அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்களுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. ஊழல் புகாரில் வேலுமணி, வீரமணி, விஜய பாஸ்கர்கள் என முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடுத்தடுத்து விஜிலன்ஸ் போலீசார் சோதனை நடத்திய நிலையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாயை ஏப்பம் விட்ட தாக, தற்போது பல முன்னாள் களின் தலைகளும் உருளத் தொடங்கி இருக்கின்றன.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது அமைச்சர்கள் பெயரைச் சொல்லியும், அமைச்சர்களே மறைமுகமாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, தமிழக காவல்துறை, கடந்த வாரம் 'ஆபரேஷன் ஜாப் ஸ்கேம்' என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அதில், மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவி யாளர் சேஷாத்திரி, மாஜி எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபெத் உள்ளிட்ட 30 பேரைக் கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை.

soraja

இந்நிலையில், சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மீதும், அரசு வேலை வாங்கித் தருவதாக 76.50 லட்சம் ரூபாயைச் சுருட்டிக்கொண்டதாக புகார் கிளம்பியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் குணசீலன் (65). சரோஜா அமைச்சராக இருந்தபோது அவருடைய தனி உதவியாளராக இருந்தவர். அது மட்டுமல்ல, இவருடைய வீட்டு முகவரியைக் கொடுத்துதான் சரோஜா, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது வேட்பு மனுவும் தாக்கல் செய்திருந்தார். குணசீலனின் மனைவி, சரோஜாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார். இந்தளவுக்கு நெருக்கமான உறவுக்காரர் என்பதால்தான், அரசியல் வட்டத்திற்கு அப்பாற்பட்ட வசூல் வேலைகளுக்கு குணசீலனை சரோஜா பயன்படுத்தி வந்துள்ளார்.

Advertisment

இவர், சரோஜா மீது நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில், சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் 76.50 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்து இருந்தார். அந்தப் புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சரோஜா மீது, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, அவர் தலைமறைவானார். முன்ஜாமீன் கோரி ராசிபுரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நவம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இது தொடர்பாக புகார்தாரர் குணசீலனிடம் பேசினோம். "கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், ராசிபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற சரோஜா, சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு இதே தொகுதியில் இரண்டு முறை எம்.பி. ஆக இருந்தும்கூட, அவருக்கு ராசிபுரத்தில் சொந்தமாக வீடு கிடையாது. என் வீட்டு முகவரியைக் காட்டித்தான் தேர்தலின்போது நாமினேஷன் செய்தார்.

ss

Advertisment

அரசியல் பணிகள் செய்வதற்காக என் வீட்டின் கீழ்த் தளத்தில் அவரைக் குடியிருந்துகொள்ள சம்மதித்தேன். நான் மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தேன். அவர் அமைச்சராக இருந்தபோது, பல பேர் அவரிடம் சத்துணவுத்துறையில் வேலை கேட்டு மனு கொடுப்பார்கள். அவரும் மேல் தளத்தில் வசித்துவந்த என்னிடம் மனுவைக் கொடுத்துவிட்டு, அவர் சொல்லுவதைக் கேளுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்துவிடுவார்.

சத்துணவுத்துறையில் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ரேட் நிர்ணயித்து இருந்தார் சரோஜா. உதவியாளர் பணிக்கு 3 லட்சம் ரூபாய், சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 5 லட்சம், அங்கன்வாடி பணியாளருக்கு 3 லட்சம், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்கு 7 லட்சம் ரூபாய் என தனித்தனி ரேட் உண்டு. அவர் சொன்னபடி, அரசு வேலை கேட்டு வருவோரிடம் பணத்தை வசூலித்து, அமைச்சரிடம் கொடுத்து விடுவேன்.

கடந்த 2017ல், முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை சரோஜாவிடம் கொடுத்தேன். அப்போது அவருடைய கணவர் டாக்டர் லோகரஞ்சன் உடன் இருந்தார். சில மாதங்கள் கழித்து, இரண்டாம் தவணையாக 26.50 லட்சம் ரூபாயை சரோஜா முன்னிலையில் அவருடைய கணவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்னபடி அரசு வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தி வந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவரைச் சந்தித்து இதுபற்றி பேசினேன். முதல் கட்டமாக பாதிப் பணத்தைக் கொடுத்து விடுவதாகச் சொன்னார்.

இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சரோஜா மீண்டும் ராசிபுரத்தில் போட்டியிட்டு தோற்றுப் போனார். அதன்பிறகு சரோஜாவைச் சந்தித்து, என்னிடம் பணம் கொடுத்தவர்கள் திருப்பித் தரும்படி கேட்கிறார்கள் என்று முறையிட்டேன். அவரோ, பணம் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டதோடு, தன் கணவருடன் சேர்ந்துகொண்டு கொலை மிரட்டலும் விடுத்தார்.

என் மூலமாக பணம் கொடுத்தவர்கள் என்னிடம் திருப்பிக் கேட்டு நச்சரிக்கத் தொடங்கினர். இதுகுறித்து, டி.ஜி.பி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் புகார் அளித்தேன். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் என் புகார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புதான் சரோஜா, ராசிபுரம் தொகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார்.

ss

வீடு கட்டுவதற்காக 4 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கியிருந்தார். நான் முதல் தவணைப் பணம் கொடுத்த கொஞ்ச காலத்தில்தான் அந்த மனை நிலத்தை சரோஜா கிரையம் செய்திருந்தார். நான் வசூலித்துக் கொடுத்த பணத்தில்தான் அவர் வீட்டு மனை நிலம் வாங்கியிருக்க வேண்டும் என்ற சந்தேகமும் இருக்கிறது. அவரால் என் குடும்பத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது'' என்றார் குணசீலன்.

கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான குணசீலன், ஆரம்ப காலங்களில் ராசிபுரம் தொகுதியில் சரோஜாவுக்கு பக்க பலமாக இருந்துள்ளார். ராசிபுரம் தொகுதியில் சொந்தமாக வீடு கட்டிய பிறகு, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது தனது கணவர், மருமகன் மற்றும் உறவினர்களை தேர்தல் பணிகளின்போது உதவியாக வைத்துக்கொண்டார் சரோஜா. அப்போது குணசீலனை முழுமையாகக் கழற்றி விட்டுவிட்டதாகச் சொல்கின்றனர். அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தில்தான் அவர் இப்போது புகார் சொல்வதாகக் கூறுகின்றனர் சரோஜாவின் ஆதரவாளர்கள்.

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது குணசீலன் கடந்த ஆகஸ்ட் மாதமே ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அப்போது போலீசார், சரோஜாவுக்கு விசுவாசம் காட்டியதால், புகாரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகுதான் அவர் டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பி இருக்கிறார். இதுபற்றி கருத்தறிய முன்னாள் அமைச்சர் சரோஜாவின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோதும், அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஒருவேளை, ராசிபுரம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்காதபட்சத்தில், முன்னாள் அமைச்சர் சரோஜா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பும் கிளம்பியிருக்கிறது. ஆக, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்களின் வரிசையில் சரோஜாவும் தற்போது இணைந்துள்ளார்.