மாணவிகளிடம் செல்போனில் பேசி, பணம் மற்றும் மதிப்பெண் ஆசை காட்டி, தவறான நோக்கத்தோடு அழைத்த வழக்கில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவர்மீது, விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், ஜூலை 13-ஆம் தேதி 1160 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையும், செப்டம்பர் 7-ஆம் தேதி 200 பக்கங்களில் கூடுதல் மற்றும் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகையும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கைது நடவடிக்கை எடுத்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. தொடர்ந்து முயற்சித்தும், மூவருக்குமே ‘பெயில்’ கிடைக்கவில்லை. வழக்கும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. நிர்மலாதேவியின் கடந்தகால தவறுகளும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் கண்டுகொள்ளப்படவில்லை.
""60 நாட்களில் அல்லது அதிகபட்சம் 90 நாட்களில் பிணை கிடைத்துவிடக்கூடிய இந்த வழக்கில், மூவரையும் இத்தனை மாதங்கள் வெளியில் வரவிடாமல் செய்வது ஏன்?''’என்று கேள்வி எழுப்பினார் நம்மிடம் பேசிய சட்டவல்லுநர்.
கடந்த 28-ஆம் தேதி உதவிப் பேராசிரியர் முருகன், விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்ற வளாகத்திலேயே, இந்த வழக்கில் ஆரோக்கியமான விசாரணை நடைபெறவில்லை என்றும், நான் குற்றவாளியே கிடையாது என்றும், தன்னை சிறையில் அடைத்துவைத்து தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் கத்திப் பேசினார்.
முருகனின் கோபம் குறித்து வழக்கறிஞர் ஒருவர் நம்மிடம், ""குற்றப்பத்திரிகை முழுமையாகத் தாக்கல் செய்யப்படாத நிலையில், சுப்ரீம்கோர்ட் செல்வதற்கு ஆயத்தமானது முருகன் தரப்பு. உடனே, பல்கலைக்கழகத்திலிருந்து, முருகன் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசிய சிலர் "உயர் நீதிமன்றத்திலேயே முடித்துவிடலாம். தேவையில்லாமல் எதற்கு சுப்ரீம் கோர்ட் செல்கின்றீர்கள்?'’என்று அந்த முயற்சியைத் தடுத்தார்கள். இப்போது என்ன நடந்திருக்கிறது? பெயிலை பென்டிங் வைத்து, சார்ஜ்-ஷீட் போட்டுவிட்டார்கள். முருகன் உட்பட யாருமே பெயிலில் வரமுடியாதபடி பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு குரூப் புத்திசாலித்தனமாக காய் நகர்த்தியிருக்கிறது. இதன் பின்னணியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கலைச்செல்வன் இருப்பதாக முருகன் குடும்பத்தினரே சொல்கிறார்கள்''’என்றார்.
முருகனின் மனைவி சுஜா நம்மிடம் பேசினார். ""பெண்கள் விஷயத்தில் எப்போதும் அவருக்கு ஆர்வம் இருந்ததே இல்லை. ஒழுக்கமாக நடந்துகொள்வார். என் கணவர் என்பதற்காக, பெண்கள் விஷயத்தில் முருகனை நான் உயர்த்திப் பேசவில்லை. மாணவர்களும் அவரைப் பெருமையாகத்தான் பேசுகிறார்கள். அவருடைய மாணவி நந்தினி யூ டியூப் கமென்ட்டிலேயே இதைச் சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு கருப்பசாமியுடன் பேசியதுதான். முருகனுக்கு சரியாக டூவீலர் ஓட்டத் தெரியாது. அதனால், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பல்கலைக்கழகம் வரை, கருப்பசாமியின் டூவீலரில்தான் செல்வார். இதற்காகத்தான் கருப்பசாமியோடு பழகினார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையாக விசாரணை நடத்தவில்லை. அவர்களாகவே ஸ்டேட்மென்ட் ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். எஸ்.பி.ராஜேஸ்வரி கடுமையாக மிரட்டி, அதில் முருகனைக் கையெழுத்துப் போட வைத்திருக்கிறார்.
முருகன் சாதாரண உதவிப் பேராசிரியர்தான். கலைச்செல்வன்தான் பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர். அவருடைய கட்டுப்பாட்டில்தான் நிர்மலாதேவி இருந்திருக்கிறார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் கலைச்செல்வனை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை? நிர்மலாதேவியோடு உயர்மட்டத்தில் உள்ள யார், யார் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது நிச்சயம் கலைச்செல்வனுக்குத் தெரிந்திருக்கும். அவரைக் கைது செய்தால், உயர் மட்டத்தில் உள்ளவர்களைக் காட்டிக்கொடுத்து விடுவார். அதனால்தான், கலைச்செல்வனை வழக்கில் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். அப்பாவி முருகனுக்கு நிர்மலாதேவி விவகாரத்தில், திரைமறைவில் என்னென்ன நடந்திருக்கும் என்பது நிச்சயம் தெரியாது. யாரையோ காப்பாற்றுவதற்காகத்தான், முருகனைப் பலிகடா ஆக்கிவிட்டார்கள்'' என்றார் வேதனையோடு.
அரசுப் பணியில் உள்ளவர் சுஜா. ஒவ்வொரு வார்த்தையையும் மிரட்சியுடனே பேசினார். அதனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம். ""பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் முருகன். ஆனால், பெண்கள் விஷயத்தில் மோசமானவர் கிடையாது. அதனால், நிர்மலாதேவியிடம் கல்லூரி மாணவிகளை ஏற்பாடு செய்யும்படி கூறியிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது''’என்றவர்கள், ""குறிப்பிட்ட நாளில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக சொகுசு பங்களாவில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தங்கியிருந்ததற்கான சி.சி.டி.வி. ஆதாரங்களை முன்கூட்டியே கைப்பற்றி அழித்தது, அவசர அவசரமாக சந்தானம் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்தது, பத்திரிகையாளர்கள் சந்திப்பை பதற்றத்துடன் நடத்தியது, ‘சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் எதுவும் வெளிவந்துவிடக் கூடாது; வி.வி.ஐ.பி. சிக்கிவிடக் கூடாது’ என்று அரசியல் கணக்கோடு அ.தி.மு.க. அரசு காய் நகர்த்தியது என, அனைத்தையும் பக்காவாக நடத்தி முடித்துவிட்டார்கள் நிர்மலாதேவி விவகாரத்தில்...''’என்று வரிசைப்படுத்தினார்கள்.
என்ன ஒரு கிரிமினல் கில்லாடித்தனம்!
-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள்: ராம்குமார் & அண்ணல்