நாகரிக மாற்றத்தால், "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற ஆதிக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும், இன்னும் கிராமப்புறங்களில் அதன் தாக்கம் நீடித்தபடியிருக்கிறது. ஜாதிப் பாகுபாடில்லாமல் சகோதர உணர்வோடு பழகுவதை மாணவர்களி டையே கற்றுத்தர வேண்டிய கல்விக்கூடத்தில் புகுத்தப் பட்டுள்ள ஜாதி அடையாளக் கயிறு கட்டும் பழக்கம், மாணவன் ஒருவனைப் பலிவாங்கியிருப்பது ஜீரணிக்க முடியாத வேதனை.

gtschool

நெல்லை மாவட்டம், அம்பை அருகிலுள்ள பள்ளக்கால் பொதுக்குடி கிராமத்தின் அரசு மேல்நிலைப் பள்ளியில், பாப்பாக்குடி, அடைச் சாணி உள்ளிட்ட அக்கம்பக்க கிராமங்களின் மாண வர்கள் சுமார் 1200க்கும் மேற்பட்டவர் பயின்று வருகின்றனர். கிராமப்புறத்திலுள்ள அரசுப் பள்ளியான அதற்கு, கல்வித்தரத்திற்காக அவார்டும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிராமங்களி லுள்ள பலதரப்பட்ட பிரிவைச் சார்ந்த மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில், காலப்போக்கில் மாணவர்கள் தங்களது ஜாதியை அடையாளப் படுத்திக் கொள்ளும் வகையில், கைகளில் பல்வேறு நிறங்களைக் கொண்ட ஜாதிக் கயிறுகளைக் கட்டிக் கொண்டு கெத்தாக வருவதுண்டாம். கிராமப்பகுதி என்பதால் இந்தக் கயிறு விவகாரம் கூடாது என்று கட்டுப்படுத்தினால் அது பிரச்சினையைக் கிளப்பிவிடுமோ என்ற தடுமாற்றம் காரணமாக பள்ளி ஆசிரியர்களும் இதனைக் கண்டுகொள்வ தில்லையாம். (தடை காரணமாகவும், பள்ளி மாணவர்கள் என்பதாலும் அவர்களின் எதிர்காலம் கருதி பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது)

Advertisment

gtschool

இந்த நிலையில் ஏப்ரல் 25 அன்று மதிய உணவு இடைவேளையின்போது, 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கையில் கயிறு கட்டிக்கொண்டு வருவதைப் பார்த்த ப்ளஸ் 2 மாணவன் ஒருவன், "ஓங்கையில, ஏம்ல கயிறு கட்டிக்கிட்டு வர்ற? நாங்க தாம்டே கயிறு கட்டணும். நீ கட்டக்கூடாது" என்று கேள்வி எழுப்பியுள்ளான். இருவருக்கிடையே வாக்குவாதமாகி, கடுமையாக ஒரு வரையொருவர் திட்டிக்கொண்டதில், ப்ளஸ் 2 மாணவனுடன், அவனது தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஓர் அணியாகச் சேர, அவர்களில் சிலர் கடும் கோபத்தோடு 11-ஆம் வகுப்பு மாணவனைத் தாக்கியிருக்கிறார்கள். தங்கள் வகுப்பு மாணவன் மீதான தாக்குதலை அறிந்ததும், 11-ஆம் வகுப்பிலுள்ள சக மாணவர்கள், தங்கள் நண்பனைத் தாக்கிய ப்ளஸ் 2 மாண வர்களோடு மோத, சிறிது நேரத்தில், இருதரப்பு மாணவர்களும் ஒருவரை யொருவர் பெல்ட்டால் மிகக்கடுமையாகத் தாக்கியதோடு, அங்கு கிடந்த கற்களையும் எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்தனர். இந்தச் சண்டையில் பாப்பாக் குடியைச் சேர்ந்த விவசாயி முருகன் என்பவரின் மகனான ப்ளஸ் 2 மாணவன் செல்வசூர்யாவின் காது கிழிந்து படுகாயமடைந்திருக்கிறார்.

Advertisment

gtschool

மாணவர்களின் மோதலையறிந்த பள்ளி ஆசிரியர்கள், அவர்களைக் கண்டித்து, மோதல் களை மட்டுப்படுத்திவிட்டு, இரு தரப்பினரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமாதானப் படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். சம்பவத்தில் தலையில் காயமடைந்த செல்வசூர்யாவை சக மாணவர்களே அருகிலுள்ள அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக் கிறார்கள். மாணவர்களின் மோதல் குறித்து அன்றைய தினமே விசாரித்த பாப்பக்குடி எஸ்.ஐ.யான சிவதாணு, மூன்று மாணவர் களின் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார். வீடு திரும்பிய மாணவன் செல்வசூர்யா, அன்றைய இரவில் தலைக்காயம் காரண மாக தலையில் கடுமையான வலி தாங்க முடியாமல் அலறியதால் அவனது பெற்றோர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார்கள். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் போகவே ஏப்ரல் 30 அன்று காலையில், மாணவன் செல்வசூர்யா மரணமடைந்திருக்கிறார். இந்தத் தகவல் தீயாய் பரவ, பாப்பாக்குடியைச் சுற்றியுள்ள அடைச்சாணி, பத்தமடை கிராமங்களில் பதற்றம் தொற்றிக் கொள்ள, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கிறார் மாவட்ட எஸ்.பி. சரவணன் இதனிடையே, செல்வசூர்யாவின் உறவினர்கள் பாப்பாக்குடியின் பெருமாள் கோயில் தெருவில் திரண்டு, உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். "மாணவனின் மரணத் திற்கு நீதி கிடைக்கும்வரை உடலை வாங்க மாட்டோம்' என்றவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்த நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர், கோரிக்கை குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்த பிறகே உடலைப் பெறச் சம்மதம் தெரிவித்தனர்.

"அந்தப் பள்ளியில் மாணவர்கள் கையில் கயிறு கட்டிக்கொண்டு வருவது ரொம்ப நாட்களாகவே இருந்திருக்கிறது. கிராமப் பகுதி என்பதால் இந்தச் செயலைக் கண்டித்தால் பிரச்சனை வரும் என்று ஆசிரியர்களே பயந்திருக்கிறார்கள்.இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது என்பதற்காக கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும். மாணவன் தொடர்பான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு. மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது'' என்று நக்கீரனிடம் தெரிவித்தார் மாவட்ட எஸ்.பி.யான சரவணன்.

புடம் போட்ட தங்கம் போன்று உருவாக்கப்படுகிற பள்ளிப் பட்டறையில், மாணவர்கள் தங்களை ஜாதி ரீதியாகப் பிரித்துப் பார்ப்பது தான் அவர்களின் முன்னேற்றத்திற்கான தடைக்கல்.