"அதிகாரிகளின் இதயத்தில் கூட எங்களுக்கான ஈரம் இல்லை'’என்கிறார்கள் வெலிங்டன் ஏரிப்பாசன விவசாயிகள்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது வெலிங்டன் நீர்த்தேக்கம். இதை எமனேரி என்றும் குறிப்பிடுவார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1923ஆம் ஆண்டு இந்த ஏரி உருவாக்கப்பட்டது. நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த ஏரியை நம்பி, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் ஏறத்தாழ 63 கிராமங்களைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்களும் வாழ் கின்றன.

farmers

மழையை மட்டுமே நம்பியுள்ள இந்த ஏரிக்கு நிரந்தர நீர்வரத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இதில் தேங்கும் மழை நீர் மட்டுமே பாசன முறையில் திறந்து விடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு, டிசம்பரில் பெய்த கன மழையால் ஏரியின் மட்டம் 29 அடிவரை நிரம்பியது. இதன் மொத்த கரை யின் உயரம் 32 அடி. ஏரிக்கரை பலவீனமாக இருப்பதால் நீரின் அளவு அவ்வப்போது குறைக்கப் படுகிறது.

Advertisment

அதன்படி இந்த ஆண்டு தண்ணீர் நிரம்பியதால் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா மூரியும், அப்போதைய அமைச்சர் சம்பத்தும் தண்ணீர் திறந்துவிட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி ஒரு மாதம் முழுமையான அளவு அனைத்து கால்வாய் பகுதிகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்பிறகு கடந்த இரண்டு மூன்று மாதமாக உயர்நிலைக் கால்வாய் என்று கூறப்படும் மேல்மட்டக் கால்வாய் பகுதிக்கு முற்றிலுமாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம், கீழ்மட்டக் கால்வாய் பகுதிக்கு பாசனத்திற்கு விடப்பட்ட தண்ணீரின் உபரி நீர், ஓடைப் பகுதிகளில் சென்று வீணாக ஆற்றில் கலக்கிறதாம்.

இதுகுறித்து, வெலிங்டன் ஏரிப்பாசனப் பகுதி, தமிழ்நாடு உழவர் முன்னணி தலைவர் சுப்பிர மணியன் நம்மிடம், "இந்த ஆண்டு வெலிங்டன் ஏரி தண்ணீரைத் தராமல், எங்கள் பகுதியைப் பாழாக்கிவிட்டனர். கடந்த பல ஆண்டுகளாக குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவியாய் தவித்தனர்.

Advertisment

இந்த ஆண்டு பெய்த கருணை மழையின் காரணமாக ஏரி நிரம்பியது. அதையும் கூட உரிய முறையில் பாசனம் செய்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விடவில்லை. இதனால் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பாசனவசதி பெறக்கூடிய கால்வாய் பகுதிகள் காய்ந்து வறண்டு கிடக்கின்றன. பொதுப் பணித்துறை அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கை வன்மையாகக் கண்டித்து, விவசாயிகளைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவதற்கும் தயாராகி வருகிறோம்''’என்கிறார் ஆவேசம் அடங் காமல்.

முருகன்குடி விவசாயி முருகனோ, "ஏரியில் குறைவான நீர் நிரம்பும் காலங்களில் அந்தத் தண்ணீரின் அளவைப் பொறுத்து, முறைவைத்து, எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீரை விட வேண்டும் என்று கவனித்து விடவேண்டும்.

ஆனால் இதையெல்லாம் அதிகாரிகள் கடைப்பிடிப்ப தில்லை. இதைக் கண்டித்து விவசாயிகள் போராட முனையும் போது, விவசாயிகளில் ஒருவரையே போராட்டத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டு மோதவிடுகிறார்கள்.

தற்போது ஏரி முழுதும் தண்ணீர் நிரம்பியும்கூட மெயின் கால்வாயில் உள்ள கொடிக்களம், கூடலூர், இறையூர், பெண் ணாடம், முருகன்குடி, கொசப்பள்ளம், வெண்கரும்பூர், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, கார்மாங்குடி போன்ற கிராமப் பகுதிகளுக்கு மூன்று மாதங்களாக தண்ணீர் விட வில்லை. ஆவினங்குடி பிரிவு அருகே ஷட்டர் போட்டு சுத்தமாக அடைத்துவிட்டார்கள். வாய்க்காலில் தண்ணீர் வராததால் அதன் கரைகளில் பொதுப்பணித் துறையினரால் வளர்க்கப்பட்ட மரங்கள் எல்லாம் கூட பட்டுப் போய்விட்டன. இதற்குக் காரணமான அதிகாரிகள் அனைவரின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்கிறார் அழுத்தமாய்.

farmers

மேல்அணைக்கட்டுப் பகுதி கண்காணிப்பாளர் கோவிந்த ராஜனிடம், இதுகுறித்து நாம் கேட்ட போது...“"விவசாயிகள் கேட்டுக்கொண்டபடியும் அதிகாரிகள் அனுமதியுடனும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்குமேல் எதுவும் கூற முடியாது''’என அலட்சியமாகவே பதில் சொன்னார்.

இதையடுத்து கடலூரில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணி மோகனிடம் நாம் பேசியபோது, "மூன்று மாதமாக மேல்மட்ட கால்வாய் பகுதிக்கு தண்ணீர் வரவில்லையா?''’ என்று வியப்போடு கேட்டவர்,“"இதுவரை இந்த விஷயம் என் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன்''’என்றார் பொறுப்பாக.

farmers

வெலிங்கடன் விவசாயிகளோ, "தொழுதூர் அணைக்கட்டைச் சரி செய்வதற்கு ஏகப்பட்ட கோடிகளை அரசு ஒதுக்கீடு செய்கிறது. அதைத் தாறுமாறாகச் செலவு செய்கிறார்கள். ஆனால் இந்த வெலிங்டன் ஏரியை அழகுபடுத்தி சுற்றுலா மையமாக்க வேண்டுமென்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். யாரும் இதைக் கண்டுகொள்ள வில்லை. எங்களுக்கான கருணை எந்த அதிகாரியிடமும் சுரக்க வில்லை''’என்றும் குமுறுகிறார்கள் ஆதங்கமாய்.

விவசாயிகளின் மனமும் அவர்களது பயிர்களைப் போலவே வாடிக் கருகிக்கொண்டிருக்கிறது.