ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு, தினசரி பெட்ரோல் விலையேற்றம், முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மாட்டுக்கறி சாப்பிட்டால் எரித்துக் கொலை என 2014-19 ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இந்திய மக்களை பதட்ட மனநிலையிலேயே வைத்திருந்தார் பிரதமர் மோடி. இப்போது ஆட்சிக்கு வந்து 100 நாட்களிலேயே பொருளாதார சரிவு, தொழிற்சாலை மூடல் உள்ளிட்ட பதட்டத்துடன் புதிய பதட்டத்தைப் பற்ற வைத்திருக்கிறார் பிரதமரின் வலதுகரமான உள்துறை அமைச்சர் அமித்ஷா.

mm

ஒரே நாடு ஒரே கல்வி, ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே சட்டம், ஒரே நாடு ஒரே தேர்வு என டிசைன் டிசைனாக முழக்கமிட்ட பா.ஜ.க. இப்போது ஒரே நாடு ஒரே மொழி இந்தி என்ற கோஷத்தை ஆரம்பித்து அனைவரை யும் பதட்டமாக்கியிருக் கிறது.

செப்.14-ஆம் தேதி இந்தி தினத்தை (இந்தி திவாஸ்) முன்னிட்டு, டிவிட்டரில் ஒரு செய்தியைச் சொல்லி யிருந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ""இந்தியாவில் பல மொழி கள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்ததுதான். ஆனால் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி இருக்க வேண்டும், அது இந்தியாக இருக்க வேண்டும். நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி, நாடு முழுவதும் அதிகமாகப் பேசப்படும் மொழி இந்தி தான். எனவே அதை தேசிய மொழியாக்க வேண்டும்'' என அந்த செய்தியில் சொல்லியிருப்பதோடு, இந்தி தின நிகழ்ச்சியிலும் மேற்படி கருத்தை திருவாய் மலர்ந்திருக்கிறார் திரு.அமித்ஷா.

Advertisment

அமித்ஷாவின் இந்த இந்தி மொழி வெறிக் கருத்துக்கு முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்திலிருந்து வந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ""இது இந்தியாவா? அல்லது "இந்தி'யாவா? இந்தி திணிப்பை ஒரு போதும் அனு மதிக்க மாட்டோம்'' என கடும் எதிர்ப்பு அறிக்கை விட்டார். மேலும் அந்த அறிக்கை யில் ""அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியா வில் அதிகம் பறக்கும் காக்கை தானே தேசியப் பறவையாக இருந்திருக்க வேண்டும்'' என அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் அப்போது பேசியதையும் நினைவு கூர்ந்திருக்கிறார் ஸ்டாலின்.

இந்தி திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்கும் குரல் தமிழகத்தி லிருந்து மட்டுமல்ல, அகில இந்தியத் தலைவர்களும் அமித்ஷாவின் இந்தி’ பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மொழியின் பெயரால் புதிய போர்க்களத்தை உருவாக்கும் முயற்சியில் சங்பரிவார் அமைப்புகள் இறங்கியிருப்ப தாக குற்றம் சாட்டும் கேரள முதல்வர் பினராய் விஜயன், நாட்டின் பெரும்பான்மை மக்களின் தாய்மொழி இந்தி கிடையாது என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள் ளார்.

aaa

Advertisment

கேரள காங்கிரஸ் தலை வர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனோ, ""தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் இருந்து பா.ஜ.க. பாடம் கற்றுக் கொள்ள வேண் டும்'' என்பதை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கர்நாடக முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, குமாரசாமி ஆகியோரும் ""அமித்ஷாவின் பேச்சு இந்திய மக்களின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தத்திற்கு வைக்கும் வேட்டு'' என்கின்றனர்.

hh

மேற்குவங்க முதல்வர் மம்தா, “""பொருளா தார வீழ்ச்சியைத் தடுப்பதைவிட்டுவிட்டு, மொழிப் பிரச்சனையை பூதாகரமாக்காதீர்கள்'' என கடுமையாக சாடியிருக்கிறார். காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜெய்ராம் ரமேஷோ, ""ஒரே நாடு ஒரே வரி என்பதை வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஒரே நாடு ஒரே மொழி என்பதை எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது'' என சாடியிருக்கிறார்.

மேலே உள்ள தலைவர்கள் எல்லாம் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அத னால்தான் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்ட னம் தெரிவிக்கிறார்கள் என்று கூட பலர் யோசிக்கலாம். அமித்ஷா தேசியத் தலைவராக இருக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு முதலமைச்சரும் அவரது அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சருமே எதிர்ப்பு தெரிவிக் கிறார் என்றால் ஆச்சர்யம் தானே.

hh

கர்நாடக முதல்வரான எடியூரப்பா ""கன்னடமே எங்களுக்கு பிரதான மொழி, கன்னட மொழியும் கலாச்சார மும் எங்களுக்கு முக்கியம்'' எனச் சொல்லி படாரென கதவைச் சாத்தியிருக்கிறார். அவரது அமைச்சரவையில் சட்ட மந் திரியாக இருக்கும் ஜே.சி.மது சாமியோ, ""இந்தி மூலம் கன் னட மொழியின் மீது தாக்குதல் நடந்தால் கன்னடர்களாகிய நாங்கள் அதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்'' என பாய்ச்சல் காட்டியிருக்கிறார்.

