தமிழக அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வது குறித்து மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உத்தரவின் பேரில் போடப்பட்ட ஒரு அரசாணைக்கு எதிராக வாள் சுழற்றுகிறது தலைமைச்செயலகச் சங்கம். இதனால் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், பழனிவேல்தியாகராஜ னுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித் திருப்பதாக கோட்டையில் எதிரொலிக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசனிடம் நாம் பேசியபோது, "தமிழக அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வது மற்றும் பயிற்சிஅளிக்கும் விதிகளில் சில திருத்தங்கள் செய்வதற்கு மனிதவள சீர்த்திருத்தக் குழு அமைத்து கடந்த அக்டோபர் 18-ந்தேதி அரசாணை (எண்:115) வெளியிட்டிருக்கிறது மனிதவள மேம்பாட்டுத்துறை. இந்த குழுவுக்கு தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.எப். ஃபரூக்கி, உறுப்பினர்களாக சந்திரமௌலி ஐ.ஏ.எஸ். (ஓய்வு), ஜோதி ஜெகராஜன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு), சமூக ஆர்வலர் சந்திராதேவி, காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் லெட்சுமி நாராயணன் ஆகியோரை நியமித் திருக்கிறார்கள்.
இந்த குழு, தனது அறிக்கையை 6 மாதத் துக்குள் அரசிடம் தாக்கல் செய்யும். ஆட் சேர்ப்பு முறைகள், வெளிமுகமை மூலம் பணியமர்த்துதல், மனிதவளத்தினை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை இந்த குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும். பன்முக வேலைத் திறனோடு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவை அமையவேண்டும் என்கிறது ஒரு ஷரத்து. பன்முக வேலைத்திறனை இவர்கள் எப்படி மதிப்பீடு செய்வார்கள்? விருப்பு வெறுப்புகளுடன் தேர்வு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து வரம்புகளும் பணியா ளர் விரோத நடவடிக்கையாகத்தான் அமையும். சமூகநீதிக்கு வேட்டு வைப்பதாக இருக்கிறது இந்த சீர்திருத்தக் குழுவின் ஆய்வு விவகாரங்கள்.
தலைமைச் செயலகத்தில் டி-பிரிவிலுள்ள அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக காலியாக இருக்கிறது. இந்த பணியிடங்களை வெளிமுகமை (தனியார் ஏஜென்சி) மூலமாக நிரப்ப முடிவு செய்கிறது இந்த குழு. மேலும், சி-பிரிவு பணி யிடங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்கும் முயற்சியையும் இந்த அரசாணையின்படி சீர்திருத்தக் குழு எடுத்து வருகிறது. அரசு பணியிடங்களை தனியார் வசமாக்கும் அரசாணை 115-ஐ உடனடியாக ரத்து செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''’என்கிறார் ஆவேசமாக.
ஜெயலலிதா தலைமையிலான 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியின்போது ஏ.எம்.சுவாமிநாதன் குழுவினர் தந்த ஒரு அறிக்கையை வைத்து 1,73,000 அரசுப் பணியாளர்களை ஒரே கையெழுத்தில் இரவோடு இரவாக வேலை யிழக்க வைத்து வீட்டுக்குத் துரத்தினார் ஜெய லலிதா. போராடிய அரசு ஊழியர்களை கைது செய்து, டெஸ்மா சட்டத்தில் உள்ளே தள்ளினார்.
கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி 2006-ல் அமைந்த பிறகு அரசு பணியிடங்களுக்கு அரசு மூலம் ஆட்கள் தேர்வு செய்வதற்கு இருந்த தடைகள் நீங்கின. தனியார் ஏஜென்சிகள் மூலமாகவோ, வெளிமுகமை மூலமாகவோ ஆட்களை தேர்வு செய்ய வலியுறுத்தும் சுவாமிநாதனின் ரிப்போர்ட்டை கிடப்பில் போட் டார் கலைஞர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், அரசுப் பணிகளுக்கு ஆட் சேர்ப்பில் ஜெயலலிதா முன்னெடுத்த முறைகளைக் கையி லெடுத்து சீர்திருத் தம் என்ற பெயரில் வெளிமுகமையிடம் ஒப்படைக்க குழுவும் அமைத்து அதற்கான அரசாணை (எண்:115) பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசாணை அமல்படுத்தப்பட்டால், அடித்தட்டு மக்களுக்கு இனி அரசுப் பணிகள் கிடைக்கவே கிடைக்காது என்ற சூழல் உருவாகிவிடும். 2001-2006-ல் ஏற்பட்ட கொந்தளிப்பு மீண்டும் தமிழகத்தில் உருவாகும். அது, ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு தீராத பழியை ஏற்படுத்தும்'' என்கிறார்கள் தி.மு.க. ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
இது ஒருபுறமிருக்க, சீர்திருத்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஃபரூக்கி தற்போது வட இந்தியாவில் செட்டிலாகி விட் டார். தமிழகத்திலேயே இருக்கும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இல்லையா? உறுப் பினராக நியமிக்கப்பட்டிருக்கும் லஷ்மி நாராயணன் பா.ஜ.க.வையும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளையும் ஆதரிப்பவர். தமிழகத்தின் முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துக்கு நெருக்கமானவர். ஆக, ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் களைக் கொண்ட ஒரு குழுவை நிதி யமைச்சர் பழனி வேல் தியாக ராஜன் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியும் கோட்டையில் எதிரொலிக்கிறது.
இந்த நிலை யில், இந்த விவகாரங்கள் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குச் செல்ல, அரசாணையிலுள்ள சில ஷரத்துகளை நீக்க உத்தரவிட்டிருக்கிறார். இதனையறிந்த பழனிவேல் தியாகராஜன், "என்னைக் கேட்காமல் ஷரத்துகளை நீக்கவோ, அரசாணையை ரத்து செய்யவோ முடியாது' என்று சொல்லிவருகிறார். இதனால் முதல்வருக்கும் அமைச்சருக்கும் மோதல் உருவாகுமோ என்ற அச்சத்தில் இருக்கிறது கோட்டை.