காங்கிரஸ் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 15-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நக்கீரனுக்காகச் சந்தித்தோம்.

"சென்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியை இத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி பெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்கிறார். இந்தியாவிலுள்ள முதல்வர்களிலேயே கடுமையான உழைப்பாளி என்று பெயரெடுத்துள்ளார். அவர் காணொலி மூலம் பிரச்சாரம் செய்வதை பா.ஜ.க., அ.தி.மு.க.வினர் கொச்சைப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் நேரடியாகப் பிரச்சாரம் செய்யும் இவர்களால் 500 பேரைத்தான் காணமுடிகிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், காணொலி மூலமாக லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறார் என்பதை இவர்கள் மறந்துவிடக்கூடாது.

evks

Advertisment

அ.தி.மு.கவில் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கிற எடப்பாடி பழனிச்சாமி, உளறுவதில், பொய் சொல்வதில் வல்லவராக இருக்கிறார். கொட நாட்டில் நடந்த கொலை, கொள்ளையில் பழனிசாமிக்கு பெரும் பங்கு இருப்பது விசாரணைக்கு பிறகு முழுமையாக வெளிவரும். அந்த வழக்கின் தீர்ப்பில் முதன்மைக் குற்றவாளியாக எடப்பாடி பழனிச்சாமிதான் இருக்கப்போகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்களை நானே கூறியிருக்கிறேன். இப்போது யோக்கிய சிகாமணிபோல் பேசுகிறார்.

பா.ஜ.க. இன்றைக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை என்று சொன்னாலும் கூட அ.தி.மு.க., முழுக்க முழுக்க பாஜ.க.வின் அடிமையாக... இருப் பதை யாரும் மறுத்துவிட முடியாது. சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதியைப் பேசும் தார்மீக உரிமை யை அ.தி.மு.க. இழந்துவிட்டது. அ.தி.மு.க.வினர் இன்றைக்கு பெரியாரையும், அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் மறந்து விட்டார்கள். இன்னும் சில நாட்களில் ஜெயலலிதாவையும் மறந்து விடுவார்கள். கடைசியில் தமிழக மக்கள் முழுமையாக அ.தி.மு.க.,வை மறந்து விடுவார்கள்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி, ஒரே கொடி, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை அமல்படுத்த முயற்சிப்பதன் எதிரொலிதான் கர்நாடகாவில் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள். பள்ளிக்குழந்தைகளின் கல்வியை வீணாக்குவதோடு அவர்களைப் பலிகொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஒரே கொடி ஒரே கலாச்சாரக் கொள்கையைத் தீவிரமாக்கினால் சோவியத் யூனியன் சிதறுண்டதைப்போல் இந்தியாவும் சிதறுவதற்கு வாய்ப்புள்ளது. நாட்டுப்பற்றுள்ளவர் கள் பா.ஜ.க.வை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டுவந்தபோது, அந்தந்த மாநிலத்தின் சவுகரியத்துக்கேற்ப அந்தத் தேர்வை வைத்துக்கொள்ளலாம் என்றொரு விதிமுறையும் இருந்தது. ஆனால் பா.ஜ.க.வினரோ ஏழை எளிய கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும்படியான புதிய நீட் தேர்வைக் கொண்டுவந்துள்ளதால்தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியும் எதிர்த் துள்ளார். நேருவின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு உடமை என்று சொல்லப்பட்ட இன்சூரன்ஸ், வங்கி, ரயில்வே, விமானம் உள்ளிட்ட பொதுத்துறைகளில் மக்களுக்கான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு ஒருசில பணக் காரர்களுக்காக எல்.ஐ.சி.யைத் தனியாருக்கு விற்க ஏற்பாடு செய்கிறார்கள். ரயில்வேயும் தனியாருக்கு விற்கப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆவின் பாலுக்கு விலைக்குறைப்பு செய்தார். பெட்ரோலுக்கு ரூ.3 விலை குறைத்தார். மத்திய அரசே அதன் பின்புதான் குறைத்தது. கொரோனா நிவாரணமா குடும்பத்துக்கு ரூ.4,000 கொடுத்துள்ளார். மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம் என 9 மாத ஆட்சிக் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் செல்போன் கொடுப்ப தாகக் கூறினார்கள். கொடுத்தார்களா?. தி.மு.க.வைப் பொறுத்தவரை வாக்குறுதிகளைக் கட்டாயம் நிறைவேற்றுவார்கள். கலைஞர் ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு இலவசத் தொலைக்காட்சி கொடுத்து வரலாற்றில் இடம்பெற்றது தி.மு.க. தான். மத்திய அரசின் தவறுகளை ஸ்டாலின்தான் தைரியமாக எதிர்த்துவருகிறார். நீட் தேர்வில் 7.5% இட ஒதுக்கீடு பெறுவதில் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க.வின் பங்கும் உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியை அகற்றியபோது கஜானாவைக் காலியாக வைத்திருந்தார்கள். மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல துறைகள் கடனில் சிக்கியிருந்தன. கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.கவின் ஆட்சியால் ஏற்பட்ட கடன்கள் அவை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதனைச் சரிசெய்துவருகிறார்கள். விரைவில் நிலைமை சீராகும்.

நகைக்கடன் கொடுத்ததில் பல கூட்டுறவு சங்கங்களில் ஊழல்கள் நடந்துள்ளன. கடந்த ஆட்சியில் பதவியில் இருந்த அ.தி.மு.கவினர், அவர்களுக்குத் தேவையானவர்களின் பெயரில் தங்க நகை என்று போலி நகையை அடகு வைத்திருந்த உண்மை பல இடங்களில் தெரியவந்துள்ளது. அதேபோல, ஒரு குறிப்பிட்ட நபருக்கு பல்வேறு பெயர்களில் கடன் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மந்திரிகளும், பல அதிகாரிகளும் ஊழல் செய்த காரணத்தினால் தான் இத்தகைய முறைகேடு நடந்துள்ளது. அதனைக் களைய தி.மு.க. அரசு முயற்சி எடுத்துவருகிறது" என்றார் ஆவேசமாக.

-ஜீவாதங்கவேல்

படம்: ஸ்டாலின்