(101) மக்களே முடிவு செய்வதுதான் மக்களாட்சி!

சோழ வள நாடு சோறுடைத்து என்பது பல கால உண்மை! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால்பெருவளத்தான் கட்டிய கல்லணை தஞ்சையைத் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் ஆக்கியது.

தமிழ்நாட்டை ஆண்டோர் பலர். நாம் சோற்றுக்கு அலையாமல் இருப்பதற்கு இரு மன்னர்கள் பெருங் காரணம். முதற் பெருங் காரணம் கரிகாலன்; அடுத்ததாக வீராணம் ஏரியைக் கட்டிய வீரநாராயணச் சோழன்.

மனித உடம்பில் நரம்புகள் போல, காவிரி நீரைத் தஞ்சை பரப்பு முழுவதும் கொண்டு செல்லும் பெரு, சிறு வாய்க்கால்கள் எண்ணில. எல்லாமே சோழ மன்னர்களின் கொடைதாம்.

Advertisment

நம்முடைய திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளைப் போல், அப்போதைக்கப்போது கிரைண்டரைக் கொடுப்பதும், மிக்சியைக் கொடுப்பதும், தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுப்பதும் என்று நெஞ்சுக்கும் தொண்டைக்குமாக இல்லாமல், தான் ஆளும் காலம் தாண்டி, ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வருபவர்களுக்கும், காலத்திற்கும் பயன்படும் வகையில் திட்டம் தீட்டிச் செயலாற்றியோர் நம் மன்னர்கள்.

pp

இப்போது தஞ்சைக் கழனி பாலைநிலமாகப் போகிறது. முப்போகம் பால் சுரக்கும் மார்பைத் துளைக்கப் போகிறார்கள்! ஐட்ரோ கார்பன் எடுக்கப் போகிறார்களாம்.

Advertisment

பழைய காலங்களில் பாளையக்காரர்கள் அரசருக்குத் தாக்கீதுகள் அனுப்பிக் கொண்டிருந்தது போல, நம்முடைய முதல்வர் எடப்பாடி "நான் சொல்லும் விண்ணப்பங் கேளே' என்று மனு மேல் மனுவாக மைய அரசுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

மைய அரசினர் கேளாக் காதினர். முதல்வரின் விண்ணப்பங்களோ மலைபோல் குவிகின்றன.

இந்த ஐட்ரோ கார்பன் திட்டத்தினால் தஞ்சை மட்டுமில்லை; மரக்காணத்திலிருந்து இராமேசுவரம் வரை நிலத்தடி நீர் பெருமளவுக்கு பாதிப்புக்குள்ளாகும் என்பது குறித்தும் மைய அரசு கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை.

உழவர்களின் குரல், தமிழ்நாட்டு மக்களின் குரல், தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகளின் குரல் எதுவுமே மைய அரசுக்கு கேட்கவில்லை.

மையப் பேரரசுக்கு வருவாய்ப் பெருக்கம் ஒன்றே குறி! தமிழ்நாடு தன்னுடைய நெற் களஞ்சியத்தை இழந்து விடுவது மைய அரசுக்கு ஒரு பொருட்டே இல்லை.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அடிமை ஆட்சி. "எசமான் பார்த்துப் போட்டுக் கொடுங்க' என்பதுதான் அதனுடைய ஒரே பாட்டு.

தி.மு.க பாராளுமன்றத் தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி! ஏறத்தாழப் பாராளுமன்ற வழிப்பட்ட தமிழ்நாட்டின் நலன்கள் அனைத்தும் மொத்தமாகத் தமிழ் மக்களால் தி.மு.க.விடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

ஏறத்தாழ தி.மு.க.வும் அ.தி.மு.க. போலத்தான்! தஞ்சாவூர் மக்களுக்கு "நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராகத்தான்; இருக்கிறோம்' என்று காட்டிக் கொள்ளத் தஞ்சை மண்ணுக்கே போய் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி விட்டு, "எடப்பாடிதான் இவ்வளவுக்கும் காரணம்' என்று நாமாவளி பாடி விட்டுத் தங்களின் அரசியல் கடமை முடிந்து விட்டதாகக் காட்டிக் கொள்பவர்கள்தான் தி.மு.க.வினர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த ஐட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கின்றன என்னும் நிலையில், செய்தியாளர்கள் மூலமாகத் தமிழ் மக்களுக்குச் செய்தி அனுப்புகிறார் சுற்றுச் சூழல் மைய அமைச்சர் சவடேகர்.

‘முன் வைத்த காலைப் பின் வைப்ப தில்லை. இந்தத் திட்டத்தில் பின்வாங்கலோ மறுபரிசீலனையோ கிடையாது’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் சவடேகர்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவே பிறப்பெடுத்தவர்கள் வேறு எந்த விதமாகச் சொல்வார்கள்?

pp

தாமிரபரணிக் கரையில் வேதாந்தாவின் காப்பர் கம்பெனி, காரைக்குடித் தேனாற்றங் கரையில் சம்பை ஊற்றின் மீது சல்பர் கம்பெனி, காவிரிப் படுகையில் ஐட்ரோ கார்பன் கம்பெனி என்று எல்லா நிலங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்துத் தமிழ்நாட்டை மைய அரசு பாலைவனமாக ஆக்குவதும், அந்தந்தப் பகுதி மக்கள் தீரா நோய்களுக்கு உள்ளாவதும்தான், நாம் இந்தியாவோடு இணைந்திருப்பதனால் அடைந்திருக்கும் பலன்கள்.

இதே வேலைகளைக் காங்கிரசும் செய்தது. கூக்குரல் அதிகமானால் கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் காங்கிரசு.

