அரசியல் தலைவர்களின் சுற்றுப்பயணத் தால் தமிழக அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. மக்களை சந்திக்காமல் அரங்கக் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தி கட்சித் தொண்டர்களை சந்தித்துவந்த நடிகர் விஜய், மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை எப்போது துவங்கப்போகிறார்? என்கிற கேள்வி த.வெ.க.வினரிடமே இருந்த நிலையில், வருகிற 13-ந் தேதி தேர்தல் சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தினமும் ஒரு மாவட்டம் என திட்டமிடப் பட்ட விஜய்யின் சுற்றுப்பயணம் இறுதியில், வீக் எண்ட் திட்டமாக மாற்றப்பட்டது. அதாவது, சனிக் கிழமை மட்டுமே மக்களை சந்தித்து பேசுவார் என்பதாக மாற்றியமைத்துள்ளனர். இப்படி மாற்றப்பட்டதை த.வெ.க.வினரே ரசிக்கவில்லை என்கின்றனர். ஆனால், எப்படிப் பார்த்தாலும், வாரம் ஒருமுறை தி.மு.க.வுக்கு எதிரான பஞ்சாயத்து இருக்கப்போகிறது என்பதில் கொஞ்சம் உற்சாகமாகியிருக்கிறார்கள் த.வெ.க.வினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய த.வெ.க. நிர்வாகிகள், "தேர்தலுக்கு இன்னும் குறைவான மாதங்களே இருந்தாலும், இப்போதே தினமும் மக்களைச் சந்திக்க வேண்டிய தேவை எங்கள் தலைவருக்கு (விஜய்) கிடையாது. வாழ்வா? சாவா? என்று பயப்படுபவர்களுக்குத்தான் தேவை அதி கம்; எங்களுக்கு இல்லை. அதாவது, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தேவை தி.மு.க.வுக்கும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண் டும் என்கிற தேவை அ.தி.மு.க.வுக்கும் இருக்கிறது. அதனால் அவர்களுக்குப் பயம்; இப்போதே மக்க ளைப் பார்க்க தினமும் தொகுதிகளைச் சுற்றிவர கிளம்பிவிட்டனர். எங்களுக்கு (விஜய்) அந்த பயமெல்லாம் கிடையாதுங்கண்ணா. ஏன்னா, ஆட்சியை பிடிக்கப் போவது எங்க தலைவர்தான். திராவிட கட்சிகளை விரட்டப்போவதும் எங்க தலைவர்தான். அதனால்தான், இப்போதைக்கு வாரம் ஒருமுறை மக்களை சந்தித்தால் போதும்; தேர்தல் பிரச்சாரத்தில் தினமும் மக்களை சந்திக் கலாம் என திட்டமிட்டுத்தான் வீக் எண்ட் நிகழ்வாக மாற்றப்பட்டது. வாரம் ஒருமுறை மக்களை விஜய் சந்திப்பதே தி.மு.க.வுக்கு கிலியை கொடுத்திருக் கிறது. போகப் போகப் பாருங்கள்,…தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்து போகும்''’என்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகம் முழு வதும் தி.மு.க. நிர்வாகிகளையும், தொண்டர்களை யும் சந்தித்து ஆலோசனை வழங்கவும்... விவாதிக் கவும் உதயநிதியை இப்போதே களத்தில் இறக்கி விட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே, "உடன் பிறப்பே வா; ஒன்றிணைவோம் வா!', "ஓரணியில் தமிழ்நாடு' என்றெல்லாம் தி.மு.க. தொண்டர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தற் போது மாநில அளவில் தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், உடன்பிறப்புகளின் மனநிலையை அறியவும் ஒரு முயற்சியாக மாவட்டம்தோறும் உதயநிதியை அனுப்பி வைத்திருக்கிறார்.
