இந்தியாவின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. இயக்குநர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரின் மீதான பரஸ்பர லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகளால் சி.பி.ஐ.யின் நேர்மை காற்றில் பறந்தது. தொழிலதிபர் மொய்தீன் குரோசி தொடர்புடைய பணப்பரிவர்த்தனை வழக்கில் ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ.யின் டி.ஐ.ஜி. மனீஷ்குமார் சின்ஹாவுக்கு உத்தரவிட்டார் அலோக்வர்மா. அதன்படி அஸ்தானா மற்றும் ரா அதிகாரி சமந்த் கோயல் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ.
இந்த நடவடிக்கை கண்டு மிரண்டுபோன மோடியின் பிரதமர் அலுவலகம், அலோக்வர்மாவையும் அஸ்தானாவையும் கட்டாய காத்திருப்பில் அனுப்பி வைத்ததுடன் அவர்கள் இருவரின் அலுவலகத்தையும் சீல் வைத்தது.
மேலும், சி.பி.ஐ.யின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வரராவை நியமித்தார் பிரதமர் மோடி. பொறுப்பேற்றதும் முதல் வேலையாக மனீஷ்குமார் சின்ஹா உள்பட சி.பி.ஐ.யின் பல்வேறு நிலைகளில் முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த 13 உயரதிகாரிகளை அதிரடியாக இடமாற்றினார் நாகேஸ்வரராவ். இதில், நாக்பூருக்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார் சின்ஹா. இந்த இடமாறுதல்கள் சி.பி.ஐ.யில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனை ஜீரணிக்க முடியாத சின்ஹா, தனது இடமாறுதலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதமர் அலுவலகத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்களில் தகவல்கள் பரவி கிடக்கின்றன. இதனால் பிரதமர் மோடி உள்பட அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் அதிர்ந்து போயிருக்கின்றனர் என்கிறது டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.
சி.பி.ஐ.யுடன் நெருக்கமாக இருக்கும் உளவுத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து விசாரித்தபோது, ‘’தொழிலதிபர் குரோசிக்கு எதிரான பணபரிவர்த்தனை வழக்கை விசாரித்து வந்தவர் அஸ்தானா. சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையிலிருந்து குரோசியை விடுவிக்க அவர் லஞ்சம் பெற்றதாக ஒரு ரகசிய தகவல் அலோக்வர்மாவுக்கு கிடைக்கிறது. இதனை அடுத்து, அதனை ரகசியமாக புலனாய்வு செய்யுமாறு டி.ஐ.ஜி. மனீஷ்குமார் சின்ஹாவை பணித்தார் அலோக்வர்மா. அதன்படி ரகசிய விசாரணை நடத்திய சின்ஹாவிடம் ஹைதராபாத்தை சேர்ந்த சதீஷ்சனாபாபு சிக்கினார். அவரிடம் சி.பி.ஐ. பாணியில் சின்ஹா நடத்திய விசாரணையில், வழக்கிலிருந்து குரோசியை விடுவிக்க துபாயிலுள்ள மனோஜ்பிரசாத் உதவியுடன் அஸ்தானாவுக்கு 2 கோடி லஞ்சம் தரப்பட்டது. மேலும் 3 கோடி கேட்டு நிர்பந்தம் தந்தார் அஸ்தானா என்பதை கக்கினார் சதீஷ். இதனையே புகாராக சதீஷ் கொடுத்ததன் அடிப்படையில் அஸ்தானாவுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
மேலும், அஸ்தானாவுக்கு எதிரான இந்த ஊழல் புகார்களை விசாரிக்கும் பொறுப்பை மனீஷ்குமார் சின்ஹாவிடம் ஒப்படைத்திருந்தார் அலோக் வர்மா. சீரியசாக இதில் களமிறங்கிய சின்ஹா, சிலரை கைது செய்தார். பிரதமர் மோடிக்கும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கும் நெருங்கிய நண்பரான அஸ்தானா மீதே சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததையும், அது தொடர்பான சிலரை கைது செய்திருப்பதையும், அஸ்தானாவையும் கைது செய்ய முயற்சிப்பதையும் அறிந்த பிரதமர் அலுவலகம் ஆடிப்போனது. இந்த நிலையில்தான் அலோக்வர்மாவையும் அஸ்தானாவையும் பொறுப்புகளில் இருந்து விடுவித்ததுடன் நாகேஸ்வரராவை வைத்து சின்ஹாவையும் நாக்பூருக்கு தூக்கியடித்தனர். சி.பி.ஐ.யின் அதிகார அமைப்பில் பிரதமர் அலுவலகம் தலையிடுகிறது என்கிற ஆத்திரம்தான் தனது இடமாறுதலை எதிர்த்து சின்ஹாவை வழக்குப்போட வைத்திருக்கிறது'' என்று விவரித்தனர்.
