தமிழ் ஊடகங்களில் சமூகநீதி கருத்துகள் கொண்ட, முற்போக்கு சிந்தனையுள்ள பத்திரிகையாளர்கள் பணி இறக்கம் மற்றும் பணிநீக்கம் செய்யப்படுவதோடு கொலைமிரட்டல்களுக்கும்கூட ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், "தமிழ் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள்' என்கிற தலைப்பில் பிரபல பத்திரிகையாளர் என்.ராம் தலைமையில் இணையவழி கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி.
தேசிய பெண் ஊடகவியாளர்கள் கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளர் இந்துஜா ரகுநாதன் பேசியபோது, ""தனிப் பட்ட முறையில் பெண் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது அதிகரித்துவருகிறது. இதனால், அவர்கள் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசவே அச்சப்படுகின்ற சூழல் நிலவுகிறது. இதுதான், நாளை அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தொடர்ந்து நடக்கும். எனவே ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்'' என்றார்.
"மாற்றத்துக்கான ஊடக மையம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊடகவிய லாளரான ஆசிஃப், ""மாரிதாஸ் என்கிற யூ ட்யூபர் என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு எனக்கும் கறுப்பர்கூட்டம் யூ ட்யூப் சேனலுக்கும் தொடர்பு இருப்ப தாகவும் "மாற்றத்துக்கான ஊடக மையம்' அமைப்பை பின்னால் இருந்து இயக்கு வதே தி.மு.கதான் என்று ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதுமட்டுமல்ல, கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர்கூட்டம் வீடியோ வில் வரக்கூடியவரின் தாடிவைத்த புகைப்படத்தை வெளியிட்டு, "இவர்தான் ஆசிஃபா?' என்று கேள்விக்குறியோடு சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட்டார்கள். இதனால், ஆசிஃப் என்ற இஸ்லா மியர் கந்தசஷ்டி கவசம் பற்றி மிகக் கேவலமாக பேசியிருக்கிறார் என்று என் உயிருக்கே ஆபத்தான வதந்தி பரவி விட்டது.
மதக் கலவரத்தை உண்டாக்கும் விதமாக எனது புகைப்படத்தை வெளியிட்டு வதந்தி பரப்பிய மாரி தாஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி சென்னை கமிஷனரிடம் கடந்த 2020 ஜூலை- 13 ந்தேதி புகார் கொடுத்தேன். அதேநாளில், கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜகவினரும் புகார் கொடுத்தார்கள்.
பா.ஜ.க. கொடுத்த புகாரின் அடிப்படையில் கறுப்பர் கூட்டம் யார் என்பதை கண்டுபிடித்ததோடு அவர்களை கைது செய்து சிறையிலும் அடைத்துவிட்டார்கள். ஆனால், அதேநாளில் நான் கொடுத்த புகார்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. ஆனால், எனக்கும் கறுப்பர் கூட்டத் துக்கும் என்ன தொடர்பு? என்ற விசாரணையை செய்தார்கள். என்னை கைது செய்யபோவதாகவும் வதந்தி பரப்பினார்கள். இந்த நிலையில்தான், நான் நெருக்கடி கொடுக்கப்பட்டதால் நான் பணியாற்றிய சேனலில் இருந்து விலகியுள்ளேன். முஸ்லிம் என்பதால் என்னை டார்கெட் செய்தவர்கள், இப்போது மற்ற சேனல்களையும் குறி வைக்கிறார்கள். இந்தத் தாக்குதல், பத்திரிகைகள், வார இதழ்கள் என தொடரப்போகிறது'' என்கிறார் வேதனை யோடு.
ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணியின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் பேசுகையில், ""எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஒரு ஊடகத்தில் எடிட்டர் வித்தவுட் எடிட்டர்ஷிப் மாற்றம் நடந்துள்ளது. இன்னொரு ஊடகத்தின் தலைவரான என் நண்பரிடம் பேசினேன். "அது தான், என்ன நடக்கிறது என்று தெரியுமே! சுதந்திர மாக புரஃபஷனலாக நடந்துகொள்பவர்களை எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கப்போவ தில்லை. என்ன வந்தாலும் அவர்களை விட்டுக் கொடுக்கமாட்டோம்' என்றார். அவரை, நான் பாராட்டுகிறேன்.
டெல்லியிலிருந்து வந்த அழுத்தம்தான் ஆசிஃப் பணிநீக்கத்துக்கான காரணம். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் மதநம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால், அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மதநம்பிக்கை இருக்கக்கூடாது. காந்தியடிகளும் அதைத்தான் சொன்னார். நம்பகமான தகவலை மக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதும், அரசின் திட்டங்களை விமர்சன கண்ணோட்டத்துடன் அணுகுவதும், அதுகுறித்து மக்களுக்கு போதிப்பதும் விவாதிப்பதும்தான் ஜர்னலிஸம். அதற்கான, சுதந்திரத்தைக் கொடுக்கவேண்டும். வெளிப்படையாக தெரிந்த குற்றத்திற்கு நிச்சயமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவேண்டும் என்று லலிதா குமாரி வெர்சஸ் உத்திரப்பிரதேசம் 2014 ஜட்ஜ்மெண்ட்டில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், ஊடகவியலாளர் ஆசிஃப் கொடுத்த புகாருக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கவேண்டும்'' என்று சுட்டிக்காட்டிப் பேசினார்.
மெட்ராஸ் ரிப்போர்ட்டர் கில்ட் ஆர்.ரங்கராஜன் மற்றும் பல்வேறு ஊடவியலாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடலில் இறுதியாக, “வலதுசாரி இயக்கங்களின் அச்சுறுத்தல் தொடர்பாக, தமிழக முதல்வரையும் தமிழக காவல்துறை தலைவரையும் சந்தித்து புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பத்திரிகையாளர் பீர் முகமது.
பா.ஜ.க. கொடுத்த புகாருக்கு உடனே நட வடிக்கை எடுத்தீர்கள். மிகப்பெரிய மதக்கலவரத்தை தூண்டும்விதமாக வதந்தி பரப்பியதாக ஊடகவியலாளர் ஆசிஃப் கொடுத்த புகார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சைபர் கிரைம் ஏ.சி. வேல் முருகனை பலமுறை தொடர்புகொண்டபோதும் எஸ்.எம்.எஸ். அனுப்பியபோதும் ஃபோன் அட்டெண்ட் செய்யவில்லை. அதற்கான விளக்கத்தையும் அளிக்கவில்லை.
வடஇந்தியாவில் பெரும்பாலான ஊடகங் களைத் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தும், உண்மையை துணிவாக கூறும் ஊடகங்கள்மீது வழக்கு மூலம் நெருக்கடி கொடுத்தும் வருகிற பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். அதே தாக்குதலை தமிழக ஊடகங்கள்மீது அ.தி.மு.க அரசின் காவல்துறை யைக் கையில் வைத்துக் கொண்டு தொடங்கியுள்ளது.