அந்த வகையில் இது போல் மக்களுக்குத் தீராத நோய்களையும்; அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை ஆதாரங்களை அழிக்கும் செயல்களையும்; கட்டுப்படுத்தும் வண்ணம் காங்கிரசு கொஞ்சம் ஈவு சோவோடு ஒரு சிறு திருத்தத்தைச் சுற்றுப்புறச் சூழல் சட்டத்தில் செய்தது. அது மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நடந்தது.

கார்ப்பரேட்டுகளோ கடவுள் நீங்கலாக யாரையும் விலைக்கு வாங்க வல்லவர்கள்.

மன்மோகன் காலத்துத் திருத்தச் சட்டம், இதுபோல் பெரிய திட்டங்களைச் செயற்படுத் தும் போது, அந்தப் பகுதி மக்களின் இசைவு இருந்தால் மட்டுமே (ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ஸ்ரீர்ய்ள்ன்ப்ற்ஹற்ண்ர்ய்) அதை மேற்கொண்டு செயற்படுத்த முடியும் என்னும் கட்டுப்பாட்டுக்குள் அரசை வைத்தது.

இது பெருமளவுக்கு மக்களுக்குப் பாது காப்பான சட்டம். இந்தச் சட்டம் இப்போது நடைமுறையில் இருந்தால் மோடி அரசால் தஞ்சைக் கழனியைப் பாலைவனமாக்க முடியாது. அதனால் மோடி அரசு முதலில் செய்த தந்திர வேலையே, மக்களின் இசைவோடுதான் நடைமுறைப் படுத்த முடியும் என்னும் சட்டப் பிரிவை நீக்கி விட்டதுதான்.

இந்த நாட்டைக் கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகளாக இருந்துதான் ஆட்சியாளர் கள் ஆள்கிறார்கள். அதுவும் மோடி ஆட்சிக்கு வந்ததும் அதானி போன்றவர்களின் தயவால்தான்! தொடர்ந்து நீடிப்பதும் அவரனையோர்; ஆதரவோடுதான்.

ஆகவேதான் அவசரம் அவசரமாக மோடி அரசால், ‘மக்களின் இசைவைப் பெறும் சட்டம்’ திரும்பப் பெறப் பட்டது.

ஆகவே எடப்பாடி மடல்கள் எழுதுவதும், இசுடாலின் தஞ்சையிலே போய் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்து வதும், தேர்ந்த நாடக மாகவே கருதப்படும்.

தமிழ்நாடு முழுவதும் கடையடைப்புச் செய்ய லாம்; மக்களைத் திரட்ட அஃது உதவும்.

மிக முதன்மையான பணி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சிகளையும், அனைத்து மாநில முதல்வர் களையும் சோனியா மூலம் ஒன்றாகத் திரட்டி, மக்களின் இசைவோடுதான் கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்னும் பழைய சட்டத்தைப் புதுப்பிக்குமாறு மோடி அரசுக்கு அழுத்தம் கொடுப்பது.

காங்கிரசு உட்பட எல்லா எதிர்க் கட்சிகளும் இதற்கு இசையும். எல்லா மாநில எதிர் முதல்வர்களும் இதற்கு உடன்படுவர். ஏனெனில் அவர்களின் மண்ணுக்கும் இது போன்ற கேடு வரும்.

நாடு முழுவதும் திரட்டப்படுவதால், மோடிக்கு தயக்கம் ஏற்படும்.

ஆனால் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் அழகிரியும், கராத்தே தியாகராசனும் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு குறித்து எதுவோ சொல்லிவிட்டார்கள் என்பதால், தில்லியில் சோனியா கூட்டிய குடியுரிமைச் சட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குச் சவுடாலாகப் போக மறுத்தவர்தானே இசுடாலின்.

குடியுரிமைச் சட்டத்திற்கு நாடு எவ்வாறு திரட்டப்பட்டதோ, அது போல் திரட்டப்பட வேண்டும். மக்களின் தேவைக்காகச் சோனியாவிடம் போவது குறைவானதில்லை. அரைகுறைகளையும், வெட்டிச் சவடாலையும் விட்டுவிடுவது நல்லது.

எந்த எதிர்க்கட்சி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தாலும், அந்த மாநிலத்திற் குப் போய், அந்த முதல்வருக்குப் பூங்கொத்துக் கொடுத்துப் பக்கத்தில் நின்று படம் எடுத்துக்கொண்டு வருவதால் மட்டும் இசுடாலின் தேசியத் தலைவராகி விட முடியாது.

இதுபோன்ற காரியங் களை முன்னின்று முனைப் புடன் செய்வதன் மூலம்தான் தேச மட்டத்திற்கு உயர முடியும்.

எடப்பாடியும் இசுடாலினும் பிற தலைவர்களும் நாட்டுக்கு ஒரு சிக்கல் என்றால் ஒன்றிணைய வேண்டும்.

பொது எதிரி மோடிக்கு எதிராக வரிந்து கட்ட எடப்பாடி தயங்கினால், அவரை மக்களிடம் வெளிப்படுத்தி விட்டு, மற்றுமுள்ளவர்கள் ஒன்றிணைந்து தேச அளவிலான பிற தலைவர்களை ஒழுங்கு படுத்தி, தஞ்சைக் கழனியை மட்டுமன்று; இதுபோல் பல கழனிகளுக்கு தீங்கு விளைவிக்கும் அந்தச் சட்டத்தையே தூக்கிவிட்டு "மீண்டும் ‘மக்கள் இசைவோடுதான்' என்று திருத்திப் பழைய சட்டம் நடைமுறைக்கு வரும் வண்ணம் முனைந்து செயலாற்ற வேண்டும்.

மக்களே முடிவு செய்வதுதான் மக்களாட்சி.

(தொடரும்)