"திராவிட மாடல் ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை; ஏதேனும் ஒரு வகையில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு பலனை திராவிட மாடல் அரசில் அடைந்திருக்கிறார்கள்; இந்தியாவி லேயே நல்லாட்சி தருவதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது; முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத்தில் தூய்மையும் நேர்மையும் மட்டுமே கோலோச்சுகின்றன' என்றெல்லாம் தி.மு.க. தலைவர்களும், அமைச்சர்களும் சொல்லிவருகிற சூழலில்... "உதயநிதியை இப்போதே களத்தில் இறக்கிவிட வேண்டிய தேவையும் அவசியமும் என்ன இருக்கிறது?' என்கிற கேள்வி தமிழக எதிர்க்கட்சிகளிடம் எதிரொலிக்கிறது.
இதுகுறித்து அறிவாலயத் தரப்பில் நாம் விசாரித்தபோது, "தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணமும், அதில் கூடும் கூட்டமும், ஆட்சிக்கு எதிராக அவர் பேசும் கலோக்கியலான பேச்சும் மக்களிடம் போய்ச் சேருகிறது. கூட்டத்தைக் கூட்ட காசு கொடுத்து மக்களை அ.தி.மு.க.வினர் அழைத்து வந்திருந்தா லும், இவர்களும்தானே ஓட்டுப்போட வாக்குச் சாவடிகளுக்குச் செல்வார்கள். அந்த வகையில் கூட்டிய கூட்டமானாலும் எடப்பாடியின் பேச்சு அவர்களில் சிலரிடன் மனதை மாற்றினாலும் போதுமே! எடப்பாடி எதிர்பார்ப்பது சத்தமில் லாமல் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், விஜய்யும் களத்துக்கு நேரடியாகச் செல்கிறார். அவரும் தி.மு.க.வை அட்டாக் செய்வார். அதுவும் மக்களுக்குப் போய்ச் சேரும். விஜய்யை வெறித்தனமாக ரசிக்கும் 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இருக்கிறது. இந்த இளைஞர்கள் இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள். அவர்கள் திமுக, அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் கிடையாது. அப்படியிருக்கும் நிலையில், தேர்தல்னு வருகிறபோது நடிகர் மீதுள்ள மோகம், அரசியலிலும் அவரை ஆதரிக்க வைக்கிறது. ஏற்கனவே, இளைஞர்களை அதிகளவில் தி.மு.க.வில் சேர்த்திருக்கிறோம் என நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் உண்மைத்தன்மை ஒவ்வொரு மாவட்டத்தின் பொறுப்பாளர்களுக்கே வெளிச்சம்.
ஆக, "இந்த எதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு சமம். அந்த வகையில், இதுகுறித்து கட்சி தலைமைக்குப் பல தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களின் மனநிலை என்ன? எதில் சோர்வாகியிருக்கிறார்கள்? களப்பணி யில் அவர்களின் பங்களிப்பு எந்தளவுக்கு இருக் கிறது? என்பதை அறிந்து, அவர்களை உற்சாகப் படுத்தத்தான், உதயநிதியை களத்தில் இப்போதே இறக்கியிருக்கிறார் தலைவர் ஸ்டாலின். அந்தச் சுற்றுப்பயணத்தைத்தான் தொடங்கியிருக்கிறார் உதயநிதி'’என்கிறார்கள் அழுத்தமாக.
இந்த சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தி.மு.க.வின் அனைத்து நிலையிலிருக்கும் நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார் உதயநிதி. அதற்கேற்ப புரோக் ராம் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கவனித்துவருகின்றனர்.
முதல்நாள் பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து துவக்கியிருக்கிறார் உதயநிதி. பயணத்தைத் துவங்கும் முன்பு, காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் இல்லத்திற்குச் சென்று அவரது உருவப்படத்தை வணங்கிவிட்டு கிளம்பினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. நிர்வாகிகளுட னான கூட்டம், அரங்கத்தில் நடந்துகொண்டி ருக்கிறது. ஒவ்வொரு தொகுதிகளிலுமுள்ள நிர்வாகிகள் இதில் கலந்துகொள்கின்றனர். நிர்வாகிகளுக்கு கருப்பு-சிவப்பு துண்டு அணிவித்து மகிழ்விக்கிறார் உதயநிதி.
