மிழகம் முழுவதும் தனது கட்டுப்பாட்டிலுள்ள குவாரிகளை திறக்க முடிவு செய்திருக்கிறது தமிழ்நாடு கனிமவள நிறுவனம் (டாமின்). இதுகுறித்து அரசு ஊழியர் ஐக்கிய பேரவை, தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அண்மையில் காணொலி காட்சி வழியாக விவாதித்திருக்கிறார் டாமின் நிர்வாக இயக்குநர் கெஜலட்சுமி ஐ.ஏ.எஸ்.

dd

விவாதத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சென்னை மாவட்ட செயலாளர் கன்னியப்பனிடம் இது குறித்து நாம் விசாரித்த போது, ""டாமின் ஊழியர்களுக்கான சம்பளம் கடந்த 1 வருடமாகவே சரியான தேதியில் வழங்கப்படவில்லை. அகவிலை படி, நிலுவை தொகையும் கடந்த 2 வருடங்களாக தரவில்லை. தவிர, சீருடை-எண்ணெய்-சோப் உள்ளிட்ட சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களின் வாழ்வாதாரமும் பணி பாதுகாப்பும் ரொம்பவும் மோசமடைந்திருக்கிறது. இதுகுறித்து டாமின் நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்திருக்கிறோம். இந்த நிலையில், கொரோனா நெருக்கடிகளால் சம்பளம் குறைக்கப்படக்கூடாது என தமிழக அரசு வலியுறுத்தியுள்ள சூழலிலும், கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கும் பாதி சம்பளம்தான் வழங்கியுள்ளது டாமின் நிர்வாகம். இதனால் டாமின் ஊழியர் கள் மிகவும் நொந்து போயிருக்கிறார் கள். இதனையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என நிர்வாக இயக்குநர் கெஜலட்சுமியிடம் வலியுறுத்தினோம். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளை நடத்தினால்தான் ஊழியர்களின் பிரச்சனைகள் தீரும் எனவும் சொன்னேன்.

ddஎங்கள் கோரிக்கையை உணர்ந்த அவர், கொரோனா நெருக்கடிகளால் தான் ஊதியத்தில் தாமதம் ஏற்பட்டது. இனி அது மாதிரி நடக்காது. ஊதியம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் இந்த மாதத்திலிருந்து சரியாக நடக்கும். அதில் எவ்வித தடையும் இருக்காது. அதேபோல, டாமினின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து குவாரிகளையும் நடத்து வதற்கான அனுமதி பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Advertisment

அதில், முதல்கட்டமாக ஆகஸ்டில் சிலிகா மற்றும் லைம் ஸ்டோன் குவாரிகளை திறக்கவும், ரெண்டாடி மற்றும் கொடைக்கல் போன்ற இடங்களில் குவாரிகளை நடத்தவும் அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல, அடுத்த 3 மாதங்களில் 8 குவாரிகளுக்கும், அதற்கடுத்து 5 குவாரிகளுக்கும் அனுமதி பெற்றிருக்கிறோம். வெகுவிரைவில் 20 குவாரிகளுக்கு அனுமதியை பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார் டாமின் நிர்வாக இயக்குநர் கெஜலட்சுமி. இதனால் டாமின் ஊழியர்களின் பிரச்சனைகளை தீரும் என எதிர்ப்பார்க்கிறோம். தீர்வு கிடைக்காத பட்சத்தில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும்!'' என்கிறார் கன்னியப்பன்.

டாமின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குவாரிகளைப் போல தமிழகம் முழுவதும் தடை பெற்றிருக்கும் மற்ற குவாரிகளையும் திறப்பதற்கான அனுமதியை பெறும் நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன.

-இளையர்