அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதாகி, 8 மாதங்களாகியும் பிணை கிடைக்காமல், பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப்பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர், ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டில் தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கு குறித்து, இம்மூவரின் வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் இதோ -
உதவிப்பேராசிரியர் முருகனின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய்:
“சுப்ரீம் கோர்ட்டில் பெயிலுக்கு மூவ் பண்ணிக்கிட்டிருக்கோம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், நான் எதுவும் பேச விரும்பவில்லை.’’
ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் முருகனுக்காக ஆஜராகிவரும் வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன்:
“சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அளித்த வாக்குமூலம் என்ற பெயரில், நிர்மலாதேவி தன்னைத்தானே தவறான பெண் என்று ஒப்புக்கொண்டதாக, நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. காவல்துறை கஸ்டடியில் இருக்கும்போது, பெறப்படும் வாக்குமூலம் எதுவுமே அனுமதிக்கத்தக்கது அல்ல; ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதெல்லாம் “சி.பி.சி.ஐ.டி. தங்களுடைய எஜமானர்களின் உத்தரவுக்கு இணங்க, யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவதாகவே கருத முடிகிறது. நிர்மலாதேவியின் ஆடியோவிலேயே, யுனிவர்சிடியில் உயர் அதிகாரிகள் சில அசைன்மெண்ட் சொல்லியுள்ளதாக இருக்கிறது. ஆனால், உயர் அதிகாரிகள் யாரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக இல்லை. இந்த வழக்கைப் பொறுத்தமட்டிலும் இன்றைக்கு வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பவர்களெல்லாம் பலிகடாக்கள்தான். ஆனாலும், உண்மைகள் ஒருநாள் வெளிப்படும். அப்போது, உண்மைக் குற்றவாளிகளெல்லாம் வெளிச்சத்துக்கு வருவாங்க.’’
ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் வழக்கறிஞர் ஆரோக்கிய செல்வரமேஷ்:
இந்த வழக்கில் என் கட்சிக்காரருக்கு எதிராக அரசுத்தரப்பு முன்வைத்த ஆவணங்களின் பிரகாரம், எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் சட்ட ரீதியான முகாந்திரம் இல்லை என்று கூறி டிஸ்சார்ஜ் பெட்டிஷன் ஃபைல் பண்ணிருக்கோம். நேரடி சாட்சியமாக இல்லாமல், எல்லாம் கேள்விநிலை சாட்சியங்களாக இருக்கின்றன. சாட்சிகளின் வாக்குமூலத்திலும் அடிப்படை முகாந்திரம் இல்லை என்பதே எங்களுடைய வாதம். நிர்மலாதேவி எந்த ஒரு வாக்குமூலமும் “சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கொடுக்கவில்லை. கட்டாயத்தின் பேரில் வாங்கப்பட்ட வாக்குமூலம்தான் என்பதை அவருடைய வழக்கறிஞரே கூறியிருக்கிறார். வெளியில் வேண்டுமானால் நிர்மலாதேவி அந்த ஆடியோவில் பேசியது நான்தான் என்று ஒத்துக்கொண்டிருக்கலாம். வெளியில் அவர் பேசிய எதற்கும் நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால், நீதிமன்றத்தில் நிர்மலாதேவி அப்படி எதுவும் ஒத்துக்கொள்ளவில்லை.
உயர்நீதிமன்றத்தைப் பொறுத்தமட்டிலும் பெயில் மனு முடிவுக்கு வந்துவிட்டது. அந்த உத்தரவிலேயே அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டிருக்கிறது உயர்நீதிமன்றம். ஒரு வழக்கறிஞர் என்ற முறையில், நீதிமன்றத்தின் கருத்தை மீறி நான் ஒரு கருத்தை தெரிவிக்க முடியாது. உயர் நீதிமன்றத்தின் பார்வையில் இது ஒரு சென்சிடிவ் கேஸ். பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கல்லூரி மாணவிகள் என்பதால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்வாக்குமிக்கவர்கள் என்பதால், இவர்கள் பிணையில் வெளிவந்தால், சாட்சிகளைக் கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவர்களை சிறையில் வைத்தே வழக்கை நடத்தவேண்டும் என்ற முடிவை உயர் நீதிமன்றம் எடுத்திருக்கிறது. சில சென்சிடிவ் வழக்குகளில், வெளியில் நீதிமன்றத்துக்கே வராமல், சிறையில் வைத்து நடத்திய முன்மாதிரிகளும் உண்டு. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை கொடுக்கக்கூடிய அளவுக்கு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கை ஆறு மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.
நிர்மலாதேவியின் வழக்கறிஞர் மகாலிங்கம்:
இந்த வழக்கு குறித்தும், மேதகு தமிழ்நாடு கவர்னர் குறித்தும் சில வார இதழ்களில் தவறாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. நாளிதழிலும் வார இதழ்களிலும் நிர்மலாதேவி குறித்து வரும் செய்திகள் அனைத்துமே பொய். என் கட்சிக்காரரின் வேண்டுகோள்படி, நாளிதழ் மற்றும் வார இதழ்களில் வந்த செய்தியை முற்றிலுமாக மறுக்கிறேன். சி.பி.சி.ஐ.டி. போலீஸார் உள்நோக்கத்துடன் வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர். அப்படிப்பட்ட வாக்குமூலத்தை தவறுதலாகத் திரித்து, வார இதழ்களிலும் நாளிதழிலும் வரும் செய்திகளைக் கண்டிக்கிறோம்; மறுக்கிறோம். என் கட்சிக்காரரின் குரல்மாதிரி தடயவியல் சோதனைக்குப் போய், அந்தமாதிரி ஒரு கன்டென்ட்டே இல்லை என்று நீதிமன்றத்தில் சி.டி. தாக்கல் ஆகியிருக்கிறது. அந்த ஆடியோவில் உள்ள குரல் நிர்மலாதேவியினுடையதுதான் என்று இன்னும் நிரூபணம் ஆகவில்லை.
குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரமே இல்லை என்று கூறுகிறார் ஒரு வழக்கறிஞர். உண்மைக் குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கவே இல்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் இன்னொரு வழக்கறிஞர். ஆடியோவில் உள்ளது நிர்மலாதேவியின் குரலே இல்லை என்று மறுக்கிறார் மற்றொரு வழக்கறிஞர்.
நிர்மலாதேவி வழக்கு திசைமாறிப் பயணிக்கிறது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
-சி.என்.இராமகிருஷ்ணன், அண்ணல்
படங்கள்: ராம்குமார்