கொரோனா காலம் முடியும்போது தேர்தல் காலம் நெருங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஈரோடு மாவட்ட அதிமுக அரசியலில் கோஷ்டிப் பூசல்கள் வலுத்து வருகின்றன. மாவட்டத்தில் மொத்தமுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான். இதில் இரண்டு அமைச்சர்கள் உள்ளார்கள். சீனியர் அமைச்சர் செங்கோட்டையன், மற்றொருவர் பவானி கருப்பணன்.

erode

அதிமுக அமைப்பு நிலையில் ஈரோடு மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. மாநகர் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.வி.ராமலிங்கம் மா.செ.வாக உள்ளார். புறநகர் மாவட்டத்திற்கு அமைச்சர் கருப்பணன் மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

இதில் மாநகர் மாவட்ட கட்சிப் பொறுப்பு அமைச்சர் கருப்பணன் வசம்தான் இருந்து வருகிறது. பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் முன்பு ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார். அவர் வகித்த பதவியைத்தான் தற்போது கருப்பணன் வகித்து வருகிறார்.

Advertisment

அதனால் புறநகர் மாவட்டத்தில் கருப்பணனுக்கும் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கும் அரசியல் மோதல் தொடர்ந்து இருந்து வருகிறது.

erodeமாநகர் மாவட்ட அதிமுகவுக்கு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் கருப்பணனை தற்போது ஈரோடு நகரத்திலேயே கால் வைக்கக் கூடாது என மாநகர் மா.செ.வான எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கமும், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசுவும் தடை போட்டுள்ளார்கள். கடந்த ஆறு மாத காலமாக ஈரோடு பகுதியில் நடக்கும் கட்சிக் கூட்டங்கள் அரசு விழாக்களில் கருப்பணன் கலந்துகொள்ளாதபடி இந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களும் பார்த்து வருகிறார்கள். இதுபற்றி கருப்பணன் அமைச்சர் செங்கோட்டையனிடம், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கமும் தென்னரசுவும் சர்வாதி கார தனமாக நடந்துகொள்வது எப்படி சரியாகும் என நியாயம் கேட்டுள்ளார்.

அந்த இரண்டு எம்எல்ஏக் களிடம் செங்கோட்டையன், ""கட்சியின் தலைமை உங்க மாநகருக்கு அமைச்சர் பொறுப்பு கருப்பணனுக்குத் தான் கொடுத்துள்ளது. அப்படி இருக்கும் போது அமைச்சர் ஏன் ஈரோட்டுக்கு வரக்கூடாது என கூறுகிறீர்கள்?'' என கேட்டுள்ளார் அதற்கு அவர்கள், ""கருப்பண்ணன் எங்களுக்கு வரவேண்டியவற்றை ஏமாற்றிவிட்டார். அதேபோல் நாங்கள் சுயமாக இங்கு எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நடந்துகொள் கிறார்.

Advertisment

ஆகவே அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் நாங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டோம். எங்கள் பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளக்கூடாது. முதலமைச்சருடன் ஏற்கனவே நாங்கள் நேரடியாக புகார் கூறியுள்ளோம். இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. ஆகவேதான் கருப்பணன் எங்கள் தொகுதிக்குள் வரக்கூடாது என கூறுகிறோம். நீங்கள் சீனியர் அமைச்சர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். உங்களோடு கருப்பணன் வந்தால் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்'' என கறாராக கூறி இருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க புறநகர் பகுதியில் உள்ள பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன் இப்போது அமைச்சர் கருப்பணனுக்கு எதிராக மாறி உள்ளார். அந்த சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் திமுகவை சேர்ந்த சிலரை அதிமுகவுக்கு ஈஸ்வரன் கொண்டு வந்திருக்கிறார். அப்போது மாவட்ட செயலாளர் அமைச்சர் கருப்பணன் முன்னிலையில் அவர் களை அதிமுகவில் இணைக்காமல் அமைச்சர் செங்கோட்டையனின் குள்ளம்பாளையம் பண்ணை வீட்டுக்கு அவர்களை கூட்டிச் சென்று அதிமுகவில் இணைத்துள்ளார். ஒரு மாவட்ட செயலாளருக்கு தெரியாமல் அல்லது மாவட்ட செயலாளரை மதிக்காமல் இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்தினீர்கள் என செங்கோட்டையனிடம் கருப்பணன் தனது அதிருப்தியை கூறியிருக்கிறார். இதனால் செங்கோட்டையனுக்கும் கருப்பணனுக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது.

erode

இது பற்றி கருப்பணன் ஆதரவாளர்கள் கூறும்போது, ""அமைச்சர் கருப்பணன், மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர் அவ்வளவுதான். ஈரோடு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் கருப்பணன் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் செலவு செய்ததாக அவர்கள் ஒரு போலி கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அதற்கு மேல் வசூல் செய்து விட்டார்கள் இதுதான் பிரச்சனை. ஆகவே அவர்கள் பிளாக்மெயில் செய்வது அமைச்சருக்கு பிடிக்கவில்லை. அதேபோல் பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன் அமைச்சரை மதிக்காமல் நடக்கிறார். அமைச்சர் ஒரு மாவட்ட செயலாளராக இருந்து சுயமாக செயல்படவிடாமல் இப்படி எம்எல்ஏக்கள் சுற்றிச்சுற்றி விரட்டுவது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்புகிறார்கள். ஈரோடு அதிமுக அரசியல் கொதிநிலையில் சென்று கொண்டு இருக்கிறது.

-ஜீவாதங்கவேல்