டில்லியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, பாலியல் வல்லு றவுக்காளாக்கப்பட்டு எட்டாண்டுகள் கடந்துவிட்டன. கீழ் கோர்ட்டுகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட, மேல் முறையீடு செய்யப்பட்டு உச்சநீதி மன்றமும் 2017, மே 5-ல் குற்ற வாளிகள் நால்வருக்குமான தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.
2020, ஜனவரி 22 ஆம் தேதி முதல் முறையாக நால்வருக்கும் தூக்கிலிட தேதி குறிக்கப் பட்டது. அதேசமயம் தூக்குக்குச் செல்லவிருக்கும் குற்றவாளிகள் தரப்பு ஒவ்வொரு நபராக தனித்தனியாக ஜனாதிபதிக்கு கருணை மனு, நீதிமன்ற நடவடிக் கைகள் மூலமாக தூக்கைத் தள்ளிப்போடுவதற்கான யுக்தி களைக் கையாள ஆரம்பித்தது.
இரண்டாவது கட்டமாக பிப்ரவரி 17-ல் குற்றவாளிகளைத் தூக்கில் போட புதிதாக தேதிகுறித்தது நீதிமன்றம். ஏற்கெனவே மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மிச்சமிருந்த பவன்குப்தா கருணை மனு ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தன. எனினும் குடியரசுத் தலைவர் அந்த மனுவைப் பார்வையிட்டு உடனடியாக நிராகரித்து தனது முடிவை வெளிப்படுத்தினார்.
இந்தத் தருணத்தில் கருணை மனு அனுப்பியவரைத் தவிர மற்றவர்களைத் தூக்கிலிட வேண்டுமென ஒரு கோரிக்கை எழுந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பிலிருந்தோ ஒரு குற்றத்திற்கு ஒரே விதமான தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒரே சமயத்தில்தான் தூக்கிலிடவேண்டுமென சட்ட விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டதால் அப்போது அவர்களது தலைதப்பியது. மூன்றாவது முறையாக வரும் மார்ச் 3-ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையும் சட்டத்தின் துணையுடன் தாண்டிவந்த நிலையில், நான்காவது முறையாக மார்ச் 20-ஆம் தேதி தூக்குக்கு நாள் குறிக்கப்பட்டது.
குற்றவாளிகள் தரப்பிலிருந்து அதனைத் தவிர்க்க பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டன. நான்கு பேரில் மூவர் திரும்பவும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு சமர்ப்பித்தனர். அதனைச் சுட்டிக்காட்டி தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிவைக்க வேண்டுமென டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக்கொண்டு திகார் சிறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேசமயம் நிர்பயா குற்றச் சம்பவம் நடை பெற்றபோது தான் மைனர் என குற்றவாளிகளில் ஒருவரான பவன்குப்தா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மற்றொரு குற்றவாளியான முகேஷ்குமார் சிங், பலாத்காரம் நடந்த 2012 டிசம்பர் 12 ஆம் தேதி தான் டெல்லியிலேயே இல்லையென்றும், அதனால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென்றும் டெல்லி விசாரணை நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கும் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மற்றொரு குற்றவாளியான அக்சய்குமார் சிங்கின் மனைவி புனிதா தேவி, பீஹார் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். கற்பழிப்பு குற்றத் துக்காக கணவர் தூக்கில் போடப்பட்டதால் விதவை யானவர் என்று பெயர் வாங்க விருப்பமில்லை. எனவே அக்சய்குமார் தூக்கிலிடப்படும்முன் இந்த வழக்கை உடனடியாக விசாரித்து விவாகரத்து வழங்க வேண்டுமென்று கோரினார். விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்க குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மேலாகும் என்பதால், இதுவும் தூக்கைத் தாமதப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைதான்.
இதற்கிடையில் கடந்த மார்ச் 17 முதலே திகார் சிறை நிர்வாகம் குற்றவாளிகளைத் தூக்கிலிட ஆயத்தமானது. தூக்கில் போடும் பணியாளர் அதற்கான ஒத்திகைகளை மேற்கொண்டார். குற்ற வாளிகளின் எடைக்குச் சமமான மூட்டைகளைத் தூக்கிலிட்டு கயிறு எடை தாங்குகிறதா என பரிசோதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்களா என நிர்பயாவின் பெற்றோர்களும், நிர்பயா ஆதரவாளர் களும் கடைசிவரை எதிர்பார்க்க, சட்டத்தின் இடைவெளிகளைக் கண்டறிந்து அதற்கிடையில் அவர்களை நழுவவைக்க குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் மும்முரம் காட்டினர்.
இது ஒருபுறமென்றால் 2019 பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ஒரு பிரம்மாண்டமான பாலியல் முறைகேடு வெளிப்பட்டு தமிழக மக்களை அதிர்ச்சி யடைய வைத்தது. பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவியொருவர், சபரிராஜன் மற்றும் நண்பர்கள் மீது புகார்கொடுக்க, மெல்ல மெல்ல நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம் அம்பலமானது.
நக்கீரன் இவ்விவகாரத்தில் காட்டிய தனிக் கவனம் மாநில அளவிலான மக்களின் எழுச்சிக்கும் பின் சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்படவும் காரணமாக அமைந்தது. ஏப்ரல் 26-ஆம் தேதி சி.பி.ஐ. முறையாக இந்த வழக்கைக் கையிலெடுத்தது. இந்நிலையில் மாவட்ட மகளிர் நீதிமன்ற பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு விரைவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கி லேயே தண்டனை நிறைவேற்ற இத்தனை தடைகள் குறுக்கே வரும்நிலையில், இன்னும் விசாரணை நிலையிலேயே இருக்கும் பொள்ளாச்சி வழக்கில் எப்ப தீர்ப்பு வந்து… எப்ப குற்றவாளிகள் தண்டனை அனுபவிச்சு… என முணுமுணுக்கிறார்கள் "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே' என்ற எண்ண முடையவர்கள்.
-க.சுப்பிரமணியன்