தேசியக் கொடிகளை கையிலேந்தியபடி அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் வலுக்கட்டாய மாக காவல்துறையினர் கைது செய்து அகற்றி யுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 இரு மண்டலங்களிலுள்ள தூய்மைப் பணியாளர்களை ராம்கி என்கிற தனியார் நிறுவனத்தின்கீழ் பணிபுரிய சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்கெதிராக அம்பத்தூரிலுள்ள எல்.டி.யூ.சி. தொழிற்சங்க தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் 6 நாட்கள் நடைபெற்றது. அரசு இதற்கு செவிசாய்க்காத நிலையில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் போராடிவந்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையாளர் குமர குருபரன் உள்ளிட்டோருடன் பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
ஆகஸ்டு 12-ஆம் தேதி தனியார் நிறுவனத்தில் பணியில் இணைவதால் என்னென்ன பலன்கள் உள்ளது என ஒரு அறிக்கையாகத் தெரிவித்தது மாநகராட்சி. உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு பணியைத் தொடங்கவும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது மாநகராட்சி.
நாங்கள் கேட்பது மாநகராட்சியின்கீழ் பணி. அதுவும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர் களுக்கு நிரந்தரப்பணி என்பதே எங்களின் கோரிக்கை. அதை அறிவிப்பு செய்யும்வரை எங்க ளின் போராட்டம் தொடரும் என போராட்டக் காரர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் தேன்மொழி என்பவர், "தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது' என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இரு தரப்பையும் கேட்ட நீதிபதி, "ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டுமெனவும், அவர்கள் போராடுவதற்கு என இடம் உள்ளது. அதில் சென்று அவர்கள் போராட்டத்தைத் தொடரலாம் எனவும் தெரிவித்தார். “"அறவழியில் போராடும் நாங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி எங்கள் போராட்டத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள். உயிரே போனாலும் ரிப்பன் மாளிகையிலிருந்து நகரமாட்டோம்''’என தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோ சனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்காமல் கையசைத்துச்சென்றார் அமைச்சர் சேகர்பாபு. அவர் புறப்பட்ட சில மணி நேரத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக தொடர் போராட்டத்தை மேற் கொண்டுவந்த தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக காவலர்கள் கைதுசெய்து அகற்றினர்.
கைதின்போது காவலர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும், இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்களத்தில் நின்றுகொண்டிருந்த எல்.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவர் பாரதியை சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்து வாகனத்தில் ஏற்றினர். சில பெண்கள் மயக்கமடைந்தனர். சிலர் கதறிக் கொண்டே சென்றனர். போராட்டக்காரர்களுடன் பங்குபெற்றிருந்த வளர்மதி என்னும் வழக்கறிஞரை காவல்துறை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று அடித்ததாக புகார் எழுந்துள்ளது.
கைது செய்தவர்களை கீழ்க்கட்டளை விஜயலஷ்மி மஹால், நந்தம்பாக்கம் ஜீவஜோதி மஹால், ஆதம்பாக்கம் சரோஜினி மஹால், சைதாப்பேட்டை முத்தமிழறிஞர் கலைஞர் மஹால், வேளச்சேரி சமுதாய நலக்கூடம், மடுவங்கரை சமுதாய நலக்கூடம், பரங்கிமலை சமுதாயக்கூடம், தேனாம்பேட்டை பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் இறக்கினர்.
வேளச்சேரியில் கைதுசெய்யப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் மீண்டும் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். உடனடியாக போலீசார் அவர்களை மீண்டும் கைதுசெய்து சமுதாயக் கூடத்தில் அடைத்தனர்.
பிறகு சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கைச் சுற்றிலும் பேரிகார்ட் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்த 13 நாட்களாக தொடர் போராட்டத்தை முன் னெடுத்த தூய்மைப் பணியாளர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
"தனியார்மயமாக்கலை கைவிட்டு பழைய முறைப்படி எங்களை பணியமர்த்த வேண்டும் என்கின்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி 13 நாட்களாக போராடிவந்த தூய்மைப் பணி யாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாய மாக கைது செய்திருக்கிறார்கள். நிச்சயம் இதற்கு தமிழக அரசு பதில் சொல்லவேண்டும். சட்டப்படி மீண்டும் அனுமதி பெற்று எங்களின் போராட்டம் தொடரும். சமூக நீதி பேசும் அரசு எங்களுக்கு அநீதி இழைத்துவிட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது நியாயமா?'' என கேள்வியெழுப்புகின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.
இந்நிலையில், 14ஆம் தேதி வியாழனன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, "தூய்மைப்பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் குப்பையை அள்ளும்போது நுரையீரல், தோல்நோய் பாதிப்பு ஏற்படக்கூடும், எனவே அவர்களுக்கு சிகிச்சையளிக்க தனித் திட்டம். தூய்மைப் பணியாளர்கள் தொழில் தொடங்கினால் 3.5 லட்சம் கடனுதவி. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி கட்டணச் சலுகை. தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.
-சே
படங்கள்: எஸ்.பி. சுந்தர் & ஸ்டாலின்