நான்கு மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் கோட்டாட்சியராக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரிஷப், தாமரைக்குளம் பகுதியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வுசெய்தபோது அரசு புறம்போக்கு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்டுக்கொடுத்திருப்பது தெரிந்து அதிர்ச்சி யடைந்தார். அதைத் தொடர்ந்து கெங்குவார்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்தபோது, சர்வேயர் சக்திவேல் தனது மனைவி பெயரில் அரசு புறம்போக்கு நிலத்தை பட்டா போட்டிருப்பது தெரிந்ததன்பேரில்... சக்திவேலை ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட் செய்தார்.

பின்புதான் பெரியகுளம் வட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வுசெய்ய சப்-கலெக்டர் அதிரடியாக களமிறங்கினார். தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறமுள்ள வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் கலெக்டர் மற்றும் எஸ்.பி. குடியிருப்பு, ஆயுதப்படை மைதானம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இக்கிராம சர்வே எண் 814, 2184, 2201, 1046, 1051 ஆகிய புல எண்களுக்குக் கட்டுப்பட்ட நிலங்களில் சுமார் 100 ஏக்கருக்குமேல் அரசு நிலங்கள் இருக்கிறது.

opsland

இந்த நிலங்களை முன்னாள் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான பெரியகுளம் மேற்கு அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளரான அன்னபிரகாஷ் தனது பெயரிலும் அவருடைய தந்தை வீரத்தேவர் உள்பட உறவினர்கள் பெயரிலும், 50 ஏக்கருக்கு மேல் பட்டா மாற்றியிருப்பது தெரிந்தது. மீதியுள்ள இடங்களும் அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

ஆண்டிப்பட்டி அருகே டி.வாடிப் பட்டியில் 56 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் கேரளாவைச் சேர்ந்த 5 நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்த நிலத்தில் சோலார் மின்னுற்பத்திக்கான ஏற்பாடுகளைச் செய்து மின்சாரம் உற்பத்தி செய்துவந்ததை மாவட்ட ஆட்சியர் கண்டுபிடித்துள்ளார். அதேபோல, பெரிய குளம் அருகே தாமரைக்குளத்தில் 47 ஏக்கர் அரசு நிலத்தை 50-க்கும் அதிகமான நபர்களுக்கு பட்டா போட்டுத் தந்துள்ள குட்டும் அம்பலமாகியுள்ளது.

இந்த முறைகேடுகளுக்கு முன்னாள் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) இருந்த ஆனந்தி, ஜெயப்பிரியா மற்றும் தற்போது தாசில்தாராக இருக்கும் கிருஷ்ணகுமார், ஏற்கனவே தாசில்தார்களாக இருந்த ரத்தினமாலா, மோகன்ராம், ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் சஞ்சீவ்காந்தி, தென்கரை உள்வட்ட நிலஅளவர் பிச்சைமணி உள்பட சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதையும் அறிந்த ஆர்.டி.ஓ. ரிஷப் அதிர்ச்சியானார். இவர்கள் அனைவருமே ஓ.பி.எஸ்.ஸின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசு புறம்போக்கு நில மோசடி குறித்து முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும் ரிக்கார்டு களை அனுப்பியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து கடந்த 4-ஆம் தேதி, அரசு புறம்போக்கு நிலத்தை அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார், போடி தாசில்தார் ரத்னமாலா, துணை தாசில்தார் மோகன்ராம், ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் சஞ்சீவ்காந்தி ஆகிய 4 பேரையும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் அதிரடியாக தற்காலிக பணிநீக்கம் செய்தார்.

