கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடை பெற்றது. அதுசமயம் சி.பி.ஐ. அதிகாரிகள் சில குறிப்பிட்ட நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் காத்திருந்தனர். மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படும் கடைசி நிமிடம்வரை காத்திருந்து விட்டு, பின் அவர்கள் ஏமாற்றத் துடன் கிளம்பிச்சென்றனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் ஏன் நீட் நடைபெறும் மையத்தின் வாசலில் போய் காத்திருக்கவேண்டும்?
அதற்கான விடை மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஆர்.கே. எஜுகேஷன் கேரியர் கைடன்ஸ் நிறுவனம் நீட் தேர்வு, ஜே.இ.இ. போன்ற மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சியளிப்பதில் பெயர்பெற்றது. இதன் இயக்குநர் பரிமல் கோட்பள்ளிவார்.
இவர் தனது பயிற்சி மையத்துக்கு வரும் மாணவர்களில் வசதியான, மருத்துவ, எஞ்சினியரிங் படிப்புகளில் சேரத்துடிக்கும் மாணவர்களை மெல்ல நோட்டமிட்டு வலை விரிப்பார். நீங்கள் ஆசைப்படும் கல்லூரிகளில் இடம் வேண்டுமா? அல்லது நீட் தேர்வை எழுதி வெற்றிபெற முடியாது என பயப்படுகிறீர்களா? அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது, ஆனால் கொஞ்சம் செலவாகும் என்பார்.
அடுத்தகட்டமாக அவர்களது பெற்றோர்களி டம் பேசி, அவர்களும் ஒப்புக்கொண்டால், அதற்கான விலை சொல்லப்படும். பேரம் நடந்து இறுதியாக ஒரு தொகை முடிவானதும் ஒரு தொகை அட்வான்சாகப் பெறப்படும். பெற்றோரிட மிருந்து முன்தேதியிட்ட காசோலைகளையும் மாணவனிடமிருந்து 10-ஆம் வகுப்பு, பன்னிரண் டாம் வகுப்பு அசல் சான்றிதழ்களையும் அந்த கோச்சிங் சென்டர் வாங்கி வைத்துக்கொள்ளும். நினைத்தபடி இடம் கிடைத்துவிட்டால், பேசப்பட்ட தொகை கொடுத்தபிறகே அந்த அசல் சான்றிதழ்களையும், காசோலைகளையும் அந்நிறுவனம் திருப்பியளிக்கும்.
கோச்சிங் சென்டர்களில் இருப்பவர்கள், மாணவர்களின் விண்ணப்பங்களில் திட்டமிட்ட மாற்றங்களைச் செய்து அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைப்பதை உறுதிசெய்துகொள்வார்கள். பின் மாணவர்களின் விண்ணப்பத்தில் இருக்கும் புகைப்படங்களில் மார்பிங் செய்து, தேர்வு எழுதப் போகும் நபரின் முகத்துக்கு இணையான மாற்றங்களைச் செய்துகொள்வர்.
இந்த முறை ஐந்து பேருக்குப் பதில், கோச்சிங் மையத்தின் ஆட்கள் சென்று தேர்வெழுதி வென்றுதருவதாகக் கூறி ஒவ்வொருவரிடம் ஐம்பது லட்சம் வரை பெற்றிருக்கிறது ஆர்.கே. எஜுகேஷன்ஸ். இந்த மையம் ஜே.ஈ.ஈ. தேர்வில் இதேபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டது குறித்த தகவல் தெரியவந்ததனால், சி.பி.ஐ. உஷாராயிருக்கிறது.
அதனால்தான் ஆள்மாறாட்டம் செய்யும் ஐந்து மையங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சாதாரணத் தோற்றத்தில் சென்று நின்றிருக் கிறார்கள். எப்படியோ சி.பி.ஐ.யின் வருகை தெரிந்துபோய் ஆள்மாறாட்டமாக தேர்வு எழுதுபவர்கள் வராமலே இருந்துவிட்டார்கள்.
எனினும் சி.பி.ஐ.யிடம் உரிய தகவல்களும் சில முக்கிய ஆதாரங்களும் இருந்ததனால் ஆள்மாறாட்டம் செய்ய இருந்த ஐவரையும் ஆர்.கே.எஜுகேஷன்ஸ் கேரியர் கைடன்ஸின் நிறுவனர் பரிமல் கோட்பள்ளிவாரையும் கைதுசெய்துள்ளனர். விசாரணையில் போர்ஜரியாக தேர்வு எழுத இருந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தேர்வு எழுதுவதற்கு முன்பே ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
சி.பி.ஐ.க்கு எப்படி மூக்கு வியர்த்தது?
தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, தங்களுக்காக போர்ஜரி ஆட்கள் தேர்வெழுது வதையும், தங்களுக்கு நல்ல மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் போவதையும் சம்பந்தப்பட்ட நபர்களால் பெருமையடிக்காமல் இருக்க முடியாது. அப்படி சக நண்பர்களுடன் பெருமையடிக்கும் போது, பாதிக்கப்படும் மாணவர்கள் விவரங்களை கேட்டுவிட்டு சி.பி.ஐ.க்கு புகார் எழுதியிருக் கின்றனர்.
விசாரணையில் இறங்கிய சி.பி.ஐ., இதுபோன்ற போர்ஜரி தேர்வு எழுதித் தர ஆட்களை ஏற்பாடு செய்துதரும் புதுடெல்லியின் அர்பித் சுவாமி, கஜேந்தர் சுவாமி, முகம்மது தனிஷ் போன்ற முகவர்களை கைதுசெய்து விசாரிக்கையில்தான் ஆர்.கே. கைடன்ஸ் குறித்த விவரங்களைத் திரட்டி யிருக்கிறது. ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதும்போது கையும் களவுமாக கைது செய்ய சி.பி.ஐ. நினைத்தது. ஆனால் காவலனை விடவும் கள்ளன் நுண்ணுணர்வோடு இருப் பான் என்பதற்கேற்ப, பயிற்சி மையம் சம்பந்தப்பட்ட ஆட்களை தேர்வெழுதவிடாமல் தடுத்துவிட்டது.
இது ஒருபுறமிருக்க, நீட் தேர்வு நடக்கும்போதே, கேள்வித்தாளை படமெடுத்து வெளியில் அனுப்பி, வெளியிலிருந்து நபர்கள் விடையை எழுதியனுப்ப, அந்த விடையினை படமெடுத்து நீட் தேர்வெழுதும் மாணவி தினேஷ்வரிகுமாரியிடம் கொடுத்து நீட் தேர்வெழுதிய மோசடியும் அம்பலமானது. இந்த குற்றத்துக்கு தேர்வுக் கண்காணிப்பாளர் ராம்சிங்கே துணைபோனது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மோசடியாக தேர்வெழுதிய மாணவி, உட்பட எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், "மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா' பெயரில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக 200 மாணவர்களுக்கு போலியாக குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்த ஆறுபேர் கொண்ட கும்பல் ஒன்று சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. பீகாரின் சந்தீர் கார்வரியா, தீபக் குமார் இந்த மோசடியில் பிரதானமாகச் செயல்பட்டுள்ளனர்.