முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மனுவில், திருவொற்றியூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.குப்பன், அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களின் நிலங்களை அபகரித்து, தன்னுடைய மனைவியின் தங்கை பெயரிலும், தன்னுடய பினாமி பெயரிலும் பதிவு செய்துகொண்டு உரிமையாளர்களுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மணலியில் உள்ள சடையங்குப்பம் பகுதியில் 3 ஏக்கர் கிராம நத்தம் நிலமாக இருந்ததை, அதே பகுதியில் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 80 பேர் சேர்ந்து, 1986-ம் ஆண்டு சர்வே எண் 29/1-ல், ஆறுமுகம், ஜெகநாதன் ஆகியோரிடமிருந்து வீட்டு மனைகளாக திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கிரையம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சில நிறுவனங்கள், மணலியில் காலி இடம் இருந்தால் வாடகைக்கு வேண்டும் என திருவொற்றியூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த குப்பனிடம் கேட்டுள்ளனர். அவர், தனது வலதுகரமாகச் செயல்பட்டுவரும் திருவொற்றியூர் நகரச் செயலாளர் ஜெகனிடம் இதுகுறித்துக் கேட்டதும், அவரோ, சடையங்குப்பம் பகுதியில் இந்த அனல் மின் நிலைய ஊழியர்கள் வாங்கியிருந்த 3 ஏக்கர் நிலத்தை வளைத்துப்போட யோசனை தெரிவித்துள்ளார். அவரது யோசனையை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. குப்பன், வி.ஏ.ஓ.விடம் பேசி, வி.ஏ.ஓ.வுடன் இணைந்து வளைத்துப்போடும் வேலையில் இறங்கியுள்ளார். அதன்படி, குப்பன் மச்சினிச்சி விஜயலட்சுமி பெயரில் 18 மனைகளும், வி.ஏ.ஓ. மனைவி வாசுகி பெயரில் 3 மனைகளும், ஜெகன் பெயரில் 15 மனைகளும், குப்பன் பினாமிகளான பிரபு ராஜேஸ், தணிகைவாசன் ஆகியோர் பெயர்களில் 50 மனைகளுமாக மாற்றியெழுதி அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த விவகாரம் தெரிந்தவுடன் இடத்திற்கு உரிமையாளர்களான அனல் மின் நிலையப் பணியாளர்கள், "இது எங்களுக்குச் சொந்தமான இடம்" என்று கேட்டதற்கு, "பிரச்சனை செய்யாமல் இங்கிருந்து போயிடுங்க, இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்" என்று எம்.எல்.ஏ.வாக இருந்த குப்பனும், கூட்டாளி வி.ஏ.ஓ தனசேகரனும் இணைந்து மிரட்டி யுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த இடம் சொந்தம் என்றும், அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்புக்குப் பிறகும் இன்று வரையிலும் குப்பன் எம்.எல்.ஏ.வின் மூத்த மகனான கார்த்திக், ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்துவருவதாக வீட்டு மனை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ரவீந்திரநாத் கூறுகையில், "எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பணியிலிருந்தபோது அந்த இடத்தை நாங்கள் வாங்கினோம். எங்கள் இடத்தை அவர்கள் ஆக்கிரமித்து வாடகைக்கு விட்டுவருகிறார்கள். தற் போது நாங்கள் எங்களுடைய பணி ஓய்வுக்காலத் தில், வாங்கியுள்ள இடத்தையும் விட்டுவிட்டு நடுத்தெருவில் நிற்கிறோம். எங்களுக்கு விடிவு காலத்தை இந்த அரசு மட்டுமே வழங்க முடியு மென்று நம்புகிறோம்" என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ. குப்பனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "கடல் நீரில் வீடு பறிபோன 1,400 பேருக்கு நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பட்டா கொடுத்தது. அதை நான் ஏன் பிடித்துவைக்க போகிறேன். என் மனைவியின் தங்கை பெயரிலும், பினாமி பெயரிலும் இருப்ப தாகக் கூறுவதெல்லாம் பொய்யான தகவல்" என்றார். இதுதொடர்பாக வி.ஏ.ஓ. மார்க்கிரேட் டிடம் கேட்டபோது, "இதுவரையிலும் இது தொடர்பான விவகாரம் எனக்குத் தெரியாது'' என் றார். மாவட்ட ஆட்சியர் டாக்கர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் கேட்டபோது, "இது தொடர்பாக விசாரித்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
"இந்த இடம் கடல் நீரில் பாதிக்கப்பட்டவர் களுக்கு கொடுக்கப்பட்டது என்றால் எப்படி எம். எல்.ஏ. குப்பனுடைய மனைவியின் தங்கை பெயரில் வீடு உள்ளது? அதேபோல, குப்பனின் பினாமியான ஜெகனிடம் கேட்டால், "இது என்னுடைய பூர்வீகச் சொத்து. இங்கு குப்பன் சாருக்கும் இடம் உள்ளது'' என்றார். இப்படி மாற்றி மாற்றிப் பதில் சொல்வ திலிருந்தே இந்த விவகாரத்தில் தில்லாலங்கடி செய்தது யாரென்பது உறுதியாகத் தெரியவரு கிறது. சென்னை உயர் நீதிமன்றமும் இதுகுறித்து தெளிவான தீர்ப்பை அளித்துள்ள நிலையில், இன் றைய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து உரிய வர்களிடம் நிலத்தை மீண்டும் ஒப்படைக்குமா?