சென்னை கிண்டி யில் அமைந்துள்ள, ஆசியாவின் பழமைவாய்ந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமக்கொடூரன்களுக்கு சென்னை, டெல்லி எல்லாம் ஒன்றுதான் என்பதுபோல இச் சம்பவம் அமைந்துள் ளது.
சென்னையின் மையப்பகுதியிலுள்ள இந்த பல்கலைக்கழகம், எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பொறியியல் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரும், அதே கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஒருவரும் பல்கலைக்கழக மெஸ்ஸில் உணவருந்திவிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வகக் கட்டடத்தின் பின்புறத்தில் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/annauniver-incendent.jpg)
அப்போது அவர்களை தனது செல்போனில் படம்பிடித்தபடியே வந்த ஒரு மர்ம நபர், அந்த மாணவரை சரமாரியாகத் தாக்கியதுடன், இருவரும் தனிமையில் அத்துமீறிய வீடியோவைக் காட்டி, நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் சமூக வலைத்தளத்தில் இதைப் பதிவிடுவேன். இந்த வீடியோவை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பி உங்களை சஸ்பெண்ட் செய்ய வைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
அந்த மாணவனை மிரட்டி அங்கிருந்து துரத்திவிட்டு மாணவியை பலாத்காரம் செய்ய முற்பட, அந்த மாணவி மாதவிடாய் உள்ளதாகவும், தன்னை விட்டுவிடும்படியும் கெஞ்சியுள்ளார். அதை நம்பாத அந்த மர்ம நபர் ஆடைகளைக் களைந்து அம்மாணவிக்கு மாதவிடாய் உள்ளதைத் தெரிந்துகொண்டபின் அம்மாணவியை வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். அதையும் அந்த மாணவிக்குத் தெரியாமல் செல்போனில் ரெக்கார்ட் செய்துள்ளான். "நான் அழைக்கும்போதெல்லாம் நீ வரவேண்டும், இல்லையென்றால் இதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துவிடுவேன்'' என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
விடுதிக்குத் திரும்பிய மாணவி, சக மாணவியரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். தோழி ஒருவரின் அறிவுரையின் பேரில் நடந்த சம்பவத்தைப் பற்றி பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளார் மாணவி. அவர்களின் வழிகாட்டுதல்படி, பல்கலைக்கழக நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார்கொடுக்கப்பட்டது. புகாரைப் பெற்ற ஆய்வாளர் பத்மாதேவி, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கினார்.
பல்கலைக்கழக மாணவியின் விவகாரம் என்பதால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருணுக்குத் தகவல் தரப்பட்டது. கமிஷனரின் அதிரடி உத்தரவின் பெயரில் கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் நேரடியாகக் களத்திலிறங்கி மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளியைப் பற்றி தகவல் சேகரித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ மனையில் அனுமதித்துவிட்டு, இந்த சம்பவம் நடந்தபோது மாணவியுடன் இருந்த அந்த மாணவனிடம் குற்றவாளி பற்றி விசாரித்தனர். பிறகு, பல்கலைக்கழக வளாகத்தில் சம்பவம் நடந்தபோது பதிவான சி.சி.டி.வி. பதிவுகளையும் ஆய்வுசெய்தனர்.
பல்கலைக்கழகத்தில் கட்டட வேலை நடப்பதால் அங்கு கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகளை விசாரித்தனர். சம்பவம் நடைபெற்றபோது வெளியாட்கள் யார் வந்துசென்றார்கள் என்பதைப் பற்றியும் விசாரித்தனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் சிலரது பெயரை பல்கலைக்கழக செக்யூரிட்டிகள் கூறினார்கள். அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில், பிரியாணிக் கடை நடத்திவரும் ஞான சேகரனைக் காணவில்லை. உடனே சைபர் போலீசாரின் உதவியுடன், சம்பவம் நடந்தபோது அவனுடைய செல்போன் டவர் லொகேஷனை பற்றி தகவல் சேகரித்தனர்.
பிறகு ஞானசேகரன் வீட்டுக்குச் சென்று அவன் தம்பியைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் ஞானசேகரனின் தம்பி "அண்ணன் இரண்டு நாட்களாகவே சரியாக வீட்டுக்கு வரவில்லை'' என்று கூற, சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் ஞானசேகரனை போலீசார் பிடித்தனர். வீடியோ கால்மூலம் பாதிக்கப்பட்ட மாணவி குற்றவாளியை அடையாளம் காட்டினார்.
விசாரணையில், ஞானசேகரன் ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புள்ளவன் என்பது தெரியவந்தது. மெரினா பீச்சில் போலீஸ் எனக் கூறி காதலர்களிடம் செக்ஸுவலாக அத்துமீறியது, காதலர்களிடம் இருந்து செல்போன், தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற வழக்கு, மகாபலிபுரத்தில் ஒரு பலாத்கார வழக்கு உட்பட 15 வழக்குகள் இவன்மீது உள்ளன. இதே பல்கலைக் கழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு தனிமையிலிருந்த மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரமும் நடந்துள்ளது.
கடந்த சில வருடங்களாகவே இவன் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள செக்யூரிட்டி களுக்கு இலவசமாக பிரியாணி கொடுத்துப் பழகி, பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு வி.ஐ.பி.போல வலம்வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நான்கு பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்து ஞானசேகரனை போலீசார் அழைத்துச் செல்லும்போது வழக்கம்போல பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை காலுக்கு மாவுக்கட்டு போடப் பட்டுள்ளது. ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்துவிசாரித்தால் இவனால் எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், வேறு எந்தெந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள் ளான் என்பதும் வெளியேவரும் என்று போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.
ஞானசேகரன் தி.மு.க. பிரமுகர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், “"அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். ஞானசேகரன் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது'’என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t112415809z-arv-2026-02-07-16-54-11.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/annauniver-incendent-t.jpg)