Advertisment

“கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மதுரை அருகேயுள்ள பரவை அ.தி.மு.க. பேரூர் கழகச் செயலாளரின் மகள் ஆனந்தி, பெரியகுளம் ஆர்.டி.ஓ.வாக இருந்தபோதுதான் அந்த” பதிவேடு களை திருத்தம் செய்து முறைகேடு கள் நடந்தது. இது முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ். சின் அனுமதி யோடு நடைபெற் றது. அதன் அடிப்படையில்தான் அந்த அரசு புறம்போக்கு நிலங்கள் எல்லாம் ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ் உள்பட அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தாசில்தார்கள், சர்வேயர்கள், வருவாய் அதிகாரிகள், வி.ஏ.ஓ.க்கள் உட்பட அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.

opsland

இதற்காக பல லட்சங்களை அதிகாரிகள் கையூட்டு பெற்றுள்ளனர். அதோடு, தற்போது தேனி மாவட்ட வருவாய் அதிகாரியான (டி.ஆர்.ஓ.) ரமேஷும் இதற்கு துணைபோயிருக் கிறார். இப்படி மாவட்ட அளவிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் சுமார் 200 ஏக்கர் வரை அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய மதிப்பு சுமார் 300 கோடி வரை இருக்கும். அப்படி யிருந்தும் தற்பொழுது நான்கு வட்டாட்சியர்களை மட்டும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்களே தவிர, உயரதிகாரிகள் உள்பட கீழ்மட்ட அதிகாரிகள், நிலத்தை அபகரித்த அ.தி.மு.க. பிரமுகர்கள் மேல் இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றனர் மாவட்ட வருவாய் அதிகாரிகள் சிலர்.

இதுசம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேச னிடம் கேட்டபோது, “"கடந்த ஆறு மாதங்களாக விசாரணை செய்து வந்ததில் பெரியகுளம் வட்டத்தில் வடவீரநாயக்கன்பட்டி, கெங்குவார் பட்டி, தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ள விசயத்தைக் கண்டுபிடித்தோம். அந்த நிலங்களில் சர்வே செய்து கல் ஊன்றி விற்பனை செய்வதற்கும் வீட்டடி மனைகளாக விற்பனை செய்வதற்கும் தயாராகிவருகிறார்கள். அதோடு அந்த நிலத்திலிருந்த மண்ணையும் எடுத்து விற்பனை செய்திருக்கிறார்கள்.

இந்த விசயத்தில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னாள் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சும் துணைபோயிருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டுவருகிறது. அதனால் இந்த புகாரை பெரிய அளவில் விசாரிக்காமல் மூடி மறைக்க வாய்ப்புள்ளது. எனவே "இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அப்படிச் செய்தால்தான் அரசு நிலத்தை பட்டா போட்டு விற்பனை செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் யார் என்று வெளி உலகத்திற்குத் தெரியும்'’என்று கூறினார்

இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி விளக்கம் கேட்க பெரியகுளம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷை செல்மூலம் பலமுறை தொடர்புகொண்டும் லைனில் பிடிக்கமுடியாததால் அவரின் விளக்கத்தைப் பெற முடியவில்லை.

மாவட்ட கலெக்டர் முரளிதரனோ, "அரசு நிலத்தை பட்டா போட்டுக் கொடுத்ததற்கு உடந்தையாக இருந்த பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார், போடி தாசில்தார் ரத்னமாலா, துணை தாசில்தார் மோகன்ராம், ஆண்டிபட்டி துணைதாசில்தார் சஞ்சீவ்காந்தி ஆகிய 4 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறேன். அதோடு அரசு நிலத்தை பட்டா போட்டு விற்பனை செய்த நூறு ஏக்கரில், தொண்ணூறு ஏக்கரை கைப்பற்றி அந்த பட்டாக்களை கேன்சல் செய்துவிட்டேன். மீதியுள்ள இடங் களுக்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதோடு மாவட்ட அளவில் அரசு புறம்போக்கு நிலங்களையும் ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறேன். அதன் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலதி காரிகள் மேல் அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்றார்.

விஷயம் கைமீறிப் போவதைக் கண்டு அ.தி.மு.க. தலைமை, பெரியகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளரான அன்னபிரகாஷை கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.