.
உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் மாஜிக்கள் வாங்கிக் குவித்துள்ள அசையாச் சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 2 லட்சம் கோடிகளுக்கும் அதிகம். பத்திரப்பதிவுத் துறையின் உதவியுடன் இதனைக் கண்டுபிடிக்கும் வேலைகள் கடந்த 7 மாதங்களாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆவண ஆதாரங்களின்படி, முதல் கட்டமாக முன்னாள் அமைச்சர்கள் சிலர்மீது ரெய்டு நடத்தினோம். இன்னும் 10 மாஜிக்கள் எங்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறையும் பதிவுத்துறையும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இயங்கி வருகிறது”என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.
இப்படி இரட்டைக் குழல் துப்பாக்கியாக இயங்கினாலும், நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கவும் லஞ்ச ஒழிப்புத்துறையை பயன்படுத்தி வருகின்றனர் பதிவுத் துறையின் அதிகாரிகள்.
இதுகுறித்து நம்மிடம் மனம் திறந்த பதிவுத்துறை அதிகாரிகள், ‘’அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த அதே லஞ்ச லாவண்யங்கள் இப்போதும் குறைந்தபாடில்லை. முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பத்திரப் பதிவுக்கே கறாராக லஞ்சம் கேட்டார் சார்-பதிவாளர் ஒருவர். அப்படின்னா லஞ்சம் எந்தளவுக்கு தழைத்தோங்கியிருக்குன்னு புரிந்துகொள்ளுங்கள்.
அதாவது, ஸ்ரீபெரும்புதூர் சார்-பதிவாளராக இருந்தவர் ஹரிநாத். முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் பிரமுகர் சொத்து ஒன்றை வாங்குகிறார். இதை பதிவு செய்ய ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தனது ஆட்களை அனுப்பி வைக்கிறார். அவர்களும் சார்-பதிவாளர் ஹரிநாத்தை சந்தித்து விபரம் சொல்கிறார்கள். உடனே ஹரிநாத், பத்திரம் பதிவு செய்வதற்கு 12 லட்சம் ரூபாய் எதிர்பார்க்க, முதல்வரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் எடுத்துச் சொன்னபோதும் அசராத ஹரிநாத், ஒவ்வொரு பத்திரப் பதிவின் மதிப்பீட்டுத் தொகைக்கேற்ப கமிசனை வாங்கச் சொல்லி உயரதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.
அப்படியிருக்கும்போது, முதல்வர் குடும்பம்னு சொல்லி மிரட்டினால் எப்படி? இதற்கான கமிசன் தொகைக் கணக்கை உயரதிகாரிகள் கேட்டால் நான் எப்படி கணக்கு காட்டுவது? அதனால் யாராக இருந்தாலும் கமிசன் வெட்டினால் பதிவு நடக்கும். இல்லைன்னா இடத்தை காலி பண்ணுங்க என தெனாவெட்டாக சொல்லியிருக்கிறார்.
இது, முதல்வரின் குடும்பப் பெண் பிரமுகருக்கு தெரியவந்ததும் அடுத்த சில மணி நேரங்களில் ஹரிநாத் சஸ்பெண்ட் செய்யப் படுகிறார். இப்படித்தான் எல்லாம் நடக்கிறது. பதிவுத் துறையில் முறையாக பத்திரம் பதிவு செய்வதற்கு லஞ்சம், போலிப் பத்திரம் பதிவு செய்ய கூடுதல் லஞ்சம், வழிகாட்டி மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்ய லஞ்சம், போலிப் பத்திரப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் என பல வழிகளில் லஞ்சம் வசூலிக்கப் படுகிறது. லஞ்சம் இல்லாமல் ஒரு துரும்பும் இந்தத் துறையில் அசைவதில்லை.
தமிழகம் முழுவதும் 575 சார்-பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இங்கு சார்-பதிவாளர்களாகவும், மாவட்ட பதிவாளர்களாக வும் யார் இருக்க வேண்டு மென்பதை துறையின் செகரட்டரி ஜோதி நிர்மலாசாமியும், பதிவுத்துறை தலைவர் சிவன்அருளும் முடிவு செய் கிறார்கள்.
தென் சென்னை மாவட்ட உதவி பதி வாளராக இருந்த ரவீந் திரநாத், தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு மாற்றப் பட்டதும் ரவீந்திர நாத் இடத்தில் மீனாகுமாரி நிய மிக்கப்படுகிறார். வழிகாட்டி மதிப் பை குறைத்தல், போலி டாகு மெண்ட் பதிவு என ரவீந் திரநாத் மீது நிறைய குற்றச்சாட்டு கள் இருக்கிறது. வழி காட்டி மதிப்பைக் குறைத்து ஆவணங்கள் பதிவு செய்யப் பட்டதால் அரசுக்கு பல கோடிகள் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்த மீனாகுமாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தத் திட்டமிடுகிறார்கள்.
அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையை நாடுகின்ற னர். அதன்படி பதிவுத்துறை அதிகாரிகளும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் கலந்துபேச, மீனாகுமாரிக்கு எதிராக ரெய்டு நடத்த திட்டமிடுகிறது. அதற்கேற்ப, தென்சென்னை மாவட்டத்துக்குட்பட்ட சார்-பதிவாளர்கள் மூலம் சில கவர்கள் தயாரிக்கப்படுகிறது. அதில் வெவ்வேறு எண்ணிக்கையில் தொகைகள் நிரப்பப்பட்டு தி.நகர், விருகம்பாக்கம் என சார்-பதிவாளர் அலுவலகங் கள் அமைந்த ஏரியாக்களின் பெயர்கள் எழுதப் பட்டு அந்த கவர்களை ரெய்டு நடத்துவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மீனாகுமாரியின் அறைக்கு அருகே இருக்கும் ரிசப்சன் ஹாலில் வைத்து விடுகிறார்கள்.
