சிறுமியை வைத்து பா-யல் தொழில் நடத்தப்படுவதாக சென்னை மாநகர காவல் விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து, சென்னை வளசரவாக்கம், ஜெய் நகர் 2வது தெருவிலுள்ள வீட்டில் சோதனை நடத்தியதில், 17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்த மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த 70 வயதான ராமச்சந்திரன் என்பவர் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில், தி.நகரை சேர்ந்த விபச்சார புரோக்கர் நதியா, 25 ஆயிரம் ரூபாய்க்கு அச்சிறுமியை அனுப்பிவைத்ததாகத் தெரியவந்தது.
இந்த செய்தியைப் பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தி-ருந்து தகவல் தரப்படாமலேயே பத்திரிகைகளில் செய்தி வெளியானது குறித்து விபச்சாரத் தடுப்புப் போலீசாரிடம் விசாரித்தபோது மழுப்பினர். சென்னையில் இப்படி விபச்சாரம் நடப்பது குறித்து போலீசாருக்கு ரகசியத்தகவல் அளித்தது, தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ.வாகும். இதனை முன்கூட்டியே கண்டறியாதது தமிழக போலீசாருக்கு தலைகுனிவாகும். கடந்த ஆண்டு, கிண்டி கவர்னர் மாளிகையருகே பெட்ரோல் குண்டுகள் வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் என்பவன், ஏற்கெனவே 2022ஆம் ஆண்டில் பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கிலும் கைது செய்யப்பட்டிருந்தான். கருக்கா வினோத்தை விபச்சார புரோக்கரான நதியா பலமுறை சிறையில் சென்று சந்தித்ததாகவும், ஜாமீனில் எடுத்ததாகவும் என்.ஐ.ஏ. அமைப்புக்கு தகவல் வரவே, நதியா வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த 5 செல்போன்களில் ஆய்வுசெய்ததில், 17 வயது சிறுமியை பா-யல் தொழி-ல் ஈடுபடுத்தியதோடு, 170க்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாசப்படங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர். உடனே தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜூவாலுக்கு, என்.ஐ.ஏ. தகவல் கொடுத்தது.
அதையடுத்து, விபச்சாரத் தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ராஜலட்சுமியின் தனிப்படை, நதியாவை கைது செய்து விசாரித்ததில், பிளஸ் டூ படிக்கும் தனது மகளின் தோழிகளை மாலுக்கு சினிமா பார்க்க அழைத்துச் சென்று, அவர்களுக்கு பரிசுப்பொருட்களை வாங்கிக் கொடுத்து, ஆசையைத் தூண்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. உடந்தையாக இருந்த நதியாவின் சகோதரி சுமதி, அவரின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன் உள்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தி.நகரிலுள்ள ஒரு சர்வீஸ் அபார்ட்மென்ட் மேனேஜரையும் கைது செய்தனர். விமானம் மூலம் மாணவிகளை விபச்சாரத்துக்காக அழைத்துச் செல்லும் பஞ்சாபி ஒருவரைத் தேடிவருகின்றனர்.
தமிழக போலீசிலுள்ள விபச்சாரத் தடுப்பு போலீசார், மற்றும் தமிழக உளவுத்துறையினர் தங்கள் கடமையைச் சரிவர செய்யாததால்தான் என்.ஐ.ஏ. மூலம் இந்த விபச்சார நெட்வொர்க் தெரியவந்துள்ளது. எனவே தமிழக போலீசாருக்கு இது தலைகுனிவாகும்.
-அரவிந்த்