""அமித்ஷா சொல்வது போல் இந்தியாவில் அதிகம் பேர் பேசும் மொழி இந்தி என்பது உண்மையில்லை. மகாராஷ்டிராவில் மராட்டி, ஒடிசாவில் ஒரியா மேற்குவங்கத்தில் வங்காளம், மணிப்பூரில் மணிப்பூரி, என வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் அவர்களின் தாய் மொழி தான் கோலோச்சுகிறது. ஏன் இதே மோடி, அமித்ஷா ஆகியோரின் தாய் மொழி குஜராத்தி தான். இந்திய மக்கள் தொகையில் 30-லிருந்து 32 சதவிகிதம் பேர்தான் இந்தியில் பேசுகிறார்கள். அதிலும் போஜ்புரி, மைதிலி, சந்தாலி உள்ளிட்ட மொழி பேசுவோரும் இந்தி பேசுபவர்களாகவே கணக்கிடப்படுகிறார்கள். உ.பி, ம.பி., இமாச்சலத்தில் உள்ள பழங்குடி மக்களின் மொழிகளையும் இந்தி தன் கணக்கில் விழுங்கியுள்ளது.

இருந்தும் கூட இந்திக்கு பா.ஜ.க.வினர் பல்லக்கு தூக்குகிறார்கள் என்றால் இதன் பின் னணியில் கூட அல்ல முன்னணியிலும் இருப்பது ஆர்.எஸ்.எஸ்.தான். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் "ஜெய்ஸ்ரீராம்' என்று சொல்ல மறுப் பவர்களை நடுரோட்டில் அடிப்பது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு முழுநேர வேலை. இப்போது இந்தியா முழு வதும் இந்தி என்ற அஜெண்டா மூலம் இந்தியா என்பது இந்து நாடு என மாற்றும் கலவர முயற்சியின் ஆரம்பம் தான் இது'' என்கிறார்கள் நடுநிலை அரசியல் பார்வை கொண்டவர்கள்.

செப்.15-ஆம் தேதி சென்னையில் நடந்த ம.தி.மு.க. மாநாட்டிலும் திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டத் திலும் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின்,’’""இப்போது இந்தி என்பவர்கள், பின்னர் தமிழே படிக்கக்கூடாது என்பார்கள். இது கலாச்சார படையெடுப்பு, இதை முறியடித்தே ஆகவேண்டும். மீண்டும் ஒரு போர்க்களத்திற்கு தயாராகுங்கள்'' என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

kkk

"இந்து ராஷ்டிரா' என்ற கருதுகோளை முறியடிக்கத் தேவையான அரசியல் முன்னெடுப்பு களை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதரவுடன் பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்ள வேண்டும் என ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

""பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக் கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என பல இந்திய மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்பதுதான். எனவே இப்போது எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது'' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குட்டியிருக்கிறார்.

செப்.20-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என 16ஆம் தேதி நடந்த தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுவில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

நாடே ஒரு பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுக்கிறதென்றால் நம்ம தமிழக பா.ஜ.க.வினர் அதற்கு நேரெதிர் டிசைனில் பேசுவார்கள். ""ஆறறிவு உள்ளவர்கள் ஆறு மொழி கற்றுக் கொள்ள வேண்டும்'' என்ற டிசைனில் பேசுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பி.ஜே.பி.யின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவோ, ""தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை மூடுவார்களா'' என்ற டிசைனில் பேசுகிறார்.

காஷ்மீருக்குரிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 40 நாட்களுக்கு மேலாகியும் அங்கு இன் னும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் மக்கள் ரொம்பவே அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். அம்மாநில அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பரூக் அப்துல்லா நிலைமை பற்றி உச்சநீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் காஷ்மீர் நிலவரம் அறிய நேரில் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

hhh

பிஸ்கட் கம்பெனியான பார்லே என்ற பாரம் பரிய நிறுவனம் இழுத்து மூடப்பட்டுவிட்டது. அசோக் லேலண்ட் போன்ற கம்பெனிகள் மாதத்திற்கு பத்து நாட்கள் தயாரிப்பை நிறுத்தும் அவலநிலை. மோட்டார் வாகனத் தொழில் அடியோடு ஸ்தம்பிப்பு என மோடி ராஜ்ஜியத்தில் எல்லாமே ஸ்ருதி பேதமாகவே இருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருகிறது. இதையெல்லாம் மூடி மறைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்பி, பதட்டமாகவே வைத்திருப்பதில் கண்ணும் கருத்துமாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஆப் கீ பார் மோடி சர்க்கார்.

அதன் விபரீதமான முடிவுகள் மூலம், அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வினரே, "ஆன்ட்டி இண்டியன்'களாக மக்களால் பார்க்கப்படுகின்றனர். இந்தி திணிப்பு முயற்சியால் இந்தியாவில் பல மாநிலங்களும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக மொழிப் போர்க்களத்தில் இறங்கியுள்ளன.

-கீரன், ஈ.பா.பரமேஷ்

படங்கள் : ஸ்டாலின்