முதல்வரும் அமைச்சர்களும் 5 ஆண்டுகள் கோட்டை கட்டி ஆள்வார்கள். அதிகாரிகள் 60 வயது வரை கோட்டையைக் கட்டி ஆள்பவர்கள்.
கலைஞர் ஆட்சியில் டி.ராஜேந்திரன் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரியை சென்னை நகர கமிஷனராக நியமித்தார்கள். சசிகலாவுக்கு மிக நெருக்கமான அந்த அதிகாரி பற்றி பல புகார் கள் எழுந்தது. ஆனால் தி.மு.க. அரசு அவரை மாற்றவில்லை. தி.மு.க. ஆட்சி முடிந்ததும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. ராஜேந் திரனை மாநில உளவுப் பிரிவு தலைவராக ஜெயலலிதா நியமித்தார். அதற்குக் காரணம், தி.மு.க. ஆட்சியில் நடந்த அத்தனை விஷயங்களையும் அ.தி.மு.க.வுக்கு அதுவும் நேரடியாக ஜெ.வுக்கு ஒரு சீக்ரெட் போனில் பதிந்தார் ராஜேந்திரன்.
அவர் அ.தி.மு.க. ஆட்சியில் கலைஞருக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்பொழுது தி.மு.க. ஆதரவாளர்கள். "நாங்கள் முன்பே இவர் சசிகலா ஆதரவு அதிகாரி என சொன்னோம். யாரும் கேட்கவில்லை. அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறார்கள் என வருத்தப்பட்டார்கள். அதேபோல இப்பொழுது கோட்டையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் ஒரு டீம், தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களைவிட நாங்கள் அறிவாளிகள் என்கிற கோணத்தில் செயல்படுவதோடு, மாநில அரசின் நிர்வாக பலவீனங்களை பா.ஜ.க.வுக்கு போட்டுக் கொடுத்து வருகிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 3 விதமான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதில் முதல் வகை அதிகாரிகள் சைலண்ட்டாக வேலை செய்வார்கள். அவர்களது வேலை, துறையின் அமைச்சர்கள் நற்பெயர் எடுக்க பெரிய அளவு உதவி செய்யும். அதில் முக்கியமானவர்கள் இந்து அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன் மற்றும் வேளாண் மைத்துறையில் இருக்கும் சமயமுர்த்தி போன்றவர்கள். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மைக்கென தனி பட் ஜெட் போடுவதற்கு காரணம் சமயமூர்த்தி. அதிக விளம்பர வெளிச்சம் இல்லாத இவர்கள் செய்யும் சிறப்பான செயல்பாடுகள் அமைச்சர்களுக்கு நல்ல பெயரைக் கொடுக்கிறது.
இரண்டாவது வகை அதிகாரிகள், துறைக்குப் புதிதாக வந்துள்ள அமைச்சர்களைவிட தங்களுடைய திறமையையும் பெருமையையும் முன்னிலைப்படுத்திக் கொள்வார்கள். செய்தி மற்றும் விளம்பரப் பிரிவு செயலாளரான ஜெயசீலன், சுற்றுலாத்துறை சந்திரமோகன் போன்றவர்கள் இதில் அடக்கம்.
முன்றாவது வகை அதிகாரிகள் அமைச்சரை ஒன்றும் தெரியாதவர் என காட்டிக் கொள்வார்கள். அத்துடன் அமைச்சரை மீறி பா.ஜ.க.வுக்கு ஆதர வாக செயல்படுவார்கள். பா.ஜ.க.வின் அஜெண் டாக்களை அப்படியே தங்களது துறைகளில் அமல்படுத்துவார்கள். அதில் முக்கியமானவர் பள்ளிக்கல்வி துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரியான நந்தகுமார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொல்வதற்கு நேர் எதிராக இவர் செயல்படுவார்.
பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் சொன்னாலும், இவர் பள்ளிகளை திறக்க மாட்டார். அமைச்சர் காலாண்டுத் தேர்வு நடக்கும் என்றால், அமைச்சர் சொன்ன தேதியில் தேர்வுகள் நடக்காது. அதுமட்டுமல்ல, பா.ஜ.க. சொன்னபடி அமைச்சரின் உத்தரவையும் மீறி அ.தி.மு.க. ஆட்சியில் தொடக்கக் கல்வியையும், உயர்நிலைக் கல்வியையும் இணைக்க எடுத்த முடிவை கல்வித்துறையில் நந்தகுமார் அமல்படுத்துவார்.
ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வுதியத்தைக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் சொன்னால், அது முடியாது என நந்தகுமார் சொல்வார். அதையும் அவர் சாதாரணமாகச் சொல்ல மாட்டார். பல பேர் முன்னிலையில் அமைச்சர் சொல்வதை செய்ய முடியாது என வெளிப்படையாகவே சொல்வார். இதேபோன்ற நடவடிக்கையில் போன அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை செயலாளராக பணியாற்றிய உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அப்போது கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஓரங்கட்டி, தான்தான் ஆல் இன் ஆல் என்று மார்தட்டியதால் உடனடியாக ஜெயலலிதாவால் மாற்றப்பட்டார். இந்தி எதிர்ப்பு போன்ற சில விஷயங்களைத் தவிர கல்வித் துறையில் நந்தகுமார் பா.ஜ.க. சொல்வதைத்தான் அமல்படுத்தி வருகிறார்.
கல்வி தொலைக்காட்சிக்கு மணிகண்டபூபதி என்கிற ஆர்.எஸ்.எஸ்.காரரை தலைவராக நியமித்தார் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. உண்மையில் மணிகண்டபூபதியை அரசு நடத்தும் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைவராக நியமிக்க ஒரு குழுவை அமைத்ததும், அவரை அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைவராக நியமித்ததும் நந்தகுமார்தான். ஆனால் அந்த பழி முழுவதும் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மீது விழுந்தது.
சமீபத்தில் கல்வித்துறை தொடர்பாக 2 பெரிய டெண்டர்கள் முடிவு செய்யப்பட்டன. அந்த டெண்டர் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இதுபற்றி அமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என சொன்னபோது, "அமைச்சர் என்ன அமைச்சர்? நான்தான் இந்தத் துறையின் தலைவர்'' என நந்தகுமார் கூட்டத்தில் பேசியதோடு, அமைச்சருக்கு இந்த டெண்டர் பற்றி ஒரு வரி கூட தெரியாமல் பார்த்துக் கொண்டார்.
சமீபத்தில் முதலமைச்சர் கிண்டியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு திடீர் விசிட் சென்றார். அந்த விசிட்டிற்கு லோக்கல் அமைச்சர் மா.சு. வந்திருந்தார். ஆனால் சென்னை கலெக்டர் உஷா ராணி வரவில்லை. அவர் வேண்டு மென்றே வரவில்லையென நந்த குமாரின் நட்பு வட்டம் முதல்வரிடம் சொல்ல, முதல்வர் அவரை சேலத் திற்கு மாற்றிவிட்டார். உண்மையில் உஷாராணிக்கு முதல்வர் விசிட் பற்றி தகவல் சொல்லப்படவில்லை.
திடீரென சேலத்துக்கு மாற்றப் பட்டதால் சென்னையில் சிகிச்சையில் இருந்த உஷாராணியின் தாயார், கவனிக்க ஆள் இல்லாமல் மரணமடைந்து விட்டார். இதை முதல்வரிடம் தெரிவித்த உஷாராணி "நான் அன்றைய தினம் வெளியில் எங்கும் செல்லவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கில்தான் இருந்தேன்' என விளக்க, அதைக் கேட்ட முதல்வர் உடனடியாக விசாரணை செய்யச் சொன்னார்.
விசாரணையில் நந்தகுமாரின் நட்பு வட்டம், சித்திக் என்கிற அதிகாரி மூலம் நான் தகவல் கொடுத்தேன் எனச் சொல்லிவிட்டார். அதனால் தகவலை சொல்லாத சித்திக்கை வருவாய் துறையிலிருந்து ஜுனியர் அதிகாரியாக வணிக வரித்துறைக்கு மாற்றிவிட்டார். அந்த நட்பு வட்டம் ஒரு உயர் சமூகப் பிரிவை சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் முதலிடம் பிடித்தவர்.
மேற்படி நந்தகுமாரின் நட்பு வட்டத்துடன் செய்தித்துறை ஜெயசீலன், கல்வித்துறை நந்தகுமார், வீட்டுவசதித்துறை மக்வானா ஆகிய அதிகாரிகள் மற்றும் நூலகத்துறையின் இளம் பகவத் ஆகியோர் ஒரே டீமாக பணிபுரிகிறார்கள். இவர்கள்தான் கல்வி அமைச்சருக்கு எதிரான கருத்து உருவாவதற்கும் காரணமாக இருக்கிறார்கள். இதில் ஒரு சிலர் பா.ஜ.க.விடமும் விசுவாசமாக இருக்கிறார்கள் என கோபத்துடன் கூடிய குரல்கள் கோட்டையில் எதிரொலிக்கிறது. இவர்களை முதல்வர் அலுவலக அதிகாரிகள் சிலர் பாதுகாக்கிறார்கள். இந்த விவகாரம், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கிடையேயான பெரிய மோதலாக கனன்று சுழன்றடித்து வருகிறது என்கிறது கோட்டை வட்டாரம். நந்தகுமார் ஐ.ஏ.எஸ். மீது நிறைய புகார்கள் வருவதால் எந்நேரமும் மாற்றப்படலாம் என்ற பேச்சு கோட்டையில் எதிரொலிக்கிறது.
----------------------
இறுதிச் சுற்று!
தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில், பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறு வதற்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் அக்.31-ந் தேதி வழங்கினார். பத்திரிகைத்துறையில் 20 ஆண்டு காலம் பணிபுரிந்து 58 வயதைப் பூர்த்திசெய்யும் பத்திரிகையாளர் களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக 10,000 ரூபாய் வழங்கும் திட் டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்த திட்டத்தின்படி ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்கள் பலரும் ஓய்வூதியம் பெறுவதற்காக அரசிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முதல்கட்டமாக 41 பத்திரிகை யாளர்களை செய்தித்துறை தேர்வு செய்திருந்தது. அவர்களில் நக்கீரன் பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய எஸ்.பி.சேகர், பிழை திருத்துநராக பணிபுரிந்த சந்திரபாபு உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் கையால் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது செய்தித்துறை. அதன்படி, ஓய்வுபெற்ற 7 பத்திரிகை யாளர்களுக்கும் தனது கையால் ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமி நாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செய லாளர்களில் ஒருவரான சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் முதல்வருக்கு நக்கீரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
-இளையர்