பா.ஜ.க.வின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை, ஏற்கெனவே 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மும்மொழிக்கொள்கை அமலில் இருக்கிறது. அதன்படி மராத்தி, ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் மும்மொழிக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி தொடக்கப்பள்ளி மாணவர்களும் இந்தியை கட்டாயம் கற்று, தேர்வெழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டிய சூழல். இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகாராஷ்டிராவின் முகமாக அறியப்பட்ட பால்தாக்கரேவின் மறைவுக்குப்பின் அவரது வாரிசான உத்தவ் தாக்கரேவுக்கும், நெருங்கிய உறவினரான ராஜ் தாக்கரேவுக்கும் இடையே ஏற்பட்ட பிளவால், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவுக்கு போட்டியாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியை ராஜ்தாக்கரே நடத்திவந்தார். இந்த பிளவால் பா.ஜ.க. மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், தற்போது மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரேவும், ராஜ்தாக்கரேவும் குரல் கொடுத் துள்ளனர். இந்த விவகாரத்தில் இருவரும் ஒரே நேர்கோட்டில் அரசியல் செய்துவரும் நிலையில், மகாராஷ்டிர மாநில மக்களின் நலனுக்காகவும், மராத்தி மொழியின் நலனுக்காகவும், உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ராஜ்தாக்கரே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்தாக்கரே, "இந்தி மொழித்திணிப்பு போன்ற பெரிய பிரச்சனைகள் தலைதூக்கும் போது, தாய்மொழியான மராத்தியை காப்பாற்றுவதே எங்களது முக்கிய கடமையாகிவிடும். எனவே எங்களுக்கு இடைப்பட்ட பிரச்சனைகள் சின்ன விஷயங்களாகிவிடும். மகாராஷ்டிராவின் நலனுக்காக, மராத்தி மொழி பேசும் மக்களுக்காக, எங்களுக்கு இடையேயான மோதல்களைக் கைவிட்டுவிட்டு ஒருங்கிணைந்து செயல்படப் போகிறோம்" என்று உத்தவ் தாக்கரேவுக்கு ராஜ்தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அழைப்புக்கு பாசிட்டிவ் பதிலை கொடுத்துள்ள உத்தவ் தாக்கரே, "நானும் மராத்திய மக்களின் நலனை முன்னிட்டு, எங்களுக்கிடைப்பட்ட சின்னச் சின்ன பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருங்கிணைந்து போராடத் தயார். அதேவேளை, மகாராஷ்டிர மக்களுக்கு எதிரான சக்திகளைத் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கும் போக்கை அவர் விடவேண்டும்'' என்று, பா.ஜ.க.வின் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து வெளியேறினால் ஆதரிக்கத் தயாரென்று குறிப்பிட்டுள்ளார். ஆக, பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பை எதிர்க்கும் நோக்கில் இரு கட்சிகள் இணைந்து செயல்படவிருப்பது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அம்மாநிலத்தின் மொழி ஆலோசனைக் குழுவானது, "மூன்று மொழிகளை ஒரே நேரத்தில் கற்றுக்கொள்வதால், மாணவர்களால் ஒரு மொழியைக்கூட முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகும். மாணவர்களின் உளவியலுக்கு எதிராக இம்முடிவு இருக் கிறது. கல்வி ரீதியாக இந்த முடிவு சரியானது கிடையாது. அறிவியல் அடிப்படையற்றதாக இருப்பதால், இது மாணவர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தைத்தான் தரும். எனவே 12ம் வகுப்பு வரை 2 மொழிகள் மட்டுமே போதுமானது. இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது எங்களை அழைத்து ஆலோசித்திருக்கவேண்டும்'' என்று மகாராஷ்டிர அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியும் இந்தி மொழித்திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எனவே இதுகுறித்து விளக்கமளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "தேசிய கல்விக்கொள்கையில் மூன்று மொழிகளைக் கட்டாயம் கற்பிக்க வேண்டும். இந்தியைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் இருக்கும் காரணத்தால் இந்தியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்கிறோம். இதுவே 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு மொழியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்கும் படி கேட்டால், அவர்கள் கேட்கும் மொழியைக் கற்பிக்கத் தயார்'' எனக் கூறி சமாளித்தார்.
பின்னர் எதிர்ப்பு வலுத்ததால், "மராத்தி மொழி மட்டுமே கட்டா யம், மூன்றாவது மொழி யான இந்தி கட்டாயம் இல்லை'' என்று தேவேந்திர பட்னாவிஸ் அறிவித் துள்ளார். மகாராஷ்டிர முதல்வரின் அறிவிப்பை வரவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தி மொழி கட்டாயம் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு எழுந்ததால், மராத்தி மொழி மட்டுமே கட் டாயம் என்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணித்ததன் விளைவுதான் எதிர்ப்பும், இந்த அறிவிப்பும். இனியாவது பிரதமர் மோடியும், மத்திய கல்வி அமைச்சரும் இந்தி மொழி திணிப்பு குறித்து விளக்கமளிக்க வேண்டும். இந்தி கட்டாயமில்லை என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமா?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் பற்றவைத்த நெருப்பு தற்போது மகாராஷ்டிராவரை மும்மொழிக்கு எதிர்ப்பு என பற்றி எரிகிறது!