ந்திய மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி. வரிகள் குறைக்கப்படும் என சுதந்திரத் தினத்தன்று அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. அதனை நிறைவேற்றும் வகையில் கடந்த 20 நாட்களாக பல்வேறு ஆலோசனைகளில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்  உயரதிகாரிகளுடன் ஈடுபட்டிருந்தது ஜி.எஸ்.டி. கவுன்சில். அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 5, 12, 18, 28 சதவீத அடுக்குகளில் இருந்த ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை 5%, 18% மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கான 40% என்கிற புதிய வரி கட்டமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக, 3-ந்தேதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல்  அளித்திருக்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். 

Advertisment

அந்த வகையில் இனி இந்தியாவில் 3 விகிதங்கள் மட்டுமே வரி கட்டமைப்பு இருக்கும். இந்த புதிய வரி விகிதங்கள்  செப் டம்பர் 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ஏற்கனவே 12, 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்ட பெரும்பாலான பொருட் களுக்கு இனி 5% மட்டுமே ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும். அதேபோல ஜி.எஸ்.டி. வரியிலிருந்து ஏராளமான பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

உயிர் காக்கும் மருந்துகளுக்கும், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கும்  இனி ஜி.எஸ். டி.வரி கிடையாது.  வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டதை அடுத்து ஏ.சி.க்கள், 32  அங்குலத்திற்கு கூடுதலான டி.வி.க்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள்,  102 வகையான பொருட்கள்  அனைத்தும் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பொருட்களின் விலை மளமளவெனச் சரியத் தொடங்கும். 

மேலும், பிஸ்கட்,  பாஸ்தா, மக்ரோனி, நூடுல்ஸ் போன்ற பொருட்கள், சர்க்கரை, நிறமூட்டி, சர்க்கரை கட்டி கள் ஆகியவைகளுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைத்திருக்கின்றனர்.  தவிர, சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பான்கள்,  வேளாண் இயந்திரங்கள், விவசா யத்துக்கு பயன்படுத் தப்படும் இயற்கை பூச்சிக்கொல்லிகள் ஆகியவை களுக்கும் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.  350 சி.சி.  மற்றும் அதற்கு கீழான இரு சக்கர வாகனங்கள், பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி., சி.என்.ஜி. கார்கள்,  மூன்று சக்கர வாகனங்கள் ஆகிய வைகளுக்கான  ஜி.எஸ்.டி. வரி 28%-ல் இருந்து 18% ஆக குறைத்துள்ளார் நிர்மலா சீதாராமன். 

Advertisment

GST1

மேலும், ஹேர்ஆயில், ஷாம்பு, டூத்பேஸ்ட், சோப், ஷேவிங் கிரீமுக்கான வரி 18%ல் இருந்து 5% சதவீதமாகவும், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்கள் 12%-ல் இருந்து 5% சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல்வேறு பொருட்களின் வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, "சாதாரண மக்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு சமர்ப்பித்த திட்டங்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில், கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. பரவலான இத்தகைய  சீர்திருத்தங்கள் நமது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். சிறு வணிகர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்'' என்கிறார். 

ஆனால் தொழில் துறை சார்ந்த வல்லுநர்களோ, "ஜி.எஸ்.டி. வரி கட்ட மைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை வரவேற் கிறோம். இதில் நல்ல அம்சங்களும் இருக்கின்றன. அதேசமயம், இந்த குறைப்பால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரியளவில் லாபம் இல்லை. அதே சமயம், 12 சதவீத  வரியில் இருந்த பொருட்களின் எண்ணிக்கை அதிகம். இவை  நடுத்தரவர்க்கத்தினருக்கானது. அந்த பொருட்களில் கணிசமானவற்றை 5 சதவீதத்திற்குள் கொண்டு வந்துவிட்டு, பெரும்பாலான பொருட்களை 18 சதவீத அடுக்கிற்கு மாற்றிவிட்டனர். இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு மறைமுகச் சுமையும் இருக்கிறது. 28 சதவீத வரி அடுக்கில் இதுவரை இருந்த கார்கள் மற்றும் டூவீலர்களின் விற்பனை கடந்த சில வருடங்களில் அதிரடியாக சரிவை சந்தித்திருந்தன. பெரு முதலாளிகளின் லாபங்களுக்காக 28 சதவீத வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளார் நிர்மலா. மேலும், ஜி.எஸ்.டி. வரியால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், சிறு- குறு -நடுத்தர தொழில் நிறுவன உரிமை யாளர்கள் என பலரும் பெரிதும் பாதிக்கப்பட்ட னர். மோடி அரசின் மீது கடும் கோபம் அவர் களுக்கு இருக்கிறது. இதனை சமாளிக்கவும், பீஹார் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள் வதற்கு வசதியாகவும்தான் வரி விகிதங்களை மாற்றி பல்டி அடித்துள்ளார் நிர்மலா சீதாராமன்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள். 

Advertisment

வரி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டன. அது கண்டுகொள்ளப்பட வில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றங்கள் குறித்து பதிவு செய்துள்ள முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், "ஜி.எஸ்.டி. தர நிர்ணயம் மற்றும் பல்வேறு பொருட்களின் சேவை வரி குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  ஆனால்         இது 8 ஆண்டுகள் தாமதமாக வந்துள்ளது. தற்போதைய ஜி.எஸ்.டி. வடிவமைப்பு மற்றும் இதுவரை நிலவிய விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக்கூடாது. கடந்த 8 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி.யின் அமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தன. அரசாங்கத்தை இந்த மாற்றங்களைச் செய்யத்தூண்டிய காரணங்களை ஊகிப்பது சுவாரசியமாக இருக்கும். 

மந்தமான பொருளாதார வளர்ச்சியா? பெருகிவரும் குடும்பக் கடன்களா? குறைந்து வரும் குடும்ப சேமிப்புகளா? பீகார் தேர்தலா? டிரம்பின் வரி விதிப்பா?’என சரமாரியான கேள்விகளால் மோடி அரசை தாக்கியிருக்கிறார் ப.சிதம்பரம்!