ஐந்து நாளைக்கு ஒரு தடவை என முறை வைத்தது போல, 15 நாட்களில் தொடர்ச்சியாக மூன்று வெவ்வேறு இடங்களில், வாளை வைத்து மிரட்டி, நகைகளையும், பணத்தையும் கொள்ளை யடித்து எஸ்கேப்பாகியுள்ளது கொள்ளையர்கள் டீம். எங்கு துவங்குவது? எப்படி மீட்பது? எப்படி தடுப்பது? என விழிபிதுங்கி நிற்கிறது திருச்செந்தூர் காவல்துறை துணைச்சரகம்.
கோவில், தாலுகா, குலசேகரப்பட்டணம், ஆறுமுகநேரி மற்றும் ஆத்தூர் ஆகிய ஐந்து காவல் நிலையங்களை உள்ளடக்கியது திருச்செந்தூர் காவல்துறை துணைச் சரகம். இங்கு தான் முறை வைத்தது போல் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றன. வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் வீட்டுடன் இணைந்த பணிமனை. தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவந்தி நகரில் உள்ளது. வீட்டின் உரிமையாளரான சதீஷ், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி குடும்பத்துடன் சென்னை சென்றிருக்கின்றார். மறுநாள் வழக்கம்போல் பணிக்கு வரும் பெண்கள் அங்கு வரும்பொழுது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவர, தகவல் காவல்துறைக்கு சென்றது. இதே வேளையில், வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவை பரிசோதித்ததில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண், மங்கி குல்லா, பெண்கள் அணியும் நைட்டியையும், கையுறையையும் அணிந்து, கையில் இரும்புக் கம்பியுடன் வீட்டின் மாடிக்கு சென்று, அங்குள்ள கதவை உடைத்து பீரோவிலுள்ள ரொக்கப் பணத்தை திருடியதோடு மட்டுமில் லாமல், கீழ்த்தளத்தில் உள்ள வீட்டிற்கு வந்து, முன்பக்கக் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவை உடைத்து, பீரோவில் இருந்த ரொக்க பணம், தங்க நகைகளை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. நைட்டி அணிந்து திருட்டில் ஈடுபட்டது காவல்துறையை ஆச்சர்யப் படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த சம்பவமோ, திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது. இப்பகுதியிலுள்ள கமலா கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன். ஐ.டி.ஐ.யில் பயிற்றுனராக பணிபுரிந்துவரும் இவர், தனது குடும்பத்துடன் திருநெல்வேலியில் நடந்த கோயில் கொடை விழாவிற்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருக்கின்றார். அப்போது வீட்டின் உள்பக்கக் கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டு பீரோவிலுள்ள நகைகளும், ரொக்கமும் திருடப்பட்டிருப்பதும், திருட்டில் ஈடுபட்ட முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள், பின்பக்க கதவைத் திறந்து சுவர் ஏறிக் குதித்து தப்பிச் சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
இது இப்படியிருக்க, தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்முகபுரத்தி லுள்ள வீட்டில், பெண்கள் குழந்தைகளுடன் இருந்த நிலையில், வாளையும், அரிவாளையும் காட்டி மிரட்டி, நகையையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். "கணவர் தனியார் விடுதி ஒன்றில் வேலை செய்துவரு கிறார். அன்று அவருக்கு நைட் ஷிப்ட் வேறு. என்னுடைய உறவினர்கள் (பெண்கள்) குழந்தைகளுடன் விடுமுறைக்காக வந்திருந்த நிலையில், இரவு 2.30 மணியளவில் பெரும் சத்தம் கேட்டு எந்திரிச்சோம். ஆனால், அதற்குள் 3 நபர்கள் முகமூடியணிந்து வீட்டிற் குள் வந்துவிட்டனர். கையில் வாள், அரிவாள் போன்றவற்றை வைத்து எங்களை மிரட்டி, நகைகளையும், பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டனர். போகும்போது எங்களுடைய செல்போனையும் பறித்துச் சென்றுவிட்டனர். எங்களைப் பொறுத்தவரை உயிரோடு விட்டால் போதும் என்கிற நிலை'' என்றார், நகையையும், பணத்தையும் பறிகொடுத்த சுதாசெல்வி.
