ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் தனியாக நடந்து வந்த நிர்மலாதேவி அமைதியாகவே இருந்தார். ஜாமீன் கிடைப்பதற்கு முன்பு, மதுரை மத்திய சிறையிலிருந்து நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக பிப்ரவரி 14 அன்று நிர்மலாதேவியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது நூற்றுக்கணக்கான காக்கிகள் குவிக்கப்பட்டனர். செய்தியாளர்களிடம் நிர்மலா தேவி எதுவும் பேசிவிடக்கூடாது என்பதற்காக வாயைக்கூட பொத்தினார்கள். போட்டோ எடுக்கவோ, நிர்மலாதேவியிடம் கேள்வி கேட்கவோ கூடாது என்று செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

nrimaladeviஅந்த போலீஸார் யாரையும் கடந்த 27-ந் தேதி நிர்மலாதேவி ஆஜரானபோது காணவில்லை. ஜாமீனில் வெளிவருவதைத் தடுத்ததிலிருந்து சகலத்திலும் நிர்மலாதேவி விஷயத்தில் ஏதோ ஒரு திட்டத்தோடு அரசுத்தரப்பு நடந்து வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

நம்மைப் பார்த்ததும், மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு, தன் உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்து, "எதுவும் பேசக்கூடாது' என்று நீதிமன்றத்தின் ஜாமீன் நிபந்தனையை சைகை மூலம் செய்தார். ரத்த சொந்தம் என்றாலும் பெரிய இடைவெளி விட்டு பின்னால் வந்த நிர்மலா தேவியின் அண்ணன் ரவி, ""பேட்டி எதுவும் கொடுக்கக்கூடாது என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த வழக்கிலிருந்து முழுவதும் விடுதலையான பிறகு நிச்சயம் பேட்டி அளிப்பார்''’என்றார் நம்மிடம்.

வழக்கில் சம்பந்தப்பட்ட உதவிப்பேராசிரியர் முருகனும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் வந்திருந்தனர். நீதிமன்ற நடைமுறை காரணமாக, நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில், தன் அண்ணன் ரவியுடனும் வழக்கறிஞர்களுடனும் நிறைய பேசினார் நிர்மலாதேவி.

Advertisment

சிறையிலிருந்து நீதிமன்றம் வந்தபோதுகூட நிர்மலாதேவியால் சிரிக்க முடிந்தது. வழக்கு நிமித்தமாக நீதிமன்றத்துக்கு வந்த பலரையும் ஆர்வமாக வேடிக்கை பார்க்க முடிந்தது. ஜாமீனில் விடுதலையாகி, இன்று நீதிமன்றம் வந்தபோது, பூச்சூடி அலங்காரம் செய்திருந்தாலும், முகம் வாட்டமாகவே இருந்தது.

விடுதலையான பிறகு கணவர் சரவண பாண்டியோ, மகள்கள் இருவருமோ தன்னைச் சந்திக்காதது, கல்லூரிப் பேராசிரியர் வேலை திரும்பவும் கிடைப்பதில் உள்ள தடைகள், வேலை கிடைத்தாலும் பலரையும் முகம் பார்த்துப் பேசுவதில் உள்ள சங்கடங்கள், நடந்த உண்மையை யாரிடமும் வெளிப்படுத்த முடியாத ஆதங்கம், கடுமையான நிதி நெருக்கடி என சிக்கலான விஷயங்கள் பூதாகரமாகத் தெரிய, மனச்சிறை யிலிருந்து விடுபட முடியாமல் எல்லாவற்றையும் அசை போட்டபடியே, விரக்தியில் தவிக்கிறார் நிர்மலாதேவி!

-சி.என்.இராமகிருஷ்ணன், அண்ணல்

Advertisment

படம்: ராம்குமார்