2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, 2016-ல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்து திருச்சி சுற்று வட்டார வியாபாரிகளி டையே குமுறல் எழுந்துள்ளது. பெரிய கடை, சிறிய கடை வித்தியாசம் பார்க்கப்படுவதோடு, அதிகாரிகள் பணம் பார்ப்பதற்கு மட்டுமே இந்தச் சட்டம் என்ற குமுறல் எழுந்துள்ளது.
இதுகுறித்து நாம் சந்தித்த திருச்சி மாநகர் மாவட்ட டீ, காபி, டிபன் கடை வர்த்தக சங்கத்தின் அமைப்புச் செயலாளர் இராவுத்தர் ஷா, "கடந்த 40 வருடங்களாக இந்த சங்கத்தை நடத்திவருகிறோம். உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் டீ, காபி, டிபன் கடை உள்ளிட்டவற்றை நடத்தி வருபவர்கள், அங்கீகாரம் பெறவேண்டும். ஆரம்பத்தில் 300 ரூபாய் வாங்க வேண்டிய இடத்தில் 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிக்கொண்டு உரிமம் வழங்கினார்கள். 2ஆயிரம் கொடுத்தவர்கள் 5 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எனவே நாங்கள் உரிமம் பெறமாட்டோம் என்று தெரிவித்து வந்தோம். அப்போது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியாக இருந்த செந்தில், எங்களை அழைத்துப் பேசி "லஞ்சம் வாங்காமல் உரிமம் பெற நடவடிக்கை எடுக் கப்படும்' என்று அவர் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் 450 பேருக்கு உடனடியாக அனுமதி பெறப்பட்டது. பிறகு இங்கு உணவு பாதுகாப்பு நியமன அலுவலராக பணியாற்றிய சித்ரா, கடைகளுக்கான உரிமத்தை காலமதாமதம் செய்யாமல் கொடுத்துவிடுவார்.
கடந்த மாதம் 9 கடைகள் மட்டும் விடுபட்டிருந்த நிலையில்... அதற்கான அங்கீகாரம் பெற தற்போது உணவு பாது காப்பு அலுவலராக இருக்கும் ரமேஷ் பாபுவை அணுகியபோது, "அலுவலகத் திற்கு வரவேண்டாம் வீட்டிற்கு வாங்க' என்று சொல்லியனுப்பினார்.
இரண்டு பஸ் மாறி, தினமும் 3 முறை 4 நாட்கள் அலைந்தேன். எனக்கு டூவீலர் ஓட்டக்கூட தெரியாது. ஒருநாள் திருச்சி ஜங்ஷனில் மிட்டாய் வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. அதில் ரமேஷ்பாபு கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன். அப்போது அவருக்கு அருகில் சென்று, யாரும் இல்லாதபோது "தினமும் என்னை இப்படி அலையவிடுகிறீர்களே... அந்த அங்கீகாரத் தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தால் என்ன?'' என இயலாமையைக் கூறினேன். அருகிலிருந்த உதவியாளரை அழைத்து, "இந்த ஆள ஜீப்ல ஏத்து' என்றுகூறி அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மதியம் 3 மணிக்கு அழைத்துச் செல்லப் பட்டு மாலை 7 மணிக்கு அந்த உரிமங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்தனுப்பினார். இந்த நிகழ்வு குறித்து நான் உடனடியாக சென்னையி லுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவத்துறை ஆணையருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்தேன்.
கொரோனா காலத்தில் போதிய வருமானமில்லாமல் பூட்டிய கடைக்கு வாடகை செலுத்தி, மின் கட்டணம் செலுத்திவந்தோம். தற்போது இந்த உரிமம் பெறுவதற்கு ஒருநாள் தாமதமானாலும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது''” என்று வருத்தத்துடன் கூறினார்.
அதேபோல் "சிறிய அளவிலான கடைகளில் மட்டுமே உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் கள் சோதனை செய்கின்றனர். பெரிய அளவிலான கடைகளை ஆய்வு செய்வதில்லை. அதற்குப் பதிலாக எதெல்லாம் பெற முடியுமோ அதைப் பெற்றுக்கொண்டு விட்டுவிடுகின்றனர்'' என்று தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார்.
திருச்சி உணவுப் பாதுகாப்பு அலுவலரான மருத்துவர் ரமேஷ் பாபு, கடந்த ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட் டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததால்தான் அவர் திருச்சிக்கு மாற்றப்பட்டார். தற்போது கொரோனா தளர்வுகள் ஏற்பட்ட நிலையில், திருச்சியில் அதிரடியாக ஆய்வு செய்துவருகிறார் மருத்துவர் ரமேஷ்பாபு.
இதுகுறித்து நியமன அலுவலர் ரமேஷ் பாபுவைத் தொடர்புகொண்டபோது, “"நான் சிறிய கடை, பெரிய கடை என்று பார்ப்பதில்லை. எல்லா கடைகளிலும் சோதனை நடத்தி உடனுக்குடன் அவர்கள் மீதான சட்டரீதியான நடவடிக்கை எடுத்திருக்கேன். உதாரணத்திற்கு ஏழாம் சுவை, மதுரை ருச்சி, சூர்யா ஓட்டல், ராஜா டிபன் கடை, ஆறுமுகம் ஓட்டல், பனானா லீப் உள்ளிட்ட பெரிய அளவிலான உணவுக் கடைகளில் சோதனை செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அவர்களுடைய கடைகளில் உள்ள உணவுப் பண்டங்களின் மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நான் திருச்சிக்கு வந்து பணியை துவங்கிய போது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு உள்ளிட்டவர்கள் என்னை அழைத்துப் பேசினார் கள். ஒருசில காரியங்களுக்கு நான் அவர்களோடு ஒத்துழைக்கவில்லை. எனவேதான் இதுபோன்ற தவறான கருத்துகளைப் பரப்புகின்றனர். இன்றுவரை நான் என்னுடைய பணியை சரியாகவே செய்துவருகிறேன்''’என்று தெரிவித்தார்.