Skip to main content

ஆட்சிக்கு கமிஷன்! கோச்சிங் கொள்ளை! மாணவிகளை கொல்லும் NEET

நீட் எனும் கொடூர ஆயுதம் இந்த ஆண்டும் தமிழ்நாட்டு மாணவிகள் உயிரை குத்திக் கிழித்திருக்கிறது. எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிரதீபா, சுபஸ்ரீ என பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

தகுதியை உறுதி செய்யவும், தனியார் கல்விக் கொள்ளையைத் தடுக்கவும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமே உயர்ந்தது என்கிற பிம்பத்தை உறுதிப்படுத்தவும் கொண்டு வரப்பட்ட நீட்டுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும், தமிழகத்தில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட சமூகநீதிக் கோட்பாடுகளை உடைப்பதில், மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதமாக இருந்தது.

neet-death

கடந்த ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கும், நிரந்தரமாக நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறவும் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும், கடைசி நிமிடம்வரை ஒப்புதல் அளிப்பதுபோல போக்குக்காட்டி, இறுதியில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கைவிரித்துவிட்டது. அதனால் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில், தமிழ்நாட்டில் 2503 அரசு மருத்துவ இடங்களில் வெறும் இரண்டே இரண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சீட் கிடைத்தன. மேலும் மூன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தன. ஆனால், 2016 ஆம் ஆண்டு கணக்குப்படி 30 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திருந்தன. அதாவது தமிழகத்தில் பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்டுவந்த குடும்பத்தில் முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கான இடம், கிராமப்புற மாணவர்களுக்கான இடம் போன்ற சமூகநீதி விஷயங்களை நீட் காவு வாங்கியது. அதில் உயிர்ப்பலியானவர் அரியலூர் அனிதா.

1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மத்திய அரசின் கடைசிநேர வஞ்சனையால் தனது கனவு தகர்ந்ததை நினைத்து வருந்திய அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து நடந்த போராட்டங்கள் காலப்போக்கில் வேறு திசைக்குத் திரும்பிவிட்டன. அடுத்த ஆண்டாவது நீட் தேர்வுக்கு விலக்குப்பெற அரசு முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்மீது நடவடிக்கை எடுக்கக்கூட மத்திய அரசை மாநில அரசு வற்புறுத்தவில்லை.

neet-death


அதேசமயம், நீட் தேர்வை எதிர்கொள்வதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்காக 412 நீட் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதாவது, எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் நீட் தேர்வில் தேறினால்தான் மருத்துவ இடம் கிடைக்கும் என்பதை சொல்லாமல் சொன்னார். அத்துடன் 10, +1, +2 என தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டிய அழுத்தமான சூழலும் ஏற்பட்டது.

கடந்த மே 6-ஆம் தேதி மருத்துவக் கல்லூரி இடங்களுக்காக நடந்த நீட் தேர்வில் தமிழகத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் விண்ணப்பித்தனர். கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில மையங்கள் தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. மாநில அரசு சில உதவிகளை செய்ய முன்வந்தபோதும், அவை போதுமானதாக இல்லை.

கேரளாவில் தேர்வெழுதச் சென்ற திருவாரூர் மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் என்பவர் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணமடைந்தார். தந்தை இறந்த தகவல்கூட தெரியாமல் அவர் தேர்வெழுதி வந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. நீட் தேர்வின் தமிழ் வினாத்தாள்களில் 49 வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. 60 இடங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன என்ற புகார்கள் எழுந்தன. இது குறித்து வழக்குகள் போடப்பட்ட நிலையில், திடீரென்று ஜூன் 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.எம். எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் சார்பில் நீட் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கக்கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவசரமாக 12:30 மணிக்கே முடிவுகளை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது.

தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 45 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி பெற்றனர். அகில இந்திய அளவில் முதல் 50 இடம் பெற்றவர்களில் சென்னையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 12 ஆவது இடத்தைப் பெற்றார். இவருடைய பெற்றோர் இருவரும் டாக்டர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் பயிற்சி பெற்றவர். அதேசமயம், அரசுப் பள்ளியில் படித்து விருதுநகர் அரசுப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற சிவகங்கை நாகேந்திரன் 720க்கு 306 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அமைச்சர் செங்கோட்டையன் கருத்துப்படி அரசுப் பயிற்சி மையங்களில் படித்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1337 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வை எழுதிய 1லட்சத்து 14 ஆயிரத்து 602 தமிழக மாணவர்களில் தமிழ்வழியில் படித்த 24 ஆயிரத்து 720 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 4,440 பேர் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், இவர்களில் இடஒதுக்கீடு, மதிப்பெண் ஆகியவை அடிப்படையில் சிலருக்கே இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

neet-death

நீட் மோசடியால், மருத்துவக் கனவு தகர்ந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவைப் போல மாணவிகளின் மரணம் தொடர்வது வேதனையளிக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு பலிகொண்ட விழுப்புரம் பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா 2016ஆம் ஆண்டு பிளஸ்டூவில் 1125 மதிப்பெண் பெற்றவர். தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் செலவு செய்ய முடியாது என்பதால், அதைத் தவிர்த்தார். 2017ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகமானது. அதை எழுதி 155 மதிப்பெண் பெற்றார். சித்த வைத்திய கல்லூரி கிடைத்தது. அதையும் மறுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். 39 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. குடும்பத்தினர் இதை அறிந்தாலும் உடனே சொல்லவில்லை. மாணவியே விவரத்தைத் தெரிந்துகொண்டதும், மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி பிரதீபா பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் "நீங்கள் அனைவரும் எனக்குக் கிடைத்த வரம். நான் உங்களுக்கு சாபமாகிவிட்டேன். மேலும் உங்களுக்கு பாரமாயிருக்க விரும்பவில்லை' என்று உருக்கமாக எழுதியிருக்கிறார். அனிதா, பிரதீபா எனத் தொடர்ந்த உயிர்ப்பலிகளால் சட்டமன்றம்வரை நீட் பிரச்சினை எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. நிவாரண நிதி அறிவித்து முடித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி.

