"தெற்கு பேய்க்குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெயக்குமார் கடந்த மே மாதம் 18-ந்தேதி இரவில் தனது பெட்டிக்கடையின் அருகில் நின்றபோது, கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தது பனைகுளத்தைச் சேர்ந்த ராஜ மிக்கேல் குருப் எனத் தெரியவர ராஜமிக்கேல் குரூப்பை வலை வீசி தேடியுள்ளது எஸ்.ஐ-க்கள் டீம். இதில் கடந்த மே 23 அன்று கொலைக்கு சம்பந்தமில்லாத ராஜமிக்கேலின் கூட்டாளியான தச்சுத்தொழிலாளி துரையைத் தேடி பாப்பாங்குளம் வந்த எஸ்.ஐ. ரகுகணேஷ் உள்ளிட்ட டீம், துரையை காணாததால் அங்கிருந்த துரையின் தம்பி மகேந்திரனை சாத்தான்குளம் ஸ்டேஷனிற்கு இழுத்து சென்று இரண்டு நாட்களாக அடித்து துவைத்து அனுப்பியுள்ளார். மறுநாள் நள்ளிரவில் அனுப்பப்பட்ட மகேந்திரன் உடல் நலம் குன்றிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் நினைவு திரும்பாமலே ஜூன் 13 அன்று இறந்துள்ளார். ‘எஸ்.ஐ.ரகுகணேஷ் அடித்ததாலே தான் அவர் இறந்துள்ளார்'' என்கிற தகவல் பரவ, உளவுத்துறையும், நீதிபதி தரப்பும் விசாரணையை தொடங்கியுள்ளது.

paikulam

இதேவேளையில், இவர் களுக்கு முன்னதாக ஆசிர்வாதபுரம் அஞ்சல், தெற்கு பேய்க் குளத்தை சேர்ந்த மகேந்திரனின் தாயார் வடிவுவை சந்தித்தோம். வயது மூப்பின் காரணமாக காது மந்தமான நிலையிலும், வறுமையும் விரவிக் கிடக்க என்ன நடந்தது.? என அழுத்தமாக நம்மிடம் பதிவு செய்யத் தொடங் கினார்.

Advertisment

""சின்ன வயசிலேயே எங்களை தவிக்க விட்டு போயிட்டாரு எம் புருஷன். கஷ்டப்பட்டுத்தான் எம் புள்ளைகளை வளர்த்தேன். மூத்தவன் துரை தச்சு வேலையும், இளையவன் மகேந்திரன் கொத்தனார் வேலையும் பார்த்து வந்தான். இருந்த ஒரு பொட்ட புள்ளையான சந்தானத்தை தூத்துக்குடியில் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டோம். மூத்தவன் துரைக்கு என்னுடைய தங்கச்சி வீடு உள்ள பாப்பாங்குளத்தில் கல்யாணம் செய்து வைத்தோம்.

ஒரு நாள், ஒருத்தரை கொன்னுப்புட்டதாக ஊரே பரப்பரப்பா பேசிக்கிட்டது. கொலையை செஞ்சது மூத்த பையன் துரைக்கு தெரிஞ்சவன் போல! அதனால எங்க வீட்டுக்கும் துரையைத் தேடி எஸ்.ஐ .ரகுகணேஷ் போலீசோட வந்தாக... அவம் இங்கேயே இல்லையே.! அவம் ரொம்ப நாளா என் தங்கச்சி ஊரில்தானே வேலை பார்க்கிறான் என சொல்ல, தங்கச்சி வீட்டு அட்ரஸை வாங்கிட்டு போயிட்டாங்க. துரையைத் தேடி நைட் 2 மணிக்கு பாப்பாங்குளத்திற்கு போனவங்க, அவம் அங்கே இல்லாததால் அவனுடைய தம்பி மகேந்திரனை சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனிற்கு கூட்டிட்டு வந்து, துரையைக் கேட்டு அடியோ அடின்னு அடிச்சிருக்காங்க... அவனுக்கு தெரிஞ்சால் சொல்லியிருக்க மாட்டானா..? அடுத்த நாள் இரவுல வீட்டுக்கு அனுப்பி வைச்சாங்க.

Advertisment

dd

வீட்டிற்கு வந்ததுதிலருந்து வலியால் துடித்தவன், வறுமையைப் பார்த்து வலியோட பாளையங்கோட்டைக்கு வேலைக்குப் போனான். அங்க மயங்கி விழுந்ததால் மறுபடியும் வீட்டுக்கு வந்தவன், வலியும், பசியும் அவனைக் கொன்னதால இந்த முறை தூத்துக்குடியிலுள்ள அவனுடைய அக்கா வீட்டுக்குப் போனான். அங்கேயும் மயங்கி விழுந்து கோமாவுக்கு போனவன், சூன் 13ந் தேதி பிணமாகப் போனான். தப்பே செய்யாத ஒருத்தனை ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. ஒன்னொருத்தனை கொன்னுபுட்டாங்க. இதற்கெல்லாம் காரணம் அந்த எஸ்.ஐ. ரகு கணேஷ்தான்'' என்கிறார் அவர்.

