நீலகிரி மாவட்டத்தில் கோஷ்டிப்பூசலால் ஆளுங்கட்சியினர் முட்டிமோதும் சூழலில், வரும் ஏப்ரல் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குன்னூர் வரவுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பல்லாண்டுகளாக தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்த முபாரக் மீது புகார்கள் சென்றதால், கடந்த மாதம் அவரிடமிருந்த மா.செ. பதவியைப் பறித்த தலைமை, அதே சமூகத்தை சேர்ந்த கே.எம்.ராஜூவுக்கு அப்பதவியை வழங்கியது. முபாரக்கிடமிருந்து தி.மு.க. மா.செ. பதவி பறிக்கப்பட்டதிலிருந்து நீலகிரி மாவட்ட தி.மு.க.வில் பல கோஷ்டிகள் முளைத்துள்ளன. கடந்த தேர்தலில் கோஷ்டிப்பூசலை சமாளிக்க முடியாமல்தான் ஊட்டி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை அத் தொகுதியைப் பெற உடன்பிறப்புகள் காய் நகர்த்துகிறார்கள். முபாரக் ஆதரவாளரான மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார், தற்போதைய மா.செ.வுடன் நெருக்கமாகி தனிக்கோஷ்டி உருவாக்கியுள்ளார். ஊட்டி நகரச் செயலாளராக இருக்கும் ஜார்ஜ், முன் னாள் அமைச்சர் ராமச்சந்திரனின் ஆதரவாள ராக தனி கோஷ்டியை நடத்துகிறார். அதேபோல் முன்னாள் மா.செ. காந்தல் ராஜன் மகன் இளங்கோவனும் தனிக்கோஷ்டி நடத்துகிறார். தற்போதைய குன்னூர் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீதான அதிருப்தியில் அவரது கட்சிப்பதவி கடந்தாண்டு பறிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுனிதா, எம்.எல்.ஏ. சீட்டை பெறுவதற்காக தனிகோஷ்டியாகச் செயல்படுகிறார். இத்தனை கோஷ்டிகளுக்கிடையே, ராயன் (எ) ராயன் காக்கா என்ற காண்ட்ராக்டர் கையில் மாவட்ட தி.மு.க. இருப்பதான செய்தி பரபரப்பைக் கிளப்புகிறது..
கடந்த 2021 தேர்தலில், முபாரக் தனது ஆதர வாளரான காசிலிங்கத்துக்கு கூடலூர் சட்ட மன் றத் தொகுதியை வாங்க, அத்தேர்தலில் கோஷ் டிப் பூசலால் அ.தி.மு.க.வின் பொன்.ஜெயசீலன் வெற்றிபெற்றார். இம்முறை காசிலிங்கத்தை போலவே மாஜி எம்.எல்.ஏ.வான திராவிட மணியும் தனது கோஷ்டியுடன் வலம்வருகிறார்.
நீலகிரி(தனி) நாடாளுமன்ற உறுப்பினராக ஆ.ராசா உள்ளார். அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி பொதுத்தொகுதியாக மாறவுள்ளது. இதனால் கூடலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் தனது அக்கா மகன் பரமேஷ்குமாரை வெற்றி பெற வைத்து அமைச்சராக்கி, தனது செல்வாக்கை நீலகிரியில் நிலைநிறுத்த காய்நகர்த்தி வருகிறார் ஆ.ராசா.
இந்நிலையில், கூடலூர் தொகுதி தி.மு.க.வினரை கையில் வைத்துக்கொண்டு ஏ கிளாஸ் காண்ட்ராக்டராக ராயன் வலம்வருகிறார். அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினராக இருந்த ராயன், எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல கோடி ரூபாய் காண்ட்ராக்ட் பணிகளைச் செய்துவந்தார். சில புகார் களால் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட ராயன், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முபாரக் மூலம் தி.மு.க.வில் சேர்ந்தார்.
இவர் தி.மு.க.வில் சேர்ந்த வுடன், தேவாலய பகுதியில் செயல்பட்டுவந்து மூடப்பட்ட தார் பிளாண்ட், வைத்தமின் "ப' செல்வாக்கால் மீண்டும் திறக்கப்பட்டது. அப்போதைய மா.செ. முபாரக் செல்வாக்கால் கூடலூர் பகுதியில் பல கோடி ரூபாய் காண்ட்ராக்ட் பணியை எடுத்துச் செய்ததில் அவர்மீது புகார்கள் எழுந்ததால் ப்ளாக் லிஸ்ட்டில் கொண்டு வரப் பட்டார். இதேபோல் எக்கச்சக்க புகார்கள் வந்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார். எனவே தன்னை ப்ளாக் லிஸ்ட்டில் வைத்த நெல்லியாளம் நகராட்சி மன்ற சேர்மன் சிவகாமியின் பதவியைப் பறிக்க பல்வேறு உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த சேர்மன் சிவகாமி, கணவனையிழந்து, சொந்த வீடுகூட இல்லாமல், தனது குழந்தையுடன் வசித்துவருகிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் வெற்றிபெற்றவர். இந்நிலையில், முன்னாள் சேர்மனான காசிலிங்கம், சிவகாமியிடம் தவறாக நடக்கமுயன்ற சம்பவத்தை ரெக்கார்ட் செய்து, கனிமொழி எம்.பி.யிடமே புகாரளித் ததால், சிவகாமியை பழிவாங்க காசி லிங்கமும் ராயனுடன் சேர்ந்துகொண்டார்.
சேர்மன் சிவகாமிக்கு ஆதரவாக இருந்த நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், பணபலத்தால் ராயனிடம் அடைக்கலமானார். இவர்கள் ஒன்றுசேர்ந்து சிவகாமிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர சதி வேலைகளைச் செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக கமிஷனர் முனி யப்பனும் சேர்ந்துள்ளார். இவ்விவகாரத்தை ஆ.ராசாவிடம் சிவகாமி கொண்டுசெல்ல, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவியாவிடம் பேசி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறுத்திவைத்தார்.
இந்நிலையில், சேர்மன் சிவகாமிக்கு மர்ம நபர் மூலம் ஒரு பாக்ஸில் பணத்தை அனுப்பி, அதன்மூலம் விஜிலன்ஸ் அதிகாரிகள் மூலம் அவர் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டு எஃப். ஐ.ஆர். போடப்பட்டது. இதைக் காரணமாக்கி சிவகாமியை ராஜினாமா செய்யச்சொல்லி கோஷ்டி அரசியல் செய்கிறார் ராயன். சிண்டிகேட் மூலமாக ராயன் கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 50 கோடிக்கு மேல் காண்ட்ராக்ட் பணிகளை எடுத்துள்ளபோதும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தொகையை சரியாக பட்டுவாடா செய்யவில்லையாம். அதோடு, சிவகாமிக்கு ஆதரவாக ஆ.ராசா செயல்படுவதால், ராசாவின் மைத்துனருக்கு கூடலூர் சீட்டு கிடைத்துவிடக்கூடாதென்று ராயன் காய்நகர்த்துகிறாராம். இந்நிலையில், நீலகிரி செல்லும் முதல்வரிடம் பட்டியலின உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றுசேர்ந்து புகார் மனுவை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.