நுகர்வுக் கலாச்சாரம் அதிகரித்துவரும் இன்றைய காலத்தில், தினமும் புதிய புதிய உணவு வகைகளைத் தேடிச் செல்கிறோம். உலகமயமாக்கப்பட்ட சூழலில் குளிர் பானங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகப் பெருகியுள்ளது. தேநீர், காபி குடிக்கும் பழக்கமுள்ள நமக்குக் கிடைக்கும் டீத்தூள், காபித்தூள் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒருபக்கம் உணவுப்பொருட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவரும் சூழலில், இன்னொருபக்கம், உணவுப் பொருட்களின் தரமே கேள்விக்குறியாகிவிட்டது. தேநீர், குளிர் பானங்கள் தூய்மை யானவையா, தரமானவையா என்பதை நம்மால் கண்டறிய முடியாத நிலை.
நம் அன்றாடப் பயன்பாட்டில், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், டீத்தூள், குளிர் பானங்கள் என அனைத்தையும் எவ்வித விழிப்புணர்வும் இன்றி, அப்பொருள் தரமானது தானா என்பது குறித்த கேள்வியே இல்லாமல் அவசரகதியில் பயன்படுத்தி வருகிறோம். நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட் களில் கலப்படம் இருந்தால் நம் உயிருக்கே கேடு என்பது குறித்தெல்லாம் எண்ணிப்பார்ப்பதே இல்லாததால், இத்தகைய தரமற்ற உணவுப் பொருட்களால் பலவித நோய்களைச் சந்திப்பது பெருகிவருகிறது.
அதிலும் திருச்சி மாவட்டத்தில் உணவுக்கலப் படம் மிகவும் அதிகமாக உள்ளது. அவ்வப்போது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து இதுபோன்ற கலப்படங்களைத் தடுக்க நடவடிக்கை கள் எடுத்துவந்தாலும், இந்த கலப்படங்களை ஒழிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்ற னர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமாகக் கலப்பட டீத்தூள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சிராப்பள்ளி அரியமங்கலம், திருமகள் தெருவில், செல்வின் என்பவருடைய வீட்டை ஆய்வு செய்யும்போது சுமார் 1000 கிலோ கலப்படத் தேயிலைத் தூள் கண்டறியப்பட்டு, அதில் மூன்று சட்டப் பூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள் ளது. அந்த கலப்பட டீத்தூளை அதிகாரிகள் அழித்துவிட்டனர்.
மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டையில் 5 தேயிலை தூள் மொத்த விற்பனையாளர்கள் கடை மற்றும் வீட்டை ஆய்வு செய்தபோது சுமார் 1742 கிலோ கலப்பட தேயிலை தூள் கண்டறியப்பட்டு, வழக்கு போடுவதற்கு மூன்று உணவு மாதிரி எடுக்கப்பட்டு அவர்களது வீட்டில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சிராப்பள்ளி உறையூர் பகுதியில் ஒரு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தை ஆய்வு செய்ததில் அங்கு கடலெண்ணெய் மற்றும் நல்லெண்ணெயில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டு, வழக்கு போடுவதற்காக இரண்டு சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவுப் பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மேலும் சுமார் 1150 லிட்டர் கலப்பட எண்ணெய், பிணைப்பத்திரம் போடப்பட்டு, அவர்களது வளாகத்திலேயே ஒரு அறையில் வைத்து சீல் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக உணவுப் பாதுகாப்புத் துறையின் ஆய்வின்போது தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி கண்ணாடி குளிர்பான பாட்டில்களில் அழியும் மையினால் அச்சிடப்பட்டிருந்ததால், திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள காளி குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் 25.02.2022 அன்று அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். அதில், சுமார் 3000 லிட்டர் இர்ஸ்ர்ய்ற்ர் மற்றும் நன்ய் ஙஹய்ஞ்ர் குளிர்பானங்கள் எளிதில் அழிக்கக்கூடிய மையினால் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி எழுதப்பட்டிருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாநகரப் பகுதியில் சுமார் 17 தேநீர்க் கடைகளை ஆய்வு செய்ததில் 8 கடைகளில் சந்தேகத்திற் கிடமான சுமார் 9 கிலோ கலப்படத் தேயிலை தூள் கண்டறியப்பட்டு வழக்கு போடுவதற்காக 8 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படி தினமும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்து கலப்படங்களைத் தடுக்க முயற்சி செய்துவருகின்றனர். இப்படி பல்வேறு உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படக் காரணமாக அமைந்துள்ளன.
உணவுப் பொருளில் கலப்படம் செய்வது உயிருக்கே ஆபத்தாக அமையும் என்பதால் திருச்சி பகுதி மக்கள் இது குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.