""அவம் கொலைகாரனென இவனுக்கு எப்படித் தெரியும்...? அவம் இவனுக்குக் கூட்டாளி அவ்வளவே.! அந்தக் கொலைக்கும் துரைக்கும் சம்பந்தமில்லை என எப்.ஐ.ஆரிலேயே பதிவு செஞ்சிருக்காங்க.! அப்புறம் எதற்கு துரையைத் தேடனும்..? துரையே சம்பந்தமில்லாமல் இருக்கும் போது அவனுடைய தம்பி மகேந்திரனை எதற்குத் தூக்கி வந்துலாடம் கட்டனும்..? கேட்க நாதியில்லாததால் தான்தோன்றித்தனமாக நடந்திருக் கின்றனர் சாத்தான்குளம் போலீசார். மகேந்திரன் இறப்பையும் கொலை வழக்காகப் பதிவு செய்து அதில் எஸ்.ஐ. ரகுகணேஷை சேர்க்கனும்"" என்கிறார் உறவினரான காளி என்பவர்.

இவர்கள் கூற்றின் படி ஜெயக்குமார் கொலைக்கான எப்.ஐ.ஆரில் துரையின் பெயர் இல்லை. இருப்பினும், தங்களுடைய தவறு வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வேறொரு பொய் வழக்கில் புனையப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் துரை.

-நாகேந்திரன்

_____________

சரணடைய வந்தவரின் வாக்குமூலம்!

dd

ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் கொலையில் சம்பந்தப்பட்ட, கொலையின் 6வது குற்றவாளியான மேலபனைக்குளத்தை சேர்ந்த சூசையின் மகனான ராஜாசிங் இதே வழக்கிற்காக கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த நிலையில், சாத்தான்குளம் வணிகர்கள் பென்னிக்ஸ் அவர் தந்தை ஜெய்ராஜ் கொலையுண்ட விவகாரம் பெரிதாக ""என்னையும் அடித்துக் காயப்படுத்தியது அந்த எஸ்.ஐ-க்களே.! எனக்கு சிகிச்சை கொடுங்கள்'' என சிறைச்சாலையிலிருந்து கூக்குரலிட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

""ஜெயக்குமார் கொலை வழக்கில் ராஜமிக்கேலின் கூட்டாளிகளான அழகு ஜார்ஜ், முத்து கிருஷ்ணன், சங்கரவேல், நவீன், தசரதன், மகராஜன், கணேசன், மத்தியாஸ், ராஜாசிங் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோரை சாத்தான்குளம் போலீசார் தேடி வந்த நிலையில், ஆறாவது குற்றவாளியான நான் காவல்துறையிடம் சரணடையதான் வந்தேன். ஆனால் நீதிக்குமாறாக என்னடா சரணடையவர்ற..? என என்னை ஒரு நாள் முழுக்க வைத்திருந்து அடிச்சாங்க. யாரையும் இவங்க பிடிக்கலை. கொலைக்கு சம்பந்தமேயில்லாத உறவுக்காரர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்த டார்ச்சரால்தான் சரணடைய வந்தோம். முதலில் நான், அதன் பின் அனைவரும் சரணடைய அவங்களையும் அடித்துக் காயப்படுத்தி அதன்பின்தான் ரிமாண்டிற்கு அனுப்பினாங்க. இப்பொழுது கூட என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை'' என தன்னை சந்தித்த உளவு அதிகாரிகளிடம் எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது குற்றஞ்சாட்டி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றான், மேல பனைகுளம் ராஜாசிங். இந்த விவகாரமும் நீதித்துறையின் கதவுகளைத் தட்ட நீதித் துறையால் ராஜாசிங்கும் விசாரிக்கப்பட்டுள்ளார்

______________

மனித மிருகம்!

பேய்க்குளத்தில் நடந்த வில்லங்கம், எஸ்.ஐ. ரகுகணேஷின் கொட்டத்தை கூறுவதென்றால், இப்போது சொல்லப்போவதோ எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் சண்டியர்த்தனத்தை பறை சாற்றுகின்றது. இதுக்குறித்து எழுதப்பட்ட முகநூல் பதிவு ஒன்றில், ""2012 ம் வருடத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவுக்கு உட்பட்ட திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றினார் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன். அப்பொழுது ஒரு நாள் அவர் மாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றதற்காக எனது நண்பர் ஒருவரை தடுத்து நிறுத்தி அதிகார துஷ்பிரயோகத்தால் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று இரவு 11 மணிவரை வைத்து அடித்து நொறுக்கிவிட்டு விடுவித்து விட்டார். இப்படியா மனிதாபிமானம் இல்லாமல் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உதைப்பார்கள்..? என்ற மன வேதனையோடு நண்பரின் காயத்தையெல்லாம் புகைப்படமாக எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துக்கொண்டு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகாராக கொடுத்தோம். நடவடிக்கை இல்லாததால், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்தோம்.

புகார் விசாரணைக்கு வந்த நிலையில், அந்த எஸ்.ஐ. கெஞ்சியதால் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அதே உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்தான் இரு அப்பாவி வியாபாரிகளை அதே அராஜகத்தாலும் அதிகார துஷ்பிர யோகத்தாலும் அடித்து கொன்றிருக்கிறார் என்று தெரிய வந்த போதுதான் ஏதோவொரு குற்ற உணர்ச்சி குத்தி குடைகிறது. அய்யய்யோ அன்றே மனித மிருகத்திற்கு தண்டனை வாங்கி கொடுத்திருந்தால் இன்று இப்படி இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருக்காதே என்கிறது அப்பதிவு.