கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. மேலும் காவல் துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மறுபக்கம், இந்த விவகாரத்தில், த.வெ.க.வின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச். தினேஷ் என்பவர், அரசியல் கட்சி களின் ரோட் ஷோக் களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அதுவரை எந்த கட்சிக்கும் ரோட் ஷோ நடத்தத் தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், ஆதவ் அர்ஜூனாவை கைது செய்ய வேண்டுமென்ற மனு, புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமீன் மனு, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் தொடர் பாக, அக்டோபர் 3 வெள்ளியன்று, சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையி லும் விசாரணை நடைபெற்றது.
ரோடு ஷோ வழக்கு: ரோடு ஷோ தொடர்பான வழக்கு நீதிபதி என்.செந்தில் குமார் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப் போது, த.வெ.க. தரப்பின் அரசியல் செயல்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், சரமாரியான கேள்விகளால் விளாசித் தள்ளிவிட்டார். நீதிபதி செந்தில்குமார் கூறுகையில், "இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக்கொள்கிறேன். வீடியோக்களை பார்க்கும் போது மனதை உலுக்குகிறது. இச்சம்பவம் தொடர் பாக இதுவரை இருவர் மட்டுமே கைது செய்யப் பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளது?'' என அரசை நோக்கி அதிருப்தி தெரிவித்த நீதிபதி, "முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் என அனைத்துக் கட்சியினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள னர். ஆனால் விஜய் கட்சியின் நிர்வாகி கள் மட்டும் ஓட்டம் பிடித்துள்ளனர்'' என விஜய் கட்சியை சாடினார்.
தொடர்ந்து, "த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த வாகனத்தில், பின்தொடர்ந்து வந்த பைக் மோதிய காட்சிகள் வெளியானது. அந்த நிகழ்வை உலகமே பார்த்தது. நானும் வீடியோவில் சில காட்சிகளை பார்த்தேன். அந்த சம்பவத்தில், இடித்துவிட்டு ஓடியதாக (ஐண்ற் & தன்ய்) விஜய்யின் பிரச்சார வாகனத் தின் மீது ஏன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை? காவல்துறை தனது கைகளை கழுவிவிட்டதா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டு கிறீர்களா? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்யவேண்டும். சட்டத் திற்கு முன் அனைவரும் சமம். எனவே இந்த சம்பவத்தில் அரசு அமைதியாக இருக்கக்கூடாது. காவல்துறை கண்மூடிக் கொண்டிருக்கக்கூடாது. இதுபோன்ற விஷயங்களில் புகார் வராவிட்டாலும் வழக்குபதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? பிரச்சார வாகனத்திலிருந்த ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்ததும் உடனே பேருந்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. இது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. வீடியோக் களை பார்க்கும் பொழுது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. காவல்துறையினர் இதுகுறித்து உடனே விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய் திருக்க வேண்டாமா?'' என நீதிபதி கேட்ட கேள்வி களின்மூலம், ஓர் அரசியல் கட்சித்தலைவராக, தனது கட்சித் தொண்டர்கள்மீது, ரசிகர்கள்மீது, விஜய்க்கு சிறிதுகூட இரக்கமே இல்லாதது அப்பட்டமாக வெளிப்பட்டது.
தொடர்ந்து, "கரூரில் நடந்த சம்பவம், மனிதர் களால் உருவாக்கப்பட்ட பேரழிவு (ஙஹய் ம்ஹக்ங் க்ண்ள்ஹள்ற்ங்ழ்). நீதிமன்றம் இதை கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில், கட்சித் தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமைப்பண்பு இல்லை. கட்சியின் தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஓட்டம் பிடித் துள்ளனர். என்ன மாதிரியான கட்சி இது, 41 பேர் மறைவிற்கு வருத்தம்கூட கட்சி தெரிவிக்கவில்லை. இது அக்கட்சித் தலைவரின் மனநிலையை காட்டுகிறது. அரசியல் கட்சிக்கான குறைந்தபட்ச சமூக பொறுப்பைக்கூட த.வெ.க. பின்பற்றவில்லை. சம்பவத்திற்கு பொறுப்பேற்கவும் இல்லை'' என்று த.வெ.க. கட்சித்தலைவர் விஜய்யையும், அக்கட்சியின் செயல்பாட்டையும் வறுத்தெடுத்தார்.
மேலும், "இந்த வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் காவல்கண் காணிப்பாளர் விமலா, மற்றொரு காவல் கண் காணிப்பாளர் சியாமளா தேவி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப் படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வுக்குழு வசம் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை:
அடுத்ததாக, தேசப்பாதுகாப்புக்கும், நல்லிணக் கத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், கருத்து பதி விட்ட ஆதவ் அர்ஜூனாமீது நடவடிக்கை எடுக்கக் கோரி அண்ணாநகரை சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர் அளித்த புகாரை நீதிபதி என்.செந்தில் குமார் விசாரித்த போது, ஆதவ் அர்ஜூனா மீது ஏற்கெனவே வழக் குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதுகுறித்து நீதிபதி, "ஒரு சின்ன வார்த் தையும் பெரிய பிரச் சனையை ஏற் படுத்திவிடும். இவர் கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறீர்களா? புரட்சி ஏற்படுத்து வதுபோல் கருத்துக் களை பதிவிட் டுள்ளார். இதன் பின்புலத்தை விசா ரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
சி.பி.ஐ. விசாரணை மனு தள்ளுபடி:
இதே கரூர் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடவும், த.வெ.க. அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிடவும், அரசியல் கட்சிக்கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களைத் திரட்டுவதைத் தடுக்க வழிகாட்டுதல்களை உருவாக்குவது உட்பட 7 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு, வெள்ளியன்று, நீதிபதிகள் எம்.தண்டபாணி, எம்.ஜோதிராமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவிற்கு அரசுத்தரப்பு மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து த.வெ.க. தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், "ஏற்கெனவே கூட்டநெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் திருப்தியில்லை என்றால்தான் விசாரணையை மாற்றக் கோரலாம். விசாரணையின் தொடக்க நிலையிலேயே எப்படி விசாரணையை மாற்றும்படி கேட்க முடியும்? பாதிக்கப்பட்டவர்களுடன் மனுதாரருக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை. பாதிக்கப்பட்ட யாரும் மனு செய்யவில்லை. விசாரணையை மாற்றக்கோர மனுதாரருக்கு என்ன தகுதியுள்ளது?'' எனக் கேள்வியெழுப்பி மனுவை தள்ளுபடி செய்தது.