மற்றொரு சம்பவத்தில், திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினம் கிளை அஞ்சலகத்தின் வெளிப்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்துள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அதிலிருந்த 19,000 ரூபாய் தப்பியது. மேலும், கடந்த ஒரு மாதத்தில் சுமார் 20 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது. செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பல்வேறு திருட்டுக் கொள்ளைச் சம்பவங்களுக்கு சி.சி. டி.வி. காட்சிகள் இருந்தும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறிவரு கின்றனர்.
இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் கிரீஷ் குமாரோ, "வீரபாண்டி பட்டணம் என்றாலே திருடர்களின் சொர்க்கபுரி எனக் கூறலாம். அந்தளவிற்கு குற்றச்சம்பவங்கள் அங்கு அதிகம். சமீபத்தில் மருத்துவமனை ஊழியர் ஒருவரின் குறிஞ்சி நகரிலுள்ள வீட்டிற்குள் இரவில் நுழைந்த கொள்ளையர்கள், கை கால்களைக் கட்டிப்போட்டு, செல்போன் மற்றும் நகை, பணத்தை கொள்ளையடித்தது இங்கு பதற்றத் தை உண்டாக்கியது. அது போக வரிசையாக இப்பொழுது கொள்ளைச் சம்பவங்கள். காவல்துறையில் ரோந்துப் பணி என்பதே இங்கு இல்லை. அது போக, டூவீலர் திருட்டு அதிகம். அதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால், ரெக்கவரி காண்பிக்கணும் என்பதால் அதனை வாங்குவது இல் லை. காவல்துறை யினர் மெத்தனத் தால், கொள்ளையர்களின் அட்டூழியத்தால் நித்தமும் பயத்தோடு தான் மக்கள் இருக்கின்றார்கள்'' என்கிறார் அவர்.
இது இப்படியிருக்க, சண்முகபுரத்தில் கொள்ளையடித்து எடுத்துச் சென்ற மொபைல் எண்களின் சிக்னல் ஒன்று தளவாய்புரத்திலும், மற்றொன்று சீனன் தோப்பிலும் காண்பித்துள்ளதால், அந்தப் பகுதியில் கவனம் செலுத்தி வருவதாகவும், கடந்த 2ஆம் தேதியன்று ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்குட்பட்ட வீடு ஒன்றில் ரூ.2.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி வரை சென்று, கொள்ளையர்கள் சதீஷ், சச்சின் ஆகியோரைக் கைது செய்து, பணத்தை மீட்டுள்ளதையும் பெருமையாகப் பதிவு செய்கிறது திருச்செந்தூர் காவல்துறை துணைச்சரகம்.
திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜோ, "ரோந்துப் பணிக்கென ஒரு இரவு அதிகாரி, பீட் அதிகாரி மற்றும் பைக் ரோந்து அதிகாரி எனக் கண்டிப்பாக உண்டு. அவர்கள் வேலையை இன்றுவரை சரியாகச் செய்து வருகின் றார்கள். சண்முகபுரம் சம்பவத்தின்போது, அதற்கு முந்தைய அரை மணி நேரத்தில் அந்தப் பகுதியை ரோந்து செய்துள்ளனர். எனினும், அதனை அதிகப்படுத்த முயற்சிக்கின்றோம். நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், இந்த மாதங்களில் இங்கு அதிகளவில் கோவில் கொடை விழாக்கள் உண்டு. அதில் ஏதேனும் பிரச்சனை நடைபெற்றுவிடக்கூடாது என அதிக கவனம் செலுத்துகின்றோம். மற்றொன்று, திருடர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்களாக வந்து தங்கி, நோட்டமிட்டுத் திருடுகிறார்கள். கமலா கார்டன் கொள்ளையின்போது சிக்கிய துருப்பின்படி, திருடிவிட்டு அந்த திருடன் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளான். அதுபோல், நைட்டி திருடனையும் நெருங்கிவிட்டோம். துணைச்சரகத்திற் குட்பட்ட பல இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி வருகின்றோம். விரைவில் கொள்ளையர்கள் இல்லாத துணைச்சரகமாக திருச்செந்தூர் மாறும்'' என்றார் நம்பிக்கையுடன். அச்சமின்றி வசிக்க வேண்டுமென்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு!