காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரமுள்ள மக்கள் பாதுகாப்பான இடத் திற்கு செல்லவேண்டும் என டெல்டா மாவட்ட ஆட்சியர் கள் அவசர அவசரமாக உத்தரவு போட்டிருப்பது, தூர் வாரும் பணிகளில் நடந்துள்ள ஊழலை மறைப்பதற்காகத் தான் என விவசாயிகளும் பொதுமக்களும் ஆத்திர மடைகின்றனர். 

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கர்நாடக அரசின் சூழ்ச்சி, இயற்கையின் வஞ்சகம் என பல்வேறு காரணங்களால் இடையிடையே தண் ணீர் திறப்பு தள்ளிப்போனது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு இயற்கையின் ஒத்துழைப்போடு சரியான தேதியில் தண்ணீர் திறப்பு நடந்துவருகிறது. இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அதோடு கல்லணையையும் முதல்வர் ஸ்டாலினே தன் கையால் திறந்துவைத்து நானும் டெல்டாகாரன்தான் என பெருமைப் பட்டுக்கொண்டார். 

ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் மூன்று வாரங்களை கடந்தும்கூட கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லவில்லை, நீர்நிலைகளை நிரப்பவில்லை. அதேநேரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட கனமழையால் மேட்டூர் அணை நிரம்பியதால் அதிக அளவில் திறக்கப் பட்டுள்ள தண்ணீரைக்கொண்டு காய்ந்துகிடக்கும் நீர்நிலைகளை நிரப்பி, நிலத்தடி நீராதாரத்தை உயர்த்தத் திட்டமிடாமல் பத்திரமாக கடலுக்கு அனுப்ப எச்சரிக்கை விடுகிறார்களே என்பதுதான் விவசாயிகளின் கோபமும், வேதனையும்.

Advertisment

"மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையிலிருந்து கடைமடை வரை தடையின்றி செல்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் நிதியொதுக்கி ஆறுகள், கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை  தூர்வாருவது வழக்கம். இதற்காக தமிழக அரசு பலகோடி ரூபாய் ஒவ்வோ ராண்டும் ஒதுக்குகிறது. அந்தப் பணிகளில் பெருமள வில் முறைகேடுகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த ஊழலை மறைப்பதற்காகவே எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல் பாது காப்பாக கொள்ளிடம் வழியாக தண்ணீரை கடலுக்குக் கொண்டு சேர்க்கின்றனர்'' என வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள்.

farmers1

இதுகுறித்து நாகையைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், "இந்த ஆண்டுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்திற்கு டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் சுமார் 98 கோடி நிதி ஒதுக்கி தூர்வாரியதாகக் கூறியுள்ளனர். இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்காக சுமார் 60 கோடி ஒதுக்கி தூர்வாரியதாகக் கூறியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விவசாயப் பணிகள் முடிந்தவுடன் தூர்வாரும் பணிகளைத் தொடங்கவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஆனால் அரசு அதை கடைப்பிடிப்பதே இல்லை. 

Advertisment

இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் தூர்வாரும் பணிக்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. அதன்பிறகு டெண்டர் விடப்பட்டு பணிகளைத் தொடங்கியதுமே தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது. அதனால் அவசர கதியில் கண்துடைப்புக்கு செய்துவிட்டனர். கடைமடைப் பகுதியான எங்க பகுதியில் பெரும்பாலான வாய்க்கால்களைத் தூர்வார அரசு செவிசாய்க்காததால் விவசாயிக ளாகவே சொந்த நிதியில் தூர்வாரியுள்ளோம்.  

இன்னும் பெரும்பாலான ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை என்பதுதான் உண்மை. நடந்து முடிந்ததாகக் கூறும் பணிகளிலும்கூட தரமில்லை. முக்கிய நீர்வழித்தடங்கள் இன்னும் தூர்வாரப்படவே இல்லை. தூர்வாரும் பணிக்கான டெண்டர்களை கார்ப்பரேட் கம்பெனிகள் (அ.தி. மு.க. பிரமுகர்களுடையது) எடுத்து கமிஷன் அடிப் படையில் கைமாற்றிவிடுகின்றனர். அந்த வகையில் ஒரு பணி கிட்டத்தட்ட நான்கு கைகள்வரை மாறுகின்றன. அதனால் பணியில் தரம் இல்லை, அதிக அளவில் முறைகேடுகளும் நடக்கின்றன. இதைத் தவிர சி மற்றும் டி வாய்க்கால்களை தூர்வாருவதற்கு தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் 100 நாள் திட்டத்தின் கீழ் இந்த சி, டி வாய்க்கால்களை தூர் வாரிவிட்டு அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை சுருட்டிக் கொள்கின்றனர். 

கடந்த மார்ச் மூன்றாம் தேதி நாகைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நீர்நிலைகளில் உள்ள ஷட்டர்கள் எனப்படுகிற நீர் ஒழுங்கிகளை சீரமைப்பதற்காக நாகை மாவட்டத்திற்கு மட்டும் 32 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை. முதல் வரின் ஊரான திருக்குவளை, பனங்குடி, பாலையூர் என திருக்குவளை தாலுகா முழுவதிலுமே ஷட்டர் கள் சிதிலமடைந்து கிடக்கிறது. டெல்டா மாவட் டங்கள் முழுவதுமே இந்த நிலை இருப்பதாகக் கூறுகின்றனர். கர்நாடகா வெள்ளக்காலங்களில் தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை திறந்து விட்டு கணக்கு காட்டிவிடுகின்றனர். அதையாவது வறண்டு கிடக்கும் நீர்நிலைகள், ஏரி, குளம், குட்டை களில் நிரப்பியும், தடுப்பணைகளைக் கட்டியும் நீராதாரத்தை உயர்த்த எந்தவித திட்டமிடலும் இல்லாத அரசுகளாகவே இருக்கின்றனர். அதிகாரி கள் செய்யும் ஊழலுக்கு அரசியல்வாதிகளும், அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு அதிகாரி களும் உடந்தையாக இருந்து காவிரி நீரை கடலுக்கு அனுப்புகின்றனர்'' என்கிறார் ஆதங்கமாய்.

காவிரி கடைமடை பாசனதாரர் நல சங்கத் தைச் சேர்ந்தவரும், தமிழர் முன்னேற்றப் பேரவை பிரமுகருமான அரும்பூர் இளஞ்செழியன் கூறுகை யில், "ஒவ்வொரு ஆண்டும் தூர்வரும்போது அந்தந்த நீர்நிலைகளை பதிவேட்டில் உள்ளபடியே தூர்வாரவேண்டும் என்றுகோரிக்கை வைக்கிறோம், ஆனால் அப்படி செய்வதற்கு மறுக்கிறார்கள். பதி வேட்டில் உள்ளபடி தூர்வாரினால் நீர்நிலைகளி லுள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம்கண்டு அகற்றமுடியும். ஆனால் சாபக்கேடாக தூர்வாரு வதற்கான ஒப்பந்தத்தை பெரும்பாலும் அரசியல் வாதிகளே எடுப்பதால் ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்படுவதில்லை. நீர்வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பெரும்பாலானோர் மறைமுக ஒப்பந் தக்காரர்களாகவே மாறியுள்ளனர். தனிப்பட்ட முறையில் அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கமிஷன் அடிப் படையில் குத்தகைக்கு எடுத்து பணிகளைச் செய் வதால் பெரும்பகுதி நிதி ஊழலில் போய்விடுகிறது. 

வேளாண்மைத்துறை பொறியியல் பிரிவு மூலம் இந்த பணிகளை செய்தால் முறைகேடுகள் நடக்காது. ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பணத்தைச் சுருட்டுவதற்காகவே தனியார் ஒப்பந்தக்காரர்கள் மூலம் தூர்வாரும் திட்டத்தைச் செயல் படுத்துகின்றனர். மயிலாடுதுறை நகராட்சியிலுள்ள ஒவ்வொரு குளத்தையும் 10 கோடிக்குமேல் நிதியொதுக்கி சீரமைத்துள்ளதாகக் கூறுகின்றனர், அத்தனை குளங்களும் வறண்டு கிடக்கின்றன''’என்கிறார்.

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை விமலநாதன் கூறுகையில், "விவசாயிகளின் நீண்டகால கோரிக் கையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாபநாசம் தாலுகாவி லுள்ள வாழ்க்கை தூத்தூர் பகுதியில் ஒரு கதவணை கட்டவேண்டும் என்கிற ஒரு திட்டத்தை அறிவித் தார். தொடர்ந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி இதற்கான திட்டங்களை வடிவமைத்தார். இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று இப்போதிருக்கின்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். இந்த கதவணையின் முக்கியத்துவம் குறித்தான வரைவுகள் ஆதாரங்களோடு அரசிடம் இருக்கிறது. இந்த கதவணைகளை அமைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கனஅடி தண்ணீரை விரயமாக கடலில் பத்திரமாகக் கொண்டுசேர்க் கின்றனர். பாபநாசம் பகுதியில் வீரமாங்குடி கிராமத்திற்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏலாக்குறிச்சி கிராமத்திற்கும் இடையே கதவணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்த பொதுநல வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம், கட்டாயமாக அந்த பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என உத்தரவிட்டது. நாங்கள் ஓராண் டுக்குள் கதவணைகளை அமைக்கிறோம் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்தபிறகும், அந்த திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர்'' என்கிறார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டோம், “"மூன்று மாதங்கள்தான் பொதுப்பணித்துறைக்கு வரு மானம். அதைக்கொண்டுதான் ஒரு வருடம் மேனேஜ் செய்ய ணும்.  ஆறுகள், கிளை ஆறுகள் என மொத்தமுள்ள 23,500 கிலோமீட்டர் நீளத்தில் ஒவ்வொரு ஆண்டும் 5,100 கிலோமீட்டர் வீதம் தூர்வாரும் பணிகள் நடக்கிறது. ஒருமுறை தூர்வாரிய பகுதியை மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் தூர்வாரமுடியும். இப்படி சுழற்சிமுறையில் வரும்போது ஏற்கனவே தூர்வரப்பட்ட பகுதிகளில் செடி, கொடிகள், மண்டிவிடும். இதைத்தான் தூர்வாரவில்லை என விவசாயிகள் சொல்லுகின்றனர். அதிக தண்ணீர் திறக்கும்போது கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டு பாதிப்பை உண் டாக்கும். அதனால்தால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் செலுத்தி கரையை இறுக்கமாக்கி பிறகு அதிக தண்ணீரை அனுப்புவோம். தற்போது திடீரென அதிக தண்ணீர் திறக்கப்படுவதால் பாதிப்பை குறைப்பதற்காகவே கொள்ளிடத்தில் திறக்கப்படுகிறது. அதேபோல ஆன்லைன் முறை யில் நடக்கும் டெண்டரில் ஒளிவுமறைவு எதுவு மில்லை. டெண்டர் எடுத்தபிறகு திரைமறைவில் என்ன நடக்கிறது என்பது தெரியாது'' என்கிறார்கள்.

காரணங்கள் சொல்வதைத் தாண்டி, தண்ணீர் வீணாவதைத் தடுப்பதற்கான செயல்முறையில் கவனம் செலுத்த வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.