புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை கண்காணிப்பு அலுவலரான  பொன்னையன் (இணை இயக்குநர் -உதவிபெறும் பள்ளிகள்) கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்களை ஒருமையிலும், தவறாகவும் பேசியதால் சர்ச்சை உருவாகியுள்ளது. 

Advertisment

இந்த நிலையில்தான் மீண்டும் 18-ஆம் தேதி வியாழக்கிழமை, வழக்கமான ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கண் காணிப்பு அலுவலர் பொன்னையன் தலைமை யிலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னிலையிலும் நடந்தது. 

Advertisment

இந்தக் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிதுநேரத்தில் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) ராஜேந்திரனிடம், "வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து அந்த பேப்பர்     களை வாங்கிட்டு வாங்க'' என்று சொல்ல, மாவட்ட அதிகாரியான மாவட்டக் கல்வி அலுவலர் கீழே இறங்கிவந்து பேப்பர்களை சேகரிக்கும்போது கண்காணிப்பாளர் ஏதோ சொல்ல, அதற்கு பதில் சொல்லாமல் பேப்பர் வாங்கிய மாவட்டக் கல்வி அலுவலரை, "செவிடா' என்று கேட்டார். உடனே அங்கிருந்த ஒரு பெண் வட்டாரக் கல்வி அலுவலர், ‘"ஏன் சார் நீங்க என்ன ஈ.என்.டி. டாக்டரா?''’ என்று கேட்க, வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்... "உங்கள் பேச்சே சரியில்லை சார்''’என்று கூறி வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவரும் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறி அரங்க வாயிலில் கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கூட்ட அரங்கில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கூட்டம் தொடர்ந்து நடந்தது.

தொடர்ந்து மனஉளைச்சலை ஏற்படுத்தும்விதமாகவும், வட்டாரக்கல்வி அலுவலர்களை தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடும் இணை இயக்குநர் மீது துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை யென்றால் தொடர்ந்து புறக்கணிப்போம் என்ற கோரிக்கையுடன் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெளியில் நிற்க, அங்கு மன்றம் சண்முகநாதன் உள்பட அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் வந்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு ஆதரவாகப் பேசியதுடன், இணை இயக்குநருக்கு கண்டன அறிக்கைகளும் கொடுத்தனர். மேலும் ஜெ.டி. பொன்னையன் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டங்கள் நடத்துவோம் என்றனர்.

Advertisment

இந்நிலையில் 19-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிவந்த நிலையில், கீரனூரில் தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷை சந்தித்த நிர்வாகிகளிடம், பொன்னையன் புதுக்கோட்டை மாவட்டக் கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார் என்றும், கூட்டத்தில் நடந்த சம்பவங்களுக்கு துறைரீதியாக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியதால் ஆர்ப்பாட்டம் திரும்பப் பெறப்பட்டது.

offices1

வட்டாரக் கல்வி அலுவலர்கள் சார்பில் பேசிய மகேஷ்வரன் நம்மிடம் கூறும்போது, “"கடந்த மாதம் நடந்த காணொலிக் காட்சி ஆய்வு தொடங்கியதுமே எல்லாரும் வந்துட்டானுங்களா என்று தொடங்கினார். தொடர்ந்து "மாவட்டமே பிராடு' என்றார். "மயிரு' என்று பேசினார். இப்படி ஏகவசனத்தில் பேசியவர் 500 ரூபாய்க்காக குழந்தைகளை அலையவிடுறாங்க என்று தமிழ்நாடு அரசின் திட்டங்களையும் குறைகூறினார். இதனால் எங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. அப்பவே அமைச்சர்களிடம் புகார் கொடுத்துட்டோம். ஆனால் அதன்பிறகு இந்த மாதம் நடந்த கூட்டத்தில் சரியாகப் பேசுவார் என்றுதான் கலந்துக்கிட்டோம். ஆனால் அவர் தொடர்ந்து பழையபடிதான் பேசினார். அதனாலதான் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்தோம். அதே நேரத்தில் 17-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் எங்கள் பள்ளி ஆய்வுகளைப் பார்த்து எங்களைப் பாராட்டினார். ஆனால் அதே ஆய்வுக் கூட்டத்தில் ஜெ.டி. வசைபாடுகிறார். இனிமேலும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்தடுத்த கூட்டங் களைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்''’ என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பொன்னையன் நம்மிடம், “"ஏழைக் குழந்தைகள் படிக்கவேண்டும். உயர் கல்விக்கு செல்லவேண்டும் என்றுதான் தமிழக அரசு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கிவரு கிறது. அந்த திட்டங்கள் சரியாகப்போகிறதா? அதன்படி மாணவர்களின் தரம் உயர்ந்துள்ளதா என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள்தான் ஆய்வு செய்யவேண்டும். ஆனால் பல பேர் அதனை சரிவரச் செய்வதில்லை. சரியான புள்ளிவிவரங்கள் அவர்களிடம் இல்லை. பலர் பள்ளி ஆய்வுக்கே போவதில்லை. இதனை எல்லாம் நான் கண்காணிப்பு அலுவலராக உள்ளதால் எனக்கு மேலுள்ள அதிகாரிகளுக்கும், அரசுக்கும் பதில் சொல்லவேண்டியுள்ளது. அதனால் வேலையைச் சரியா செய்யுங்க, பள்ளிகளை ஆய்வுசெய்யுங்க, மாணவர்களின் கற்றல் திறன் பற்றி ஆய்வுசெய்து பதிவேற்றம் செய்யவேண்டும். கற்றல் குறைபாடு, மாணவர்கள் இடைநிற்றல் போன்றவற்றை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுங்க என்று சொன்னால் யாரும் செய்வதில்லை. இதனால் பல இடங்களில் இடைநிற்றல் உள்ளது. இதையெல்லாம் கேட்பதால் என்மீது புகார் சொல்லிக்கொண்டி ருக்கிறார்கள். நான் வாங்கும் சம்பளத்திற்கு சரியாக வேலைசெய்கிறேன். ஏழைக் குழந்தைகள் படிக்கவேண்டும். அரசுத் திட்டங்கள் ஏழை மாணவர்களுக்கு போய்ச் சேரவேண்டும்''’என்றார். 

அதற்காக ஒருமையில் சக அலுவலர்களைத் திட்டுவது சரியாகுமா?