தமிழகத்தில் இயற்கை, கனிமவளக் கொள்ளைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய சமூக ஆர்வலர் முகிலன், கடந்த 295 நாட்களாக (ஜூலை 9 வரை) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது மதுரை சிறையில் தனிமை சித்ரவதைகளைச் சந்தித்துவரும் அவரை, அவரது வழக்கறிஞர் சரவணக்குமார் உதவியுடன் நக்கீரன் மேற்கொண்ட பேட்டி..
எப்போது, எந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டீர்கள். எத்தனை நாட்களாக சிறைவாசம்?
முகிலன் : கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட வழக்கிற்காக 18.9.2017 அன்று கைது செய்யப்பட்டு இன்றுடன் (5.7.2018) 291 நாட்கள் ஆகிறது. இந்தப் போராட்டத்தில் பதிவாகியுள்ள 132 வழக்குகளில், பெரும்பாலானவை என்மீது உள்ளன. அதில் 13 வழக்குகளில் முதற்கட்டமாக இவர்களைப் போல‘"வெள்ளை வேன்' பாணியில் கடத்தல்’ செய்யப்பட்டேன். முறையான பிடி ஆணை இல்லாமல் கடத்திவைத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதுதான் எந்த வழக்கில் கைதானேன் என்பதே தெரிந்தது.
என்ன காரணத்திற்காக பாளை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு உங்களை மாற்றினார்கள்?
‘முகிலன் : ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைதாகி சிறைக்குவரும் போராளிகள் வழக்குகளைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அடுத்தடுத்து நூறு வழக்குகள்கூட போட்டு, லட்சக்கணக்கில் பிணைத்தொகை கட்டச் சொல்வார்கள். இந்த வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்கலாம்; தொடர்ந்து போராடுங்கள்’ என நேரடியாகவும், வழக்கறிஞர்கள் மூலமாகவும் அவர்களுக்கு ஊக்கமளித்தேன். மேலும், பாதிக்கப்பட்டவர்களை நீதிபதி அருணா ஜெகதீசனிடம் அபிடவிட் தாக்கல் செய்யச்சொன்னேன். இது அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஜூலை 1ஆம் தேதி அதிகாலையில் ஏ.டி.ஜி.பி., டி.ஐ.ஜி. உத்தரவில் சிறை மாற்றுவதற்காக முறையற்ற காரணங்களைச் சொன்னார்கள். ஸ்டெர்லைட் போராட்டக்குழுவிற்கு உதவக்கூடாது என்பதே என்னை சிறைமாற்றியதற்கான நோக்கம்.
அரவக்குறிச்சியில் 10 மாதங்களுக்குப் பிறகு உங்கள்மீது வழக்குப்பதிவு செய்திருப்பதில் உள்நோக்கம் இருக்கிறதா?
முகிலன் : ஏப்ரல் 2017-ல் நான் பேசியதற்கு 27.12.17 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது நான் சிறையில் இருக்கும் நாட்களில் வரும். இதையறிந்ததும் இந்த வழக்கில் என்னை கைதுசெய்யுமாறு அரவக்குறிச்சி காவல்நிலையம், கரூர் மாவட்ட எஸ்.பி., ஆட்சியர், கரூர் நீதிபதி ஆகியோருக்கு சிறையில் இருந்தபடியே மனு அனுப்பியும் கைது செய்யவில்லை. ஆனால், வள்ளியூர் நீதிமன்றம் பிணை வழங்க இருப்பதை அறிந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசத்துரோக வழக்கில் 22.6.18 அன்று கைதுசெய்துள்ளனர். என்னை அடுத்தடுத்த போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் செய்வதற்கான முன்னேற்பாடே இந்தக் கைது.
கூடன்குளம் அணுஉலை, நெடுவாசலுக்கு களப்போராட்டம், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறைப்போராட்டம், 8 வழிச்சாலைக்கு உங்கள் போராட்டம் எப்படி?