தொடர்ந்து நம்மிடம் பேசிய உளவுத்துறையினர், ""வழக்குப் போட்டிருக்கும் சின்ஹா, அஸ்தானா விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் எப்படியெல்லாம் தலையிட்டது என பல வில்லங்கங்களை தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, பிரதமரின் நம்பிக்கைக்குரியவரான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல், அஸ்தானா விவகாரத் தில் தொடர்புடைய 2 புரோக்கர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். அதனால்தான் அஸ்தானாவின் வீட்டை சோதனையிட எங்களுக்கு தடை விதித்தார் அஜீத் தோவல்.
மேலும், ""சதீஷ்சனாபாபுவிடம் நடத்திய விசாரணையில், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஹரிபாய்சௌத்ரிக்கு பல கோடிகள் லஞ்சம் தரப்பட்டிருப்பதும் எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. அதேபோல, மத்திய புலனாய்வு ஆணையர் (சி.வி.சி.) கே.வி.சௌத்ரியை சதீஷ்சனா பாபு சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு, சதீஷை தொடர்புகொண்டு மத்திய சட்டத்துறை செயலாளர் சுரேஷ்சந்திரா பேசியிருக்கிறார். தவிர, இந்த லஞ்ச விளையாட்டில் தொடர்புடைய "ரா' அதிகாரி சாமந்த் கோயல், சி.பி.ஐ. விசாரித்துவரும் இந்த விவகாரத்தை பிரதமர் அலுவலகம் கவனித்து வருவதாகக் கூறிய பேச்சுக்களின் பதிவுகளை சேதப்படுத்தியுள்ளனர். அதில் இன்னும் பல ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன.
இந்த நிலையில்தான் அஸ்தானாவை விசாரித்த குழுவில் இருந்த அனைவரையும் மொத்தமாக மாற்றிவிட்டனர். அஸ்தானா விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் மனோஜ்பிரசாத்திடம் நடத்திய விசாரணையில், மனோஜின் தந்தை தினேஷ் பிரசாத் மற்றும் ராவின் இணைச்செயலாளராக இருந்த சோமேஷ் இருவருடனும் அஜீத்தோவலுக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததும் தெரிய வந்துள் ளது. அதேசமயம், அஸ்தானாவுக்கு எதிராக எஃப்.ஐ. ஆர். பதிவான தகவலை அஜீத் தோவலுக்கு தெரியப்படுத்தினார் இயக்குநர் அலோக்வர்மா. அன்று இரவு, தன்னை கைது செய்யாமல் தடுக்க வேண்டும் என அஜீத்தோவலை வலியுறுத்தியுள்ளார் அஸ்தானா. இப்படி பல அதிர்ச்சித் தகவல்களை தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் மனீஷ்குமார் சின்ஹா. இவைதான், தற்போது பிரதமர் மோடி மற்றும் பிரதமர் அலுவலக உயரதிகாரிகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது'' என்று சுட்டிக் காட்டுகின்றனர் உளவுத்துறையினர்.
அஸ்தானாவுக்கு எதிரான வழக்கைப்போல, தமிழக அமைச்சர்களுக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் எதிரான குட்கா ஊழல் வழக்கையும் மனீஷ்குமார் சின்ஹாவிடம்தான் ஒப்படைத்திருந்தார் அலோக்வர்மா. குட்கா ஊழலின் ஆணிவேர் வரை கண்டறிந்து அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் பலரையும் கைது செய்யும் நடவடிக் கையை எடுக்க அலோக்வர்மாவின் அனுமதியை கேட்டு காத்திருந்தார் சின்ஹா. அதற்கான ஆவணங்களும் அலோக்வர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தான், சின்ஹாவை நாக்பூருக்கு தூக்கி யடித்த நாகேஸ்வரராவ், சின்ஹா வகித்த பதவியில், சண்டிகார் டி.ஐ.ஜி. கவுபா ரங்கீயை நியமித்துள்ளார். இவரிடம்தான் தற்போது குட்கா ஊழல் விவகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களுக்கும் நாகேஸ்வரராவிற்கும் ஏற்கனவே நெருங்கிய தொடர்பு இருப்பதால் குட்கா ஊழலில் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு நெருக்கமான அதிகாரிகளும் இனி சிக்க மாட்டார்கள். அதற்கு முன்னோட்டம்தான் சி.பி.ஐ.தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிகிறது. சின்ஹாவின் மாற்றம் குட்கா வழக்கில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்'' என்கிறார்கள் சி.பி.ஐ. வழக்குகளை ஆராயும் வழக்கறிஞர்கள்.
