கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு சட்டமன்ற மறு மதிப்பீட்டுக்குழு வருகை தந்திருந்தது. இந்தக் குழு மாவட்டத்தில் நடைபெறும் அரசின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து களஆய்வு செய்ததோடு, மாவட்ட அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இங்கு மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்திருந்தனர். ஆனால், திருவண்ணாமலை தொகுதி எம்.பி. அண்ணாதுரை (தி.மு.க.), ஆரணி தொகுதி எம்.பி. விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) இருவரும் வரவில்லை.
"ஏன் வரவில்லை' என திருவண்ணாமலை தொகுதி எம்.பி. அண்ணாதுரை தரப்பில் விசாரித்தபோது, ""எம்.பி.க்கு மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் மதிப்பும், மரியாதையும் தந்தால் தானே கீழ்நிலை அதிகாரிகள் மரியாதையை தருவார்கள். மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள், இளம் எம்.பி.ங்கறதால் மரியாதை தருவதில்லை. "மாவட்ட ஒருங்கிணைப்பு வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு'வின் தலைவராக எம்.பி. அண்ணாதுரையை நியமித்து மத்திய அரசு, மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதமும் அனுப்பி விட்டது. மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியில் செயல்படும் அனைத்து திட்டங்களும் எப்படிச் செயல்படுகின்றன என ஆய்வு செய்ய... அந்தக் கமிட்டி ஆண்டுக்கு 4 முறை எம்.பி. தலைமையில் கூடவேண்டும். எம்.பி.யாக பதவியேற்று 5 மாதங்கள் முடியப்போகிறது. இப்போதுவரை அந்தக்குழு கூட்டத்தை கலெக்டர் கூட்டவே யில்லை.
அதேபோல், "ஹலோ திருவண்ணாமலை' என்கிற ஆப் மாவட்ட நிர்வாகம் உருவாக்கி யுள்ளது. "இந்த "ஆப்'பில் பழைய எம்.பி.க்களின் பெயரே உள்ளது, புதிய எம்.பி.க்களின் பெயரை சேருங்கள்' என கலெக்டருக்கு பல முறை தகவல் தெரிவித்தும் இன்னமும் மாற்றம் செய்யவில்லை. இத்தனைக்கும் அதில் தினமும் செய்திகள் அப்டேட் டாகின்றன. இதுதான் அவர் எம்.பி. பதவிக்கு தரும் மரியாதை. அதேபோல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழை சம்பந்தப்பட்ட துறையின் கிளர்க் அளவிலான ஊழியர்கள் தான் கொண்டுவந்து எம்.பி.யிடம் தருகிறார் கள், அலுவலகத்தில் இருந்து பேசுவ தாக யாரோ ஒருவர் நிகழ்ச்சி பற்றி தகவல் தருவார் அவ்வளவுதான். எப்போதாவது எம்.பி.க்கான புரோட் டாக்கால்படி நிகழ்ச்சிக்கு அழைக் கிறார்கள். ஆளும்கட்சி சப்போர்ட் இருக்கிறது என்பதால் மாவட்ட உயர்அதிகாரிகளே எம்.பி.க்கான மரியாதையை தருவதில்லை என்பதால் பலதிலும் எம்.பி. கலந்துகொள்வ தில்லை'' என்றார்கள்.
ஆரணி எம்.பி. விஷ்ணு பிர சாத் தரப்பினரோ, ""6 எம்.எல். ஏ.க்களை உள்ளடக்கியவர்தான் ஒரு எம்.பி. ஆனால் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தரும் மரியாதை யைக்கூட எம்.பி.க்கு தருவதில்லை. தற்போது பிரதமர் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரதம் திட்டம், குடிநீர் மேலாண்மை திட்டம், இலவச சிலிண்டர் அடுப்பு வழங்கும் திட் டம் என மத்திய அரசின் நிதியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்ட நிகழ்ச்சிகளுக்குக்கூட எம்.பி.யை அழைப்பதில்லை'' என்றார்கள்.
இதுபற்றி ஆரணி எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான விஷ்ணு பிரசாத்திடம் கேட்டபோது, ""அரசின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் அது குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டு பயனாளிகளுக்கு தகவல் சொல்லப்பட்டு, அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு மந்திரி, கலெக்டர் என அனைவருக்கும் தரப்படுகிறது. எம்.பி.யான எனக்கும், எனது அலுவலகத்தில் அழைப்பிதழை கொண்டுவந்து தருகிறார்கள், எப்போது தருகிறார்கள் என்றால் நாளை நிகழ்ச்சி என்றால் முதல்நாள் மாலைதான் கொண்டு வந்து தந்துவிட்டு போன்வழியாக தகவல் சொல்கிறார்கள் அதிகாரிகள். அப்படியிருந்தால் எப்படி நிகழ்ச்சிக்கு வருவது, அதனால்தான் வர முடியவில்லை'' என்றார்.
திருவண்ணாமலை தொகுதி எம்.பி.யும், தி.மு.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளரு மான சி.என்.அண்ணாதுரையிடம் பேசியபோது, ""எம்.பி.க்கான புரோட்டாக்காலை அதிகாரிகள் கடைப்பிடிப்பதில்லை. நேரில் வந்துதான் அழைக்க வேண்டும் என்பதில்லை, குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட அதிகாரி போனிலாவது அழைக்க வேண்டும் அல்லவா? அதைக்கூட செய்வதில்லை'' என்றார்.
இதுபற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியிடம் விளக்கம் பெற முயன்றபோது, அவரது செல்போன் ரிங்போனது... யாரும் எடுக்கவில்லை.
அரசு அதிகாரிகள் வட்டாரத்தை நன்கறிந்த ஒருவரிடம் பேசியபோது, ""மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசாகவோ அல்லது கூட்டணியாகவோ இருந்துவிட்டால் எம்.பி.யை அழைப்பதில் பிரச்சினையில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சியாக இருக்கும் போது சிக்கலாகிவிடுகிறது. மாநிலத்தை ஆளும் கட்சியினர் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த மந்திரி, "நான் வரும் நிகழ்ச்சிகளுக்கு எதிர்க்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை அழைக்காதீர்கள்' எனச் சொல்வதால், பெரும் பாலான அதிகாரிகள் மாநில ஆட்சியாளர் களுக்கு பயந்து எம்.பி.யை சாதாரணமாக நடத்துகிறார்கள்.
2009 முதல் 2014-வரை ஆரணி எம்.பி.யாக இருந்தவர் காங்கிரஸ் கிருஷ்ணசாமி. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, இரண்டும் ஒரே கூட்டணியில் இருந்தன. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவராக ராஜேந்திரன் இருந்தார். வந்தவாசி சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, தேர்தல் பார்வையாளராக வந்த வடநாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி, வரம்பு மீறி செயல்பட அவரைப் பற்றி தேர்தல் ஆணையத்துக்கு புகார் எழுதி, கலெக்டருக்கான அதிகாரத்தைக் காட்டினார். அப்படிப்பட்டவர் ஆரணியில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரணி எம்.பி. கிருஷ்ணசாமியை இன்சல்ட் செய்துவிட்டார். கோபமாகி எம்.பி. என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசிடம் புகார் சொல்ல, மத்திய அரசு எடுத்த நடவடிக்கையில் கலெக்டராக இருந்த அவர் கதறி... பின்னர் மன்னிப்பு கேட்டார். அந்தளவுக்கு எம்.பி.க்களுக்கு அதிகாரம் உள்ளது'' என்றார்.
-து. ராஜா