ஈரோடு மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் "நாம் தமிழர் கட்சி' வேட் பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்தில் "நாம் தமிழர் கட்சியின் ஆட்சி நடந்தால் என்னவெல்லாம் செய்வோம்' என்பதை ஓர் கனவுத் திட்டம்போல விளக்கியது சுவாரஸ்யமாக இருந்தது. அவரது பேச்சில், ""உலகெங்கும் அடிமைப் பட்டிருக்கும் தமிழ் சமூகத்தின் இழந்த உரிமைகளைப் பெற்றுத்தர, அதற்கான அரசியல் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது. நாங்கள் பொறுப்புக்கு வந்தால், தமிழ் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை என்ற நிலை உருவாகும். அரசு பள்ளிக்கூடங்களின் தரம் உயரும். கடைகளின் விளம்பரப் பலகைகளில்கூட தமிழ் இல்லை. இந்தநிலை எல்லாம், நாம் தமிழர் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற ஒரே நொடியில் மாற்றப்படும்.
இப்போது யாரும் தாய் மொழியில் கையெழுத்து போடுவதில்லை. பெயரின் முதல் எழுத்தான தந்தை பெயரைக்கூட தமிழில் எழுத முடியாதவர்களாக இருக்கிறோம். நான் கேட்கிறேன், பெயரின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதுகிறாயே, உன் அப்பன் வெள்ளைக்காரனா? ஆங்கிலேயன் அவன் பெயரின் முதல் எழுத்தைத் தமிழில் எழுதுவானா? நாம் தமிழ்நாடாக இல்லாமல், இங்கிலாந்தின் ஒரு பாகமாகச் செயல்படுகிறோம். இப்படி இருக் கும்போது எப்படி மொழி விடுதலை அடைய முடியும்?
தமிழ்நாட்டில் குவிந்து இருக்கும் வடமாநிலத்தவர்கள் அனைவரும் நாம் தமிழர் ஆட்சி அமைந்ததும் பெட்டி படுக்கையைத் தூக்கிக்கொண்டு அவர்களின் சொந்த மாநிலத்துக்குச் சென்று விடுவார்கள். இப்போது அவர்கள் ஒன்றரைக்கோடி பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களில் 20 லட்சம்பேர் வாக்கு உரிமை பெற்றுவிட்டார்கள். அவர்கள் நமக்கு வாக்களிக்கமாட்டார்கள். எப்படி தமிழர் குடியிருப்பில் சிங்களவர்களை வைத்துத் தமிழர்களை விரட்டினார்களோ, அதே நிலை தமிழ்நாட்டுக்கு வரவிருக்கிறது. இந்த நிலையை மாற்றவேண்டும்.
இது நமக்கான தேர்தல். தன்மானம் வெற்றிபெறும் தேர்தல். எங்கள் வேட்பாளர்கள் பணம் உள்ளவர்களாக இல்லாமல் இருக்கலாம். இந்த சமூகத்துக்கான மாற்றத்தை கொண்டு வருபவர்கள். என் மொழி தெரியாதவன் கடவுளாக இருக்க முடியாது. என் வலி தெரியாதவன் தலைவனாக இருக்க முடியாது. நாங்கள் உங்கள் வலி தெரிந்தவர்கள். அ.தி.மு.க., தி.மு.க.வின் வெற்றிகள் ஒரு சம்பவம். ஆனால் நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாறு. மாற்றத்தை விரும்பும் மக்களின் பெருங்கனவுக்கான வெற்றி'' என்றார்.