பொதுக்கூட்டம் நடத்த வழிமுறைகள்:
அடுத்ததாக, கட்சிக்கூட்டங்களை சாலை களில் நடத்துவது தொடர்பான விசாரணையில், "கரூரில் கூட்டம் நடந்தது மாநில சாலையா? அல்லது தேசிய நெடுஞ்சாலையா? எப்படி அனுமதி வழங்கினீர்கள்? கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் நலனே முக்கியம். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டியது அவசியம்'' என குறிப்பிட்டது.
அரசுத்தரப்பில், "கூட்டத்திற்கு அனுமதி வழங்கியது தேசிய நெடுஞ்சாலை அல்ல, கரூர் வேலுச்சாமிபுரத்தில் சாலையின் வடக்கே தான் அனுமதி வழங்கப்பட்டது. இது மாநில நெடுஞ் சாலை வரம்பில் வராது'' எனத் தெரிவிக்கப்பட்டது. உள்துறை செயலாளர் தரப்பில், "சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப் பட்டுவருகின்றன. அதுவரை நெடுஞ்சாலைகளில் எந்த கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது. அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். பொய் வதந்திகளை பரப்புகின்றனர்'' என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நிலையை எண்ணிப்பாருங்கள். யாராவது நினைத் துப் பார்த்திருப்பார்களா? குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். பொதுமக்களின் நலனே பிரதானம். குடிமக்கள் எந்த கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். அரசின் பாதுகாப்பு அமைப்பு முறையாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை'' எனக் கூறியதோடு, "அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கான அனுமதி தொடர்பாக அரசின் வழிகாட்டுதல்களை பிறப்பிக்கும்வரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் எந்த அரசியல் கட்சிக் கூட்டத்திற்கும் அனுமதி வழங்கத் தடை விதிக்கப்படுகிறது. வழிகாட்டுதல்கள் வெளியான பின் சம்பந்தப்பட்டவர்களிடம் குடிநீர், உணவு, கழிப்பறை, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக பிரமாணப்பத்திரம் எழுதி வாங்க வேண்டும். இழப்பீடு அரசால் வழங்கப்பட்டுள்ளதால் அதுதொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன'' என உத்தர விட்டனர்.
த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரையில் நாமக்கல் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், அரசுத் தரப்பில், "த.வெ.க.வினர் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. த.வெ.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் மீது மேலும் எட்டு வழக்குகள் பதியப் பட்டுள்ளன'' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து நீதிபதிகள், "கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சி யினரை கட்டுப்படுத்தத் தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?'' எனக் கேள்வி எழுப்பியதோடு, சதீஷ்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.
ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் ரத்து:
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமாரின் முன்ஜாமீன் மனுக்கள் நீதிபதி எம்.ஜோதிராமன் முன் விசாரணைக்கு வந்தது. இதன்மீதான வாதத் தில், "காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. வேலுச் சாமிபுரத்தை பற்றி எங்களுக்கு தெரியவில்லை. 4 மணி நேரம் எங்கள் தலைவர் தாமதமாக வந்தார். அது கிரிமினல் குற்றமா? ஒரு விபத்தை கொலையாக மாற்றக்கூடாது'' என ஆனந்த், நிர்மல்குமார் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து நீதிபதி, "நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர்களாக உங்களுக்கு பொதுமக்கள் மீது எதாவது பொறுப்பு இருக்கிறதா இல்லையா?'' என்று கேள்வியெழுப்பினார். அதற்கு, "நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன்தான், அவர் கைது செய்யப்பட்டுவிட்டார்'' என, மொத்தப் பழியையும் மாவட்ட செயலாளர் மீது திருப்பிவிட்டு, ஆனந்த் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில், "மனுதாரர்கள் இருவரும் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். 12 மணிக்கு தலைவர் வருவாரென்று இவர் கள்தான் அறிவித்த னர். 7 மணி நேரம் தாமதமாக வந்தும் கூட்டத்தினருக்கு தண்ணீர், உணவு எதுவுமே வழங்க வில்லை. ரோடு ஷோ நடத்த அனுமதியில்லாமல் நடத்தியுள்ளனர். சம்பவம் நடைபெற்றதும் இவர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர். முதலுதவி, மருத்துவ உதவிகூட செய்யவில்லை. தலைமறைவாக இருந்தவர்கள் எப்படி முன்ஜாமீன் கோரமுடியும்?'' எனக் கேள்வியெழுப்பினர்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, "கரூர் பெருந்துயரம் தொடர்பான வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றது.
இந்த சூழலில் இவர்களுக்கு ஜாமீன் வழங்குவது ஏற்புடையது அல்ல, எனவே, ஆனந்த், நிர்மல்குமார் இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.
-துரை.மகேஷ், தெ.சு.கவுதமன்
அருண்பாண்டியன்