அஸ்தானா விவகாரம் குறித்து மேலும் விசாரித்தபோது, ""அஸ்தானாவுக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் ரா அதிகாரி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை "ரா'வின் உயரதிகாரிகள் ரசிக்கவில்லை. பிரதமர் மோடியைச் சந்தித்து புலம்பித்தள்ளியிருக்கிறார் "ரா' அமைப்பின் தலைவர் அணில்குமார் தஸ்மானா. மோடியுடனான அந்த சந்திப்பில், துபாயில் இயங்கி வந்த "ரா' அமைப்பின் மொத்த செயல்பாட்டையும் பொது வெளியில் சி.பி.ஐ. பகிரங்கப்படுத்தியதால், பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். சி.பி.ஐ. இப்படி செயல்பட்டால் "ரா' அமைப்பையே மொத்தமாகக் கலைத்துவிடலாம்.
சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ள சமந்த்குமார் கோயல் "ரா'வின் இரண்டாம்நிலை அதிகாரி. துபாய் நெட்வொர்க்கின் இயக்குநராக இருந்தவர். மகேஷ்பிரசாத், சோமேஷ் பிரசாத் இருவரும் ரா அமைப்பின் முன்னாள் அதிகாரியின் மகன்கள். அந்த அதிகாரியும் துபாய் நெட்வொர்க்கின் தலைவ ராக செயலாற்றியவர். மகேஷும் சோமேஷும் ரா அமைப்பிற்கு பல தகவல்களை தந்து உதவியிருக்கிறார்கள். இருவருமே சமந்த்குமார் கோயலுடன் தொடர்பில் இருந்தவர்கள்தான். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை "ரா' அதிகாரிகள் யாருமே ரசிக்கவில்லை' என மோடியிடம் ஆதங்கப் பட்டிருக்கிறார் தஸ்மானா. இதனையடுத்தே, அலோக் வர்மாவை தனது அலுவலகத்துக்கு வரவழைத்த மோடி, அஜீத் தோவலை சந்திக்குமாறு கட்டளை யிட்டிருக்கிறார். அதன்படி அஜீத் தோவலை சந்தித்துள்ளார் அலோக் வர்மா. அப்போது, "சி.பி.ஐ.க்கு உங்களை நான்தான் கொண்டுவந்தேன். ஆனா, நீங்கள் ரா அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்கிறீர்கள். இது எங்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் தெரியுமா? பேசாமல் பதவியை ராஜினாமா செய்யுங்கள்' என கட்டளையிட்டுள்ளார். ஆனால், வீட்டுக்குச் சென்ற அலோக் வர்மா ராஜினாமா கடிதம் அனுப்பவில்லை. கடிதம் வரும் என எதிர்பார்த்த பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு ஏமாற்றம். உடனே வர்மாவை செல்ஃபோனில் தொடர்புகொண்டிருக்கிறார் அஜீத்தோவல். அவரது லைனை அட் டெண்ட் பண்ணவில்லை வர்மா. இதனையடுத்தே, அலோக்வர்மாவை கட்டாயமாக விடுவிக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்தது'' என்கின்றன டெல்லி தகவல்கள்.
அஸ்தானா விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவதில்லை என்கின்ற முடிவில் பல்வேறு காய்களை நகர்த்தியபடி இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதற்கு வலிமை சேர்க்கும் விதமாக மோடி யின் எதிரிகளான முன்னாள் அமைச்சர்கள் யஸ்வந்த் சின்ஹா, அருண் சோரி உள்ளிட்ட பலரும் கை கோர்த்துள்ளனர். சி.பி.ஐ.யை வைத்து அரசியல்கட்சித் தலைவர்களை பயமுறுத்தி வந்த மோடி அரசே, தற்போது சி.பி.ஐ.யை கண்டு பயப்படத் தொடங்கியுள்ளது.
-இரா.இளையசெல்வன்