நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தி.மு.க.மீது அடுத்தடுத்து மூன்று தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கரூர் தொகுதியில் ஜோதிமணி பிரச்சாரத்தில் குண்டர்களை அனுப்பி ஏற்படுத்திய இடையூறு. மூன்றாவதாக தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனை.
பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா தூத்துக்குடி பிரச்சாரத்திற்கு வந்திருந்த பொழுது, ""எப்படியாவது நாங்கள் வெற்றிபெறுவோம். கடலிலும் தாமரையை மலர வைப்போம். அதற்காக எந்த எல்லைக்கும் போவோம்'' என தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரும், தமிழக பா.ஜ.க. தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். அந்த எப்படியாவது என்பதன் அர்த்தம் இதுதானா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. வீடு, அலுவலகம் இரண்டும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையால் குறிவைக்கப்பட்டது தெரியாமலேயே, வைகோவுடன் இணைந்து கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தார் கனிமொழி.
வீடு திரும்பிய கனிமொழி மகனுடன் பேசிவிட்டு, நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட ஆலோசனைக்காக காத்திருக்க, அடுத்த அறையிலோ தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் மனுராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில்தான் இரவு 08.15 மணியளவில் திடுமென 5 கார்களில் 24 நபர்கள் கொண்ட குழு எந்த முன்னறிவிப்புமின்றி வந்திறங்கியது. "வருமானவரித்துறையினர்' என அறிமுகப்படுத்திக்கொண்டு அங்குள்ள அறைகளை அங்குலம் அங்குலமாக சோதனையிடத் துவங்கியது. துணை ஆணையர் தலைமையிலான மதுரை டீம் ஒன்று, உதவி ஆணையர் தலைமையிலான திருநெல்வேலி டீமுடன் உள்ளூர் தேர்தல் பார்வையாளர் தரப்பிலான டீமும் இணைந்திருக்க மொத்தமாக 24 நபர்கள் வந்தனர்.
அதுவும் வேலூர் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்ட அரைமணி நேரத்தில் இங்கு ரெய்டு வந்துள்ளனர். ஏதாவது புகார் வந்தால் அதற்கு முகாந்திரம் இருக்கிறதா என செக் செய்த பிறகே ரெய்டிற்கு வருவார்கள் அதிகாரிகள். ஆனால் கனிமொழி வீட்டில் நடந்த ரெய்டுக்கு அப்படியெதுவும் இருந்தததாகத் தெரியவில்லை. "இங்கு என்ன இருக்கின்றது? உங்களுக்கு யார் தகவல் கூறினார்கள்?' எனக் கேட்டால், “"போன் வந்துச்சு.. வந்தோம்' என அலட்சியமாகப் பதில் கூறினார்கள்.
""தோல்வி பயத்தால் இதுபோல் மிரட்டிப் பார்க்கின்றது மத்திய அரசு'' என்கிறார் வழக்கறிஞரும், தலைமைத் தேர்தல் ஏஜென்டுமான அன்புநிதி. தூத்துக்குடி குறிஞ்சி நகரில் அடுத்தடுத்த இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார் கனிமொழி. மொத்தமே ஆறு அறைகள் கொண்ட அந்த வீட்டினை ஸ்கேன் செய்யாத குறையாக சலித்தும் எவ்வித பணமும் கிடைக்கவில்லை வருமானவரித் துறையினருக்கு! ரெய்டு தகவல் தெரிந்து தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் வீட்டின் முன் குவிந்ததுடன், ஆளும் அரசிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும், தமிழிசைக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பத் தொடங்கினர். அப்போது தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், ஜோயல், முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்துசேர்ந்தனர். ""வருமான வரித்துறை கைப்பற்ற ஒன்றுமில்லை.. ஆனால், ஏதாவது வைத்துவிட்டு இங்கிருந்து எடுத்ததாகக் கூறலாம். கொஞ்சம் கவனமாக இருங்கள்'' என அனிதா கூற உஷாராயினர் வந்தவர்கள்.
சோதனையிட்டவர்களுக்கு, கலைஞர் எழுதிய "நெஞ்சுக்கு நீதி' புத்தகங்கள் 40 கிடைத்ததுதான் மிச்சம். ""என்ன கிடைத்தது? கிடைத்ததைப் பட்டியிலிடுங்கள்.. நாங்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்திடுகிறோம்''’என கனிமொழி தரப்பு கேட்க, வருமான வரித்துறையினர் வேறுவழியில்லாமல் "எதுவும் சிக்கவில்லை' என எழுதிக் கொடுத்துவிட்டு புறப்பட்டனர். ஆனால் யார் அனுப்பியது? எந்தத் தரப்பிலிருந்து புகார் என்பதை முதலில் அவர்கள் கூறவே இல்லை. பின்பு "மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரின்பேரில் இந்த ரெய்டு' என வருமானவரித்துறை கூறியது.
வாசல்வரை சென்ற வருமானவரித்துறையினர் பெரும்திரளாகத் திரண்டிருந்த தொண்டர்களைக் கண்டு தயங்க, ""இவர்களைக் கொண்டு போய் பாதுகாப்பாக விட்டுவிடுங்கள்'' என கனிமொழி கூறினார். பெரியசாமியின் மகன் ஜெகனின் காரிலேயே அனைத்து அதிகாரிகளும் ஏறி வெளியே சென்றனர். அடுத்த சில நிமிடங்களிலேயே பத்திரிகையாளர்களை சந்தித்த கனிமொழி, ""எங்களை பயமுறுத்துவதாக நினைத்துக்கொண்டு தூத்துக்குடியில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். தேர்தலை நிறுத்திவிடலாம் என்ற நப்பாசை. ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். ஐ.டி. துறையை கையில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கிறார்'' என்றார்.
-நாகேந்திரன்