விமானப்படை வீரர் அபிநந்தனைக் கொண்டாடிய நெஞ்சம், கிரிக்கெட் போட்டியில்கூட இந்தியா தோற்றுவிடக்கூடாது என்கிற தேசப்பற்று, மானத்துடன் வாழ உழைத்துதான் சம்பாதிக்க வேண்டும் என்கிற உறுதி, எளிய தலைவர்களான காந்தி, காமராஜர் உள்ளிட்டோருக்கு இன்றளவும் தனி மதிப்பு என இத்தனை சிறப்பு பெற்ற நம் மக்களைத்தான், தேர்தலின் போதெல்லாம் எளிதாக விலை பேசிவிடுகிறார்கள் அரசியல்வாதிகள். சுயநலம்மிக்க ஊழல்பேர்வழிகளின் இத்தகைய செயலை அறிந்தும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் மக்கள். இதுகுறித்து இந்தத் தேர்தல் நேரத்தில் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.’

d

சிவகாசி, பள்ளபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நேரு காலனியில், ‘"மக்கள் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு இயக்கம்'’ என்ற பெயரில் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தி கலந்தாலோசித்து, தேர்தலுக்கு முன்பாக மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றி உறுதி எடுத்துக் கொண்டனர். அத்துடன் வீடு வீடாகச் சென்று, அங்குள்ளோர் அனுமதியுடன், ‘"எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!'’ என்றும், ‘"நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல!'’ என்றும் அச்சிட்ட அறிவிப்புக்களை அந்த வீட்டுச் சுவரில் ஒட்டினர்.

இது குறித்து நம்மிடம் பேசிய சமூகஆர்வலர் கண்ணன், ""ஒரே ஒருதடவை ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டு ஐந்து ஆண்டுகள் எதுவும் கேட்க முடியாத அவலநிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள் மக்கள். தேசியகீதத்துக்கு எழுந்து நிற்பதுகூட சட்டமாகவும் சம்பிரதாயமாவும்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. உண்மையான தேசப்பற்று என்பது, ஓட்டுக்குப் பணம் வாங்காமல் இருப்பதுதான். வாக்குரிமை குறித்து, மத்திய அரசும், மாநில அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் எவ்வளவோ பணம் செலவழித்து மக்களிடம் விளம்பரப்படுத்துகிறது. ஆனாலும், அரசியல்வாதிகள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், மக்கள் வாங்குவதையும் தடுப்பதில் வேகம் காட்டுவதில்லை.

Advertisment

ஏனென்றால், அரசாங்கமும், தேர்தல் ஆணையமும் அரசியல்வாதிகளின் பிடியில் இருக்கிறது. நாடு முழுவதும் நல்லவர்களே அதிகமாக உள்ளனர். எங்களின் வேண்டுகோளெல்லாம், நல்லவர்கள் ஒன்றுசேர்ந்து, அறியாமையில் உள்ள மக்களுக்கு நல்வழிகாட்ட வேண்டுமென்பதுதான். ஓட்டுக்குப் பணம் வாங்குவது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு...''’என்றார்.

ஆனாலும், அதே சிவகாசி பள்ளபட்டி பஞ்சாயத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமிக்கு சில இடங்களில் ரூ.200-ம் பல இடங்களில் ரூ.150-ம், அ.ம.மு.க. வேட்பாளர் பரமசிவ ஐயப்பனுக்கு குறிப்பிட்ட சில ஏரியாக்களில் ரூ.300-லிருந்து ரூ.200 வரை கொடுத்தனர். இடைத்தேர்தல் நடந்த சாத்தூரில், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மனுக்காக ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்ததை ஒப்பிட்டு... “"இருநூறு, முந்நூறெல்லாம் எந்த மூலைக்கு?'’என்று சலித்துக்கொண்ட வாக்காளர்கள், பணம் கொடுத்தவர்களுக்கு விசுவாசமாக, காலை 8 மணிக்கெல்லாம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து, தங்களின் ஜனநாயக(?) கடமையை நிறைவேற்றத் தவறவில்லை. இந்த மக்களிடம்தான் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது விழிப்புணர்வு பிரச்சாரம்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

Advertisment