கட்சியிலுள்ள அனைவரின் கருத்துக்களுக் கும் மதிப்பளிக்க வேண்டும் என்கிற ஜனநாயக நோக்கத்தில், கருத்துப் பெட்டிகள் வைக்கப்பட்டு, படிவங்களும் வழங்கப்படுகின்றன. அதில் தங்களுக்கான கோரிக்கைகள், கருத்துக்கள், ஆலோசனைகளை எழுதி பகிர்ந்துகொள்ளுங்கள் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி பேசி முடித்ததும், அந்த பெட்டிகளிலிருந்து அந்த படிவங்களில் சிலவற்றை எடுத்து அதிலுள்ள கோரிக்கைகளுக்குப் பதில் சொல்கிறார் உதயநிதி. மேலும், அந்த படிவங்கள் தொகுக்கப்பட்டு தலைவரின் (ஸ்டாலின்) கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனச் சொல்லியிருக்கிறார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த ஆலோசனைக் கூட்டம் மிக ஆரவாரமாக வும் உற்சாகமாகவும் நடந்து முடிந்தது. காஞ்சிபுரம் கூட்டத்தில், "ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் சிறப்பாக செயலாற்றிய 10 நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், அவர்களுடன் ஃபோட்டோவும் எடுத்துக்கொண்டார் உதயநிதி. பேரறிஞர் அண்ணாவின் முதன்மை கொள்கை யான, மாநிலத்தில் சுயாட்சி முழக்கத்தை முன் வைத்து ஒன்றிய அரசின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் முதல்வரின் கரங்களை வலுப்படுத்த நீங்கள் உழைக்க வேண்டும் என்பதை நிர்வாகிகளிடம் அழுத்தமாக வலியுறுத்தினார் உதயநிதிஸ்டாலின்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. இது தொடர வேண்டுமானால், நம் ஆட்சி மீண்டும் வரவேண்டும். தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தமிழகத்தில் அவரது கால் பதியாத கிராமங்களே கிடையாது. தலைவரும் தி.மு.க.வும் பெற்ற வெற்றிகளுக்கு காரணம் உங்க ளின் அயராத உழைப்புதான். கட்சிக்கு அடித்தள மாகவும், ஆணிவேராகவும் இருப்பது நீங்கள்'' என்று பெருமையுடன் பேசியவர், தி.மு.க. அரசு செயல்படுத்திவரும் வியத்தகு திட்டங்களையும், அவைகள் ஏற்படுத்திய தாக்கங்களையும் பட்டியி லிட்டார். இதையெல்லாம் மக்களிடம் தொடர்ச்சி யாக நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக இதனை வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, ‘’பூத் கமிட்டி பணிகளை தலைவரே நேரடியாக கவனித்து வருவதால், அந்த பணிகளில் பொறுப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். அலட்சியம் கூடாது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளை தீவிரமாகச் செய்யுங்கள். ஒவ்வொரு நிர்வாகியும் 50 முதல் 60 வாக்குகளுக்குப் பொறுப் பேற்றுக்கொள்ளுங்கள். அந்த வாக்காளர்களிடம் நம் அரசின் திட்டங்களை கொண்டு செல்லுங்கள். மக்களின் குறைகளை சரிசெய்ய முயற்சிக்க வேண் டும். உங்களால் முடியாததை எம்.எல்.ஏ., எம்.பி.க் களிடமும், இளைஞரணி தலைமையகத்துக்கும் கொண்டுசெல்லுங்கள். கருப்பு-சிவப்பு துண்டு அணிந்த தொண்டர்கள் இருக்கும்வரை தி.மு.க.வை யாராலும் அசைக்கவோ, வீழ்த்தவோ முடியாது. 2026 தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைப்போம்''’என்றார் உதயநிதி.
முக்கிய தலைவர்கள் எல்லாம் களத்துக்கு செல்லும் நிலையில் தமிழக அரசியல் பரபரத்துக் கிடக்கிறது!