முகிலன் : 2016 நவம்பரில் விருதுநகர் காரியாப்பட்டி தாமரைக்குளத்தில் சாயப்பட்டறைக்கு தினசரி 60 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் மாவட்ட ஆட்சியரைத் தாக்க முயன்றதாக வழக்கு, 2017 ஆகஸ்ட்டில் ஸ்டெர்லைட் நிலத்தடிநீரைக் கொள்ளையடிப்பதை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம். அதேமாதம், குளித்தலையில் புதிய மணல்குவாரி அமைப்பதற்கு எதிரான போராட்டம்., நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் பெப்சி ஆலைக்கு எதிராக போராடியது போன்ற ஐந்து வழக்குகளை வைத்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் என்னைக் கைதுசெய்ய தமிழக அரசு முனைப்புகாட்டி வருவதாக அறிகிறேன். மக்களை ஒன்று திரட்டவிடாமல் தடுப்பதற்கே இந்த முயற்சி. என்ன நடந்தாலும் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து அறிவியல்பூர்வமாக போராடுவேன்.
மக்களுக்காக போராடுபவர்களை சிறையில் வைத்திருக்கவே அரசுகள் முயற்சிக்கின்றனவா?
முகிலன் : இயற்கை வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கவே அரசுகள் முயற்சித்து வருகின்றன. பன்னெடும் வரலாறும், தற்சார்புமுடைய தமிழினத்தைக் கருவறுக்கும் வேலையை நுட்பமாக செய்துவரும் மத்திய அரசுக்கு துணைபோகிறது தமிழக அரசு. இயற்கையோடு இசைந்துவாழும் தமிழனத்தை சீரழிக்க அணு உலைகள், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், கெயில், கோவளம் வர்த்தக துறைமுகம், ஜிண்டாலுக்காக மலைகளை, விவசாயத்தை அழிக்கும் 8 வழிச்சாலை என நாசகார திட்டங்கள் திணிக்கப்படுகின்றன. இதுபோன்ற அழிவுக்கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல், எதிர்ப்பவர்களை பாசிச அரசுகள் சிறையில் அடைக்கத்தான் செய்யும். அதற்காக தடா, பொடா, என்.எஸ்.ஏ., குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற நெருக்கடிகளைத் தரும். மக்களுக்காக போராடுபவர்களை நிரந்தரமாக சிறையில் அடைக்க நினைத்தால், மக்கள் போராட்டம் இந்த பாசிச அரசுகளை குப்பைக்கு அனுப்பும்; இதுதான் வரலாறு.
சிறைச் சித்திரவதை?
முகிலனை சிறையில் சந்தித்த அவரது வழக்கறிஞர் சரவணக்குமார் நம்மிடம், ""ஜூலை 1ஆம் தேதி அதிகாலை தெளிவான காரணம் சொல்லாமல் மதுரை சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள். துணிப்பையைக் காணாததால் சில உடைகள் மட்டுமே இருக்கின்றன. மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத சிறையை முகிலனுக்கு ஒதுக்கியுள்ளனர். அதன்பின்னால் இருக்கும் திறந்தநிலை மலக்குழியில் உற்பத்தியாகும் கொசுக்களால் தனிமையில் இருக்கும் அவர் உறக்கம் கெட்டு அவதிப்படுகிறார். போர்த்திக்கொள்ள தரப்பட்ட வெள்ளைப்போர்வையும் கொசுக்கடியால் ஒரே இரவில் ரத்தக்கறையாகி இருக்கிறது. உடல்ரீதியிலும், மனரீதியிலும் சித்ரவதை செய்து முகிலனின் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியே இது. மேலும், அவர்மீது தேசப்பாதுகாப்புச் சட்டம் பாயவுள்ளதாகவும் தெரிகிறது. அதை முறியடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்'' என்கிறார் சட்டப்பூர்வமான மொழியில்.
- இரா.பகத்சிங்