மீனாகுமாரி அலுவலக வளாகத்திலிருக்கும் மற்ற அலுவலக அதிகாரிகளை மாலை 5 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றனர். சி.சி.டி.வி. கேமராக்களும் ஆஃப் செய்யப்படுகின்றன. இதெல்லாம் பக்காவாக நடத்து முடிந்ததும், லஞ்ச ஒழிப்புத்துறையின் டி.எஸ்.பி. ராமச்சந்திரமூர்த்தி, ஸ்பெஷல் எஸ்.ஐ. மூர்த்தி ஆகியோரின் தலை மையிலான டீம், மாலை 6.10-க்கு மீனாகுமாரியின் அலுவலகத்துக்குள் நுழைகிறது.
நுழைவதற்கு முன்னதாக ரிசப்சனில் இருந்த கவர்களை எடுத்துக் கொண்ட ராமச்சந்திர மூர்த்தி, மீனாகுமாரியின் டேபிளில் கவர்களை போட்டு, என்ன இது எனக் கேட்கிறார். அதற்கு மீனாகுமாரி, ஏதோ ஒரு கவரை எடுத்துக்கொண்டு வந்து போட்டு என்ன இது எனக் கேட்டால் நான் என்னத்தைச் சொல்வது? எனச் சொல்ல, உங்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் இது எனக் குற்றம் சாட்டுகிறார்கள். அதை மறுக்கிறார் மீனாகுமாரி. அன்று இரவு முழுவதும் அலுவலகத்திலேயே இருக்க வைக்கிறார்கள்.
ரிசப்சன் அறை மற்றும் கார் டேஸ்போர்ட்டி லிருந்து கணக்கில் காட்டப்படாத பணம் கைப் பற்றப்பட்டதாக எஃப்.ஐ.ஆர். போடப்படுகிறது. இந்த ரெய்டை வைத்து மீனாகுமாரியை தென் சென்னை ஏ.ஐ.ஜி. பதவியிலிருந்து தூக்கி விடு கிறார்கள்.
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியவர் கள் மீதும், போலி பத்திரப்பதிவுகள் மூலம் கோடி கோடியாய் லஞ்சம் குவித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய்வதில்லை. அவர்கள் குறிப்பிட்ட இரண்டு சாதிகளை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களை உயரதிகாரிகள் பாதுகாக்கிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும் என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இந்திய அரசாலும் தமிழக அரசாலும் பாதுகாக்கப்பட்ட இடம். சுமார் 13 ஆயிரம் ஏக்கர் கொண்ட இந்த நிலம், போலி பத்திரப்பதிவுகளால் திருடப்பட்டு தற்போது வெறும் 1,700 ஏக்கர் நிலமாக சுருங்கி விட்டது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை. இதில் கொடுமை என்னவெனில் தி.மு.க. ஆட்சியில் இவர்களெல்லாம் தற்போது உயர்பதவிகளில் இருப்பதுதான். பொதுவாக சில சின்ன மீன்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, துறையை சுத்தப்படுத்துகிறோம் எனக் காட்டுகிறார்களே தவிர குற்றங்களை தடுக்க நினைக்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் அங்கீகாரம் பெறாத 30 ஆயிரம் குடியிருப்புகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டதில் பல கோடிகள் லஞ்சமாக பெறப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான ரியல் எஸ்டேட் அதிபர்கள், காண்ட் ராக்டர்கள், சார்-பதிவாளர்கள் களை எடுக்கப்படுவார் கள் என தி.மு.க. ஆட்சியில் சொல்லப்பட்டது. ஆனால், நடவடிக்கை பாயவில்லை. மாறாக தி.மு.க.வின் அதிகார மையத்துக்கு நெருக்கமான பவர் ஃபுல் கட்டுமான நிறுவனங்களின் பத்திரப்பதிவுகளுக்கு ராஜ மரியாதை கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட பதிவாளர்களிடமிருக் கும் பத்திரப்பதிவு அதிகாரத்தை பறித்து சார்-பதி வாளர்களிடம் ஒப்படைக்க துறையின் தரப்பில் திட்ட மிடப்படுகிறது. இது மேலிடத்துக்கும் உயரதிகாரி களுக்கும் கமிசன் பெற்றுத்தர வழிவகுப்பதுடன், அரசுக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.
பத்திரப்பதிவு முறைகேடுகளை விசாரிப் பதற்காகவும் தடுப்பதற்காகவும் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க கடந்த டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, மூன்று மாதங்கள் முடிந்தும் இந்த குழு இன்னும் அமைக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு முறைகேடுகளை உடனுக்குடன் விசாரித்து ஆக்சன் எடுக்க ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மையத்தை துவக்கியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி. அதில் ஏகப்பட்ட புகார்கள் குவிகிறது. முறையான ஆக்சன் இல்லை.
இதுகுறித்து கருத்தறிய அமைச்சர் மூர்த்தியை தொடர்புகொண்ட போது அவரது எண் (98லலலலலல46) தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது. துறை யின் செயலாளர் ஜோதி நிர்மலாசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, "லஞ்ச ஒழிப் புத்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அந்த துறையிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். மீனாகுமாரி தவறு செய்யவில்லை என்பதை அவர்தான் நிரூபிக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. என்னால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சிலர் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். மற்றபடி துறைரீதியான குற்றச்சாட்டுகள் தவறானவை''’என்கிறார்.