வ்வொரு தொழிலாளியும், தன்னுடைய மாதச் சம்பளத்திலிருந்து, தனது சந்தா தொகையாக 1.75 சதவீதமும், ஒவ்வொரு முதலாளியும் தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிக்காக, சந்தா தொகையாக 4.75 சதவீதமும் பணம் செலுத்தி வருவதால்தான், அந்தத் தொழிலாளி காப்பீட்டாளர் ஆகிறார். தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் செலுத்தும் மொத்த சந்தா தொகையும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மருத்துவ நலன்களுக்காக இயங்கிவரும் இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷனின் நிதி கணக்கில் சேர்ந்துவிடுகிறது. இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளின் தேவைக்கேற்ப, மருந்துகள் வாங்குவதற்கான நிதியை நியூடெல்லியில் உள்ள இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன் அனுப்பி வைக்கிறது.

டெல்லியிலிருந்து வரும் இந்த நிதியில்தான், தங்களுடைய ஆதாயத்துக்காக சிலர் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். மதுரை மண்டலத்தில் உள்ள 65 இ.எஸ்.ஐ. மருந்தகங்களுக்கு ரூ.13 கோடிக்கு மட்டுமே மருந்துகள் தேவைப்பட்ட நிலையில், ரூ.40 கோடிக்கு மருந்துகள் தேவையென்று, முறைகேடாக பட்டியல் தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டிருக்கின்றன.

medicine

நமக்குக் கிடைத்த தகவல்களோடு, மதுரை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகம் சென்றோம்.

Advertisment

medicine

மருந்து, மாத்திரைகள் சேமிப்பு மையத்தின் அலுவலர் கல்யாணி மூலம், கடந்த 12 ஆண்டுகளாக மருந்துகள் வாங்குவதில் நடந்துவந்த மோசடி, இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. எப்படி தெரியுமா? பொதுவாக, ஒருங்கிணைந்த மருந்து தேவைப்பட்டியலை, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் மருந்து, மாத்திரைகள் சேமிப்பு மையத்தின் அலுவலர் ஆகிய இருவரும்தான் தயாரிப்பார்கள்; கையெழுத்திடுவார்கள். மதுரை மண்டலத்திலோ, மருந்துக்கு பொறுப்பான அதிகாரிகளின் ஆலோசனையின்றி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலரும், அலுவலக கண்காணிப்பாளரும், தன்னிச்சையாக தயாரித்து அனுப்பி, மருந்துகளை வாங்கி வந்திருக்கின்றனர். இதையறிந்த கல்யாணி, விதிமுறைகளுக்கு மாறாக, ஆதாய நோக்கத்துடன் இருவரும் செயல்பட்டு வருவதை எதிர்த்திருக்கிறார். அதனால், பழிவாங்கும் நோக்கத்தோடு அவரை தத்தனேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்துவிட்டனர். நீதிக்குத் தண்டனையா? என்று வெகுண்ட கல்யாணி, மதுரை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். தற்போதைய பணியில், மனுதாரர் கல்யாணிக்கு எந்த தொந்தரவும் தரக்கூடாது என, இடமாறுதலுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்.

ஒரே நேரத்தில் ரூ.27 கோடிக்கு அதிக மருந்துகள் வாங்கியிருப்பதால் யாருக்கு என்ன பயன்? மருந்துகள் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்குத்தான் கொள்ளை லாபம். அந்த நிறுவனங்கள், சுகாதார துறையில் இந்த முறைகேட்டுக்கு யார் யாரெல்லாம் துணைபோகிறார்களோ, அவர்கள் அத்தனை பேரையும் செமத்தியாகக் கவனித்துவிடுகின்றன. தங்களுக்குக் கிடைக்கும் இந்த பெர்சன்டேஜுக்காகத்தான், மனசாட்சியே இல்லாமல், அரசாங்கத்துக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தும் வகையில், அதிகாரிகள் சிலர் செயல்பட்டிருக்கின்றனர். மருந்துகளைப் பாதுகாப்பதற்கும், வீரியம் குறையாமல் வைத்துகொள்வதற்கும், உரியவகையில் குளிர்சாதன வசதிகள் இல்லாத மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகத்தில், அதிக அளவில் வாங்கிய மருந்துகள், உபயோகமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, வீணாகிக் கிடக்கின்றன.

medicine""வழக்கு நிலுவையில் இருக்கும்போது என்னால் பேச இயலாது''’என்றார் இ.எஸ்.ஐ. மதுரை மண்டல மருந்து, மாத்திரைகள் சேமிப்பு மையத்தின் அலுவலர் கல்யாணி. அப்போது, மருந்து தேவைப் பட்டியலைத் தயாரித்த மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் டாக்டர் ஜான் ஆன்ட்ரூவை தொடர்புகொண்டபோது, லைனுக்கே வராமல் நம்மைத் தவிர்த்தார்.

‘ருசிகண்ட பூனையாக, 12 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்துகொண்டு, மருந்து தேவைப்பட்டியலைத் தயாரிப்பதில் மூக்கை நுழைத்து, விதிமீறலாக நடந்துகொண்டார்’ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் இ.எஸ்.ஐ. மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலக கண்காணிப்பாளர் அசோக்குமாரிடம் பேசினோம்.

""மருந்து தேவைப் பட்டியலை தயாரிக்கும் அதிகாரம் எனக்கு இல்ல. கையெழுத்து போடற இடத்துலயும் நான் இல்ல. மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் கொடுக்கும் பட்டியலை, சூப்பிரண்டுங்கிற முறையில, தங்களின் மேலான ஒப்புதல் வேண்டி சமர்ப்பிக்கப்படுகிறதுன்னு கவரிங் லெட்டர் போட்டு அனுப்புவேன். நாங்க அனுப்புற மருந்து தேவைப்பட்டியலை சென்னையில் உள்ள கமிட்டிதான் அப்ரூவ் பண்ணும். அந்தம்மா சொல்லுறது எல்லாமே பொய்யான குற்றச்சாட்டு. நியாயமா பார்த்தால், ரூ.55 கோடிக்கு மருந்து வாங்கியிருக்கணும். ஆனா... ரூ.35 கோடிக்குத்தான் வாங்கியிருக்கோம்'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து மதுரை மண்டல இ.எஸ்.ஐ. வட்டாரத்தில் விசாரித்தோம். ""அதிகார பலமுள்ள ஜெகஜ்ஜால அதிகாரிகளாயிற்றே! வருமானத்துக்கு அதிகமாக எப்படியெல்லாம் சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்பதை முழுமையாக விசாரித்தால்தான் இந்த அதிகாரிகள் அடங்குவார்கள். மதுரை மண்டலத்தின் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறதென்றால், சென்னை, கோவை, சேலம் மண்டலங்களின் நிலை எப்படியோ?''’என்று வேதனையை வெளிப்படுத்தினார்கள்.

"வழக்கை வாபஸ் வாங்கு'’என, சுகாதாரத்துறையின் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரையிலும், கல்யாணியை கடுமையாக மிரட்டிவருகிறார்களாம்.