கண்ணில் பட்ட இடத்தை எல்லாம் போலி பட்டா மூலம் அதிகாரிகளே விற்று, கல்லா கட்டிய செய்தி ஒன்று, நம் காதுக்கு வந்து திகைக்க வைத்தது.
நெய்வேலி பக்கம் உள்ள பரவனாற்றுப் படுகையில் இருக்கும் கிராமம்தான் துறிஞ்சிக் கொல்லை. இங்கே அரசுக்குச் சொந்தமான ஆற்றுப்படுகை நிலம், பல நூறு ஏக்கர் உள்ளது. இதில் சர்வே எண்:92/1-92/2-ல் மட்டும் சுமார் 350 ஏக்கர் இருக்கிறது. கடந்த 1964-ஆம் ஆண்டு வாக்கில் முன்னாள் ராணுவ வீரர்கள், அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நிலத்தில் ஒரு பகுதியை அரசு பட்டாபோட்டு இலவசமாக கொடுத்திருக்கிறது.
பட்டா பெற்றவர்கள் அங்கே வீடு கட்டுவதற்கோ விவசாயம் செய்வதற்கோ முன்வரவில்லை. அதைப் பயன்படுத்தவும் இல்லை. சுமார் 50 ஆண்டுகளாக சும்மா கிடந்த அந்த நிலத்தின் மீது புவனகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சார்ந்தவர்களின் கண்பார்வை பதிந்தது. அப்புறம்?
கடந்த 2015 ஆம் ஆண்டு வாக்கில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள், சர்வேயர்கள், வட் டாட்சியர் இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, போலி பட்டாக்களைத் தயாரித்து கண்டமேனிக்கு விற்றுக் கல்லா கட்டி இருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் வி.ஜி. சிட்டிபாபு, "2015-ஆம் ஆண்டு முதல் சேத்தியாத் தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர்களாக பணிசெய்த மஞ்சு, வேல்முருகன் ஆகியோர் பணிபுரிந்த காலகட்டத்தில்தான் இந்த மெகா மோசடி நடந்துள்ளது. இதில் அப்போ தைய குறிஞ்சிக்கொல்லை கிராமப் பணியாளர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், நில அளவையர், புவனகிரி தாசில்தார் ஆகியோர் இந்த மோசடியில் கூட்டுசேர்ந்து செயல் பட்டிருக்கிறார்கள். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித் துள்ளனர். எங்கள் புகாரின் பேரில் மாநில பதிவுத்துறை தலைவர், சிதம்பரம் மாவட்ட பதிவாளர் மகாலட்சுமியை இப்புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அவரும் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்றவர்களையும் வாங்கியவர்களையும் விசாரித்தார்.
அந்த விசாரணையில் அஞ்சம்மாள் என்பவர் 2019-ல் தனக்கு லோன் வாங் கித் தருவதாகக் கூறி, சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலு வலகத்திற்கு கிராமப் பணியாளர் அந்தோணி என்பவர் அழைத்துச் சென்றார் என்றும், பத்திரத்தில் கையெ ழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார் என்றும் தனக்கும் நிலத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறினார். அதேபோல் கிரையம் பெற்ற முருகன் என்பவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், "ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் உள்ள கூடலையாற்றூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாதுரை என்பவரிடமிருந்து பதிவாளர் வேல்முருகன் என்பவர் நிலத்தைப் பதிவு செய்து கொடுத்தார்.
இதன் அரசு மதிப்பு 3 லட்சத்து 97 ஆயிரம். என்னிடம் வெளி மார்க்கெட் மதிப்பின் படி எட்டு லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டார்கள். அதோடு அலுவலகச் செலவுகளுக்கு என்று தனியாக 50 ஆயிரம் ரூபாயையும் வாங்கிக்கொண்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். இப்படி போலியாக நில விற்பனையில் புகுந்துவிளையாடி இருக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடந்தும் நடவடிக்கை எதுவும் இல்லாததால், அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினோம். இப்போது விசாரிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்''’என்கிறார் ஆதங்கமாய்.
அம்பேத்கர் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வீர.கணேசனோ "சர்வே புல எண்:91/1, 92/2-ல் மொத்த நிலப்பரப்பு 128.34 ஹெக்டேர். சுமார் 350 ஏக்கர். சர்வே எண்கள்: 92/2 முதல் 92/114 வரை, சம்பந்தமே இல்லாத போலி நபர்கள் பெயருக்கு பட்டா ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு, செய்யப்பட்ட ஆவண எண்கள்:707/2019, 816/2019, 1125/2019, 1378/2019, 1379/2019, 1507/2019 -இப்படி நீண்டுகொண்டே செல்கிறது. இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், செந்துறை, கழுமங்கலம், கடலூர் மாவட்டம் கூடலையாற்றூர், இப்படி பல பகுதிகளிலும் வசிப்பவர்களுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளனர். இதில் கொள்ளையடித்த பணத்தில் பல உயர் அதிகாரிகளுக்கு லஞ்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும்''’என்கிறார் கொதிப்பாய்.
இதுகுறித்து விசாரணை நடத்திய சிதம்பரம் மாவட்ட பதிவாளர் மகாலட்சுமியிடம் கேட்க முயன்றோம். அவர் நம் போனை எடுக்கவே இல்லை. அவருக்கு வாட்ஸ்- ஆப் மூலம் எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பியும் நமக்கு அவர் பதிலளிக்க முன்வரவில்லை. இதையடுத்து சென்னையில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் புகார் சம்பந்தமாக விளக்கம் பெற, அவர்கள் கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டோம். பதில் சொன்னவர்கள், “"இது குறித்து நீங்கள் மாவட்ட பதிவாளர் மகாலட்சுமியிடம்தான் கேட்கவேண்டும்'’என்று முடித்துக்கொண்டார்கள்.
அரசு சொத்தை போலியான ஆவணங்கள் மூலம் விற்று, ஏகத்துக்கும் கொள்ளையடித்திருக்கும் கிரிமினல் பேர்வழிகள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?