அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு கடந்த 16 மாதங் களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இதனால் அவர்களும், அவர்களை நம்பியுள்ள குடும்பங் களும் தத்தளித்து வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அருகே அமைந்துள்ளது அரசு கலை அறிவியல் கல்லூரி. கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு பின்தங்கிய மாவட்டங்களில் கலை அறிவியல் உறுப்புக் கல்லூரிகள் திறப்பதற்கு முடிவுசெய்தது. அதனடிப்படையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 10 உறுப்புக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் இந்த கல்லூரி.
இங்கு 14 இளநிலை பாடப்பிரிவுகள், 5 முதுகலை பாடப்பிரிவுகளில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பயின்றுவந்த னர். இந்த கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் கள் 90 பேர், ஆசிரியரல்லாத அலுவலகப் பணியில் 22 நபர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கான ஊதியத்தை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கிவந்தது. இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும், அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்படும் என்றும், அதில் முதல்கட்டமாக 14 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்படும். மீதமுள்ள கல்லூரிகள் வரும் ஆண்டுகளில் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்படும், என்றும் அறிவித்தார்.
இதற்கான அரசாணை எண்: 36/28.2.2019-ல், 14 பாடப்பிரிவுகளில் ஒன்பது பாடப்பிரிவுகளுக்கு மட்டும் அரசாணையில் நிதி ஒப்பளிப்பு செய்து வெளியிடப்பட்டது. மீதமுள்ள 5 இளநிலை பாடப்பிரிவுகள், 5 முதுகலை பாடப் பிரிவுகள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் (நூலக உதவியாளர், ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர்) இவர்களுக்கு அரசாணையில் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள், பணியாளர்கள் கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரிடம் நேரில்சென்று முறையிட்டதோடு எழுத்து மூலமாகவும் கொடுத்துள்ளனர்.
இங்கேதான் பிரச்சனை தொடங்கியது. இதுகுறித்துப் பேசும் இக்கல்லூரி பணியாளர்கள், "இந்த நிலையில் கடந்த 2019-2020-ஆம் கல்வியாண் டில் மாணவர் சேர்க்கை துவங்கப்பெற்றது. அப் போது விடுபட்ட பாடப்பிரிவுகளில் மாணவர் களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் வழங்கப் படவில்லை. இந்த குறைகளைச் சுட்டிக்காட்டி மாணவர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் அப்போதையே பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனிடம் முறையிட்டோம். அவரது முயற்சியினால் கல்லூரி கல்வி இயக்குனரிட மிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் (கடிதஎண் 23541/ கியூ 2/2018 - நாள் 28-6-2019) "“சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ளலாம். விடுபட்ட பாடப்பிரிவுகளுக் கான அனுமதி விரைவில் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஐந்து ஆண்டுகள் கடந்தும் அந்த அரசாணை வரவில்லை.
பல்கலைக்கழகம் கடந்த 16 மாதங்களாக எங்களுக்கான ஊதியத்தை வழங்க மறுத்து வருகிறது. ஊதியம் வழங்கக் கோரி கடந்த ஓராண்டாகக் காத்திருப்பு போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம், கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம், மண்டல கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என பல்வேறுகட்ட போராட்டங் களை நடத்தியும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் கண்டு கொள்ளவேயில்லை. இந் நிலையில் ஊதியம் வழங்கக் கோரி விரிவுரையாளர்கள், பணியாளர்கள் 68 பேர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்துள்ளனர், இது ஒரு பக்கம்.
சம்பளம் வழங்காதது குறித்து அரசு உயரதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டால், சம்பளம் வரவில்லையென்றால் எதுக்கு அங்கே வேலை செய் கிறீர்கள்? வேலையை விட்டுப் போகவேண்டியதுதானே? என்று ஏளன வார்த்தைகளை பிரயோகிக் கிறார்கள். அரசாணை எண் 186-ன் படி அரசு கல்லூரிகளில் நிரந்தர பணியாளர்கள் நிரப்பப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நூலக உதவியாளர், ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகியோர் கல்லூரிகளில் நடைபெறும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்றவாறு அவர்களுக்கான பணியிடங்கள் வரும் கல்வி ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஐந்து வருடங்கள் கடந்தும் அரசின் உத்தரவின்படி பணியிடங்களை உருவாக்கி வழங்கப்படவில்லை.
தற்போது பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கல்லூரிக் கல்வி ஆணையரே பொறுப்புவகிப்பதால், அரசாணையில் விடுபட்ட மேற்படி 10 நபர்களை பல்கலைக் கழகத்திலுள்ள காலிப் பணியிடங்களில் பணியமர்த்தக் கோரி கல்லூரி கல்வி ஆணையருக்கு கடிதம் மூலமும் நேரிலும் முறையிட்டோம். அவர் பதிவாளரை போய்ப் பாருங்கள் என்று கூறினார், பதிவாளரைப் போய் பார்த்தோம். அவரோ “நீங்கள் அரசு கல்லூரிகளில் பணிபுரிகிறீர்கள். அதனால் இங்கு நீங்கள் வரவேண்டாம்' என்று எங்களை வெளியே அனுப்புகிறார். ஊதியம் இல்லாமல் படும் வேதனை சொல்லிமாளாது. கல்வித் துறை அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுகிறோம்'' என்கின்றனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டி லுள்ள வேப்பூர், அறந்தாங்கி, லால்குடி உட்பட பல கல்லூரிகளிலும் பணிபுரிபவர்கள் இதே பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கின்றனர்.