திருச்சியை அடுத்த உத்தமர்கோவிலைச் சேர்ந்த சுபஸ்ரீ என்கிற மாணவியும் நீட் தேர்வு தோல்வியைத் தாங்கமுடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மருத்துவராகும் தனது கனவும் பெற்றோரின் கனவும் தகர்ந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய தந்தை கண்ணன் கதறி அழுதார். பலியான இருவருமே எளியகுடும்பத்து மாணவிகள். தமிழகம் மட்டுமே நீட் தேர்வை எதிர்க்கிறது என்கிற நிலையில் ஹைதராபாத், டெல்லி போன்ற இடங்களிலும் மாணவ-மாணவியர் தற்கொலை செய்திருப்பது கல்வியாளர்களை அதிர வைத்துள்ளது.

பொதுவாக நீட் தேர்வு ஆதரவாளர்கள், மருத்துவக் கல்வியின் தகுதி மற்றும் திறமையை உறுதிப்படுத்தவும், தனியார் கல்வி நிறுவனங்களின் டொனேஷன் கொள்ளையை கட்டுப்படுத்தவும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டமே சிறந்தது என்பதை நிரூபிக்கவும் நீட் தேர்வு நல்லது என்றார்கள். ஆனால், நீட் தேர்வில் தேறியவர்களில் பொதுப்பிரிவினர் 720 மதிப்பெண்களுக்கு 119 மதிப்பெண்களையும், இடஒதுக்கீடு பிரிவினர் 96 மதிப்பெண்களையும் பெற்றாலே மருத்துவ இடம்பெறும் தகுதிப் பட்டியலில் இடம் கிடைத்துவிடும். ஆனால், பிளஸ்டூ தேர்வில் கட்ஆஃப் 720 மதிப்பெண்ணில் 50 சதவீதம் பெற்றால்தான் தகுதி. அதாவது, பாடங்களை கவனமாக படிக்க வேண்டிய பொறுப்பை தமிழகப் பாடத்திட்டம் உருவாக்குகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் இந்திய அளவில் தேறியவர்கள் 7 லட்சத்து 14 ஆயிரம் பேர். இந்தியா முழுவதும் உள்ள 416 மருத்துவக் கல்லூரிகளில் 61 ஆயிரத்து 390 இடங்கள் உள்ளன. அதாவது நீட் தேர்வில் தேறியவர்களில் வெறும் 7.4 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைக்கும். தமிழகத்தில் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதை குறை சொல்கிறார்கள். இவ்வளவு பேர் தேறினாலும், இருக்கிற இடங்கள் 5 ஆயிரத்து 660தான். எவ்வளவு பேர் தேறுகிறார்களோ, அவர்களில் அதிக பணவசதி உள்ளோரைப் பிடிக்க தனியார் கல்லூரிகளுக்குத்தான் வசதி என்கிறார்கள்.

நீட், தனியார் கல்விக் கொள்ளையை தடுக்கும் என்கிற வாதமும் அடிபட்டுப் போகிறது. அதாவது, மொத்தம் தேறிய 7.14 லட்சம் பேரில் மதிப்பெண் மெரிட் அடிப்படையில் 50 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் இடம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்வோம். மிச்சமுள்ள மேனேஜ்மெண்ட் கோட்டா 10 ஆயிரம் இடங்களில், இடம் கிடைக்காத 6.5 லட்சம் பேரில் அதிக பணம் கொடுக்கும் நபர்களே நிரப்பப்படுவார்கள். ஏனென்றால் நீட் தேறியிருக்க வேண்டும் என்பதுதான் விதி. மூன்றாவதாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமே சிறந்தது என்கிற கூற்றுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. எந்தப் பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும், நீட் பயிற்சிக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை இரண்டு ஆண்டுகள் செலவு செய்ய வேண்டும் என்பதே உண்மை. இதன்மூலம் லாபம் அடைபவர்கள் பயிற்சி மையம் நடத்துகிறவர்களும் அவர்களிடம் கமிஷன் பெறும் அரசாங்கத்தினரும்தான் என்பதே நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 12.6 லட்சம் பேர் நீட் பயிற்சிக்கு சென்றிருந்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் என்றாலே, 12 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தொகையில் ஆட்சியாளருக்கு கணிசமான பங்கு இல்லாமலா போகும் என்று பாதிக்கப்பட்ட பெற்றோர்களே வினா எழுப்புகிறார்கள்.

-ஜீவாபாரதி, து.ராஜா, ஜெ.டி.ஆர்
தொகுப்பு- ஆதனூர் சோழன்

---------------

வேறு வழி இல்லை!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கதி என்ன என்று மாநில அரசு இதுவரை மத்திய அரசை எவ்விதக் கேள்வியும் கேட்கவில்லை. அதுதொடர்பாக மக்களிடம் விளக்கம்கூட தெரிவிக்கவில்லை. அந்தத் தீர்மானத்தினை மத்திய அமைச்சரவை ஏற்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தந்தால் மட்டுமே நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும். இல்லையெனில் இதே நிலைதான் என்கிறார்கள் சட்டநிபுணர்கள்.

-சி.ஜீவாபாரதி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்