விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை, குமுற வைத்திருக்கிறார்கள், ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள். விவகாரம் இதுதான்...

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி அருகே உள்ள நம்பர்ஒன் டோல்கேட்டில் இருந்து சிதம்பரம் வரை 155 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள நெடுஞ்சாலை, 2011-ல் இருந்து தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது.

farmersland

இந்த சாலையை 2013-ல் விரிவாக்கம் செய்ய 6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பணிகள் 2017-ல் தொடங்கப்பட்டன. இதில், ஜெயங்கொண்டம் காட்டுமன்னார்கோயில் ஆகிய நகரப்பகுதிகளில் மட்டும் புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப் படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக விவசாயிகளிடமிருந்து ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில், சூரிய மணல், சின்ன வளையம், துளாரங்குறிச்சி, அங்கராயநல் லூர் ஆகிய கிராமப்புறப் பகுதிகளிலும், ஜெயங்கொண் டம் நகர பகுதியிலும், மக்களின் வீட்டுமனை மற்றும் விவசாய நிலம் ஆகியவற்றை அரசு கையகப்படுத்தத் தொடங்கியது. இதற்காக, அந்தப் பகுதியில் ஏற்கனவே விற்பனை செய்யப் பட்ட இடத்தின் கூடுதல் விலை மதிப்பை வைத்து, அதன் அடிப்படையில் உரியவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஆனால், இங்குள்ள அரசு அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தங்கள் தர்பாரை நடத்தியதால், தங்கள் நிலத்துக்கு உரிய விலையைக் கேட்டுப் போராடிவருகிறார்கள், விவசாயிகளும் பாதிக்கப் பட்ட பொதுமக்களும்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜெயங்கொண் டம் விவசாயி செல்வமணி, "உடையார்பாளையம் பேரூராட்சி பகுதியில் சதுர மீட்டர் 6 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்த நிலத்தின் மதிப்பை, அதிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துளாரங்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் 1,650 ரூபாய் எனவும், ஜெயங்கொண்டம் நகராட்சிப் பகுதியில் வெறும் 108 ரூபாய் என்றும், ஏடாகூடமாக வழிகாட்டு மதிப்பை நிர்ணயம் செய்துள்ளனர். உடனே, உரிய இழப்பீடு வழங்கக்கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு கொடுத்தோம். இருந்தும் பல வருஷமா எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தநிலையில், சமீபத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சிப் பகுதியில் மேல்முறையீடு செய்த 26 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த கலெக்டர், சதுர மீட்டருக்கு 2,031 ரூபாய் 94 பைசா என, இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத் திட்ட அதிகாரிகள், அப்படிக் கொடுக்க முடியாதுன்னு மறுத்துவிட்டனர். இதனால் கோபமடைந்த விவசாயிகளான நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களும், சின்ன வளையம் அருகே நடைபெற்ற சாலைப் பணியைத் தடுத்து நிறுத்திப் போராடி வருகிறோம். எங்கள் நிலத்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர, வேறு வழியில்லை''’என்றார் விரக்தியாக.

farmersland

Advertisment

"மத்திய அரசு அதிகாரிகள் எங்களை பாடாய்ப்படுத்தி வருகிறார்கள். இழப்பீடு நிர்ணயம் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு ஒரு குழுவை அமைத்து, நீதி வழங்கவேண்டும். அதிகாரிகளின் குளறுபடிக்கு ஒரு உதாரணம், எங்கள் பகுதி யைச் சேர்ந்த அண்ணன்-தம்பி இருவரும் தங்கள் குடும்ப சொத்தைப் பாகம் பிரித்துக் கொண்டனர். அண்ணனின் நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பு சதுர மீட்டருக்கு 5,054 ரூபாய் என்று நிர்ணயம் செய்த அதிகாரிகள், அவரது தம்பியின் நிலத் திற்கு மட்டும் 33 ரூபாய் 50 பைசாதான் மதிப்பு என்று குறிப் பிட்டிருக்கிறார்கள். இதன் பின்னணியில் பணம் விளையாடு கிறது. பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் நிலத்தின் மதிப்பு மாயாஜாலமாய் உயரும்'' என்கிறார் பெரியபாளையம் சிவசாமி.

சாலைப் பணிகளை விரைந்து முடிப்பதில் அக்கறை காட்டும் ஒன்றிய அரசு, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் கறார்த்தன்மையைக் கடைப்பிடிக்கிறது. அதிலும் ஏகப்பட்ட குழறுபடிகள்.

ஜெயங்கொண்டம் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்களின் வாழ்க்கையை இப்படிப்பட்ட குழறுபடிகளால் கேள்விக்குறியாக்குகிறார்கள் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